4 மாநில தேர்தலில் படுதோல்வி… கவலையில் மூழ்கிய சோனியா… நெருக்கடிக்கு தள்ளும் தமிழக காங்.,!!

8 May 2021, 9:30 pm
congress cover - updatenews360
Quick Share

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாடு தவிர அசாம், மேற்கு வங்காளம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் காங்கிரசுக்கு சொல்லிக்கொள்கிற மாதிரி பெரிய அளவில் வெற்றி எதுவும் கிடைக்கவில்லை.

மேற்கு வங்காளத்தில் 2016 தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் 44 இடங்களை பிடித்தது. இந்த தேர்தலில் முதல் முறையாக முட்டை போட்டுள்ளது. கிரிக்கெட்டில், தான் சந்திக்கும் முதல் பந்திலேயே அவுட்டாகும் வீரரை ‘கோல்டன் டக்’ எடுத்தவர் என்று கேலியாக வர்ணிப்பார்கள். அதுபோன்ற பரிதாப நிலைமை நாட்டின் மிகப் பழமை வாய்ந்த தேசிய கட்சியான காங்கிரசுக்கு கிடைத்திருப்பது, மிகவும் அதிர்ச்சி தரும் விஷயம்.

Congress_Flag_UpdateNews360

இத்தனைக்கும் மேற்கு வங்காளத்தில் தங்களின் பரம விரோதிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. காங்கிரஸைப் போலவே அந்தக் கட்சிக்கும் ஒரு இடமும் கிடைக்கவில்லை. இப்படியொரு தோல்வியை மார்க்சிஸ்ட் மேற்கு வங்காளத்தில் சந்தித்ததும் இதுதான் முதல் முறை.

கேரளாவைப் பொறுத்தவரை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் நிகழ்ந்துவிடும். ஆனால் 44 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சாதனை முறியடிக்கப்பட்டு மார்சிஸ்ட் தலைமையிலான கூட்டணி, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டு விட்டது.

2016 தேர்தலில் 47 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கூட்டணி இந்தத் தேர்தலில் 41 இடங்களைத்தான் கைப்பற்றியுள்ளது. அதைவிட காங்கிரசுக்கு இந்தத் தேர்தலில் இன்னொரு அதிர்ச்சியும் சேர்த்தே கிடைத்துள்ளது. கடந்த தேர்தலில் 21 லட்சத்து 29 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியிருந்த பாஜக இந்த முறை சுமார் 26 லட்சம் வாக்குகளை பெற்று ஆச்சரியப்பட வைத்துள்ளது.

BJP_FLAG_UpdateNews360

புதுச்சேரியில் கடந்த முறை 21 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 14 இடங்களில் வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் போட்டியிட்ட இடங்கள் 15 ஆக குறைய, வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை இரண்டாக குறைந்துபோனது. இதுதவிர மாநிலத்தில் ஆட்சியையும் பறி கொடுத்து விட்டது.

புதுவையில் 9 இடங்களில் போட்டியிட்ட பாஜக 6 தொகுதிகளில் வென்று கூட்டணி ஆட்சிக்கும் அஸ்திவாரம் அமைத்துவிட்டது. காங்கிரசின் கோட்டை என்று இதுநாள் வரை வர்ணிக்கப்பட்டு வந்த புதுவை மாநிலத்திலேயே பாஜக ஆழமாக காலூன்றி இருப்பது, காங்கிரசுக்கு விழுந்த பலத்த அடியாகும்.

அசாமை பொறுத்தவரை, இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜக கூட்டணியிடம் மீண்டும் மண்ணைக் கவ்வி உள்ளது. இங்கு கடந்த தேர்தலைவிட காங்கிரசுக்கு பெரிய அளவில் முன்னேற்றமும் இல்லை பின்னேற்றமும் இல்லை.

தமிழ்நாட்டில் கடந்த முறை 41 தொகுதிகளில் போட்டியிட்டு 8 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் இம்முறை 25 இடங்களில் போட்டியிட்டு 18-ல் வெற்றி பெற்றது. இதிலும் ஒரு வித்தியாசம் உண்டு. மற்ற மாநிலங்களில் எல்லாம் காங்கிரஸ் தயவால்தான் பெரும்பாலும் அதன் கூட்டணி கட்சிகள் நல்ல பலனை அடைந்துள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுகவின் தயவால்தான், காங்கிரஸ் இந்த வெற்றியைப் பெற முடிந்தது என்று சொல்லலாம்.

Sonia_Gandhi_UpdateNews360

இந்த நிலையில் 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு முதல்முறையாக காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கொரோனா பரவலின் இரண்டாம் அலை குறித்தே அதிகம் குறிப்பிட்டார்.

அவர் கூறும்போது,”கொரோனா பெருந்தொற்று பரவல் அரசியல் வேறுபாடுகளை கடந்த ஒரு பிரச்சனை. நாம் அனைவரும் ஒன்று திரண்டு இதை எதிர்த்துப் போராட வேண்டும். இது பற்றி விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும்”என்று வேண்டுகோள் விடுத்தார்.

5 மாநில தேர்தல் பற்றி பேசும் போது,”இந்த முடிவு மிகவும் ஏமாற்றமளிக்கும் ஒன்றாக உள்ளது. இது நிச்சயம் நாம் எதிர்பாராதது. இந்த தோல்விகள் மூலம் நமக்குத் தேவையான படிப்பினைகளை நாம் எடுத்துக்கொள்ளவேண்டும். அதுதான் பின்னடைவில் இருந்து முன்னே செல்வதற்கான வழியாகும். இதுபற்றி விவாதிப்பதற்காக விரைவில் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெறும்” என்று குறிப்பிட்டார்.

தேர்தல் தோல்வியால் கட்சியின் நிர்வாகிகளும் அடிமட்ட தொண்டர்களும், துவண்டு போய்விடக்கூடாது என்பதற்காக தலைவர்கள் இதுபோல் பேசுவது வழக்கமான ஒன்றுதான்.

ஆனால் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இதுபோல் தோல்வி ஏற்படலாம் என்றும் அதை தவிர்ப்பதற்கு காங்கிரஸ் தலைமை என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விளக்கி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், கபில்சிபல், ஆனந்த் சர்மா உள்ளிட்ட 23 பேர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே சோனியாவுக்கு கடிதம் எழுதினார்கள்.

அதில், “இவை, மிக முக்கியமான கோரிக்கை, உட்கட்சி தேர்தலை உடனடியாக நடத்தி கட்சிக்கு புத்துயிர் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் வரும் தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை இழக்க நேரிடும்” என்று அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.

ஆனால் கட்சி மேலிடத்துடன் நெருங்கிய தொடர்பிலுள்ள ஒரு சிலர், கடிதம் எழுதிய 23 தலைவர்களும், சோனியாவுக்கும் ராகுலுக்கும் எதிராகத்தான் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்று பிரச்சனையை அப்படியே மடைமாற்றம் செய்து விட்டனர்.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவருக்கும் பெரும் பங்கு உண்டு என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் இதே கருத்தை இந்த 23 மூத்த தலைவர்களும், சோனியாவுக்கும் ராகுலுக்கும் மீண்டும் நினைவூட்டினார்கள். தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் இந்தக் கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.

ஆனால் காங்கிரஸ் மேலிடம் இதைக் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. இப்படி பலமுறை முன்னெச்சரிக்கை செய்தும் அதுபற்றியே பரிசீலனை செய்யாததுதான் காங்கிரஸ் கட்சியின் இந்த வீழ்ச்சிக்கு காரணம் ஆகிவிட்டது.

இந்த நிலையில்தான் தமிழகத்தில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 18 எம்எல்ஏக்களில் யாருக்கு சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் பதவியை கொடுக்கலாம் என்ற ஆலோசனை கடந்த 4 நாட்களாக தமிழக காங்கிரசில் தீவிரமாக நடந்து வருகிறது.

Nellai KS Alagiri Byte - updatenews360

இவர்களில், யாருக்கு தலைவர் பதவி கொடுத்தாலும், தன் தலைதான் உருளும் என்பதை தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி நன்றாகவே உணர்ந்திருக்கிறார்.

ஏனென்றால், தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தபோது அதில் பெரும் பெரும் கோடீஸ்வரர்கள் 22 பேர் இடம்பெற்றிருந்தனர்.

அப்போது, ஜோதிமணி எம்பி, “தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு சீட்டுகளை பேரம் விற்று விட்டனர்” என்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தை ராகுல் காந்தியிடமும், அவர் புகாராக தெரிவித்தார்.

இதனால்தான் யாரையாவது நியமிக்கப் போய் அது வில்லங்கத்தில் முடியலாம் என்று அழகிரி பயப்படுகிறார். இதனால் தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர், துணைத் தலைவர், கொறடா போன்ற முக்கிய நிர்வாகிகளை நியமிப்பதற்கான அதிகாரத்தை கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கே வழங்குவது என தமிழக காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது.

இதுபற்றி டெல்லி செய்தியாளர்கள் கூறும்போது, “தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தேவையற்ற நெருக்கடியை சோனியாவுக்கும், ராகுல் காந்திக்கும் கொடுக்கிறார்கள். இப்போதுள்ள எம்எல்ஏக்களின் அனுபவத்தை பார்த்தால் விளவங்கோடு தொகுதியில் 3 முறை வென்ற விஜயதாரணிக்கு அந்த வாய்ப்பு உள்ளது. அதனால் அவரையே தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால்
அதில் விருப்பம் இல்லாததால்தான் தமிழக காங்கிரஸார், சோனியா காந்திக்கு பிரச்சனையை தள்ளி விட்டிருக்கிறார்கள்.

சோனியாவின் கவலையெல்லாம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை கைப்பற்றவேண்டும் என்பதாகத்தான் உள்ளது.

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசும், கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளும் இப்போது போலவே 2024லிலும் வெற்றி பெறும் சூழல் இருந்தால் பிரதமர் வேட்பாளராக ராகுலை இந்தக் கட்சிகள் ஏற்காமல் போக வாய்ப்பிருக்கிறது என்ற சிந்தனை அவருடைய மனதில் ஓடுகிறது. அதனால்தான் 4 மாநில தேர்தல் தோல்வி அவரை வெகுவாக பாதித்திருக்கிறது. இப்படி விரக்தியில் இருக்கும் சோனியாவுக்கு தமிழக பிரச்சனை மேலும் தலைவலி தரும் விஷயம்தான்” என்று தெரிவித்தனர்.

Views: - 192

0

0