5 மாநில தேர்தல்களில் திணறல் : காங்கிரஸ் கதி அவ்வளவுதானா?

21 April 2021, 3:36 pm
Congress cover - updatenews360
Quick Share

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில தேர்தல்களும் காங்கிரசுக்கு ஒரு அக்னிப் பரீட்சைதான். இது சட்டப்பேரவை தேர்தல் என்றாலும் கூட, காங்கிரசின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்வதாக அமைந்து இருக்கிறது, என்றே சொல்லவேண்டும். ஏனென்றால், இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால்தான் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் புதிய உத்வேகத்துடன் பாஜகவுக்கு எதிராக தேர்தல் களத்தில் இறங்கி போராட முடியும்.

35 ஆண்டுகளுக்கு முன்பு 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆட்சி செய்த காங்கிரசின் பலம் இன்று வெகுவாக சுருங்கிப் போய்விட்டது. தற்போது ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களில் அக்கட்சியின் ஆட்சியும், மராட்டியத்திலும், ஜார்கண்டிலும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஆட்சியும் நடக்கிறது.

அதேநேரம் பாஜகவின் ஆட்சி 7 மாநிலங்களிலும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆட்சி 10 மாநிலங்களிலும் நடக்கிறது. காங்கிரஸ் இப்படி தேய்ந்து கொண்டே போவதற்கு கடந்த 15 ஆண்டுகளாக மாநிலக் கட்சிகளின் கூட்டணியால் அது கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டதும், முக்கிய காரணம் என்பது வெளிப்படையாகத் தெரிந்த ஒன்று.

இதனால்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.

DMK - Congress - Updatenews360

தமிழ்நாட்டில் 2011 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 63 தொகுதிகளில் போட்டியிட்டது. 2016-ல் அது 41 ஆக குறைந்தது. இந்தத் தேர்தலில் அது இன்னும் சரிந்து 25 இடங்கள் என்ற அளவிற்கு வந்துவிட்டது. 2011, 2016 தேர்தல்களில் காங்கிரஸ் 35 இடங்களுக்கும் மேல் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றிருந்தால் நாடாளுமன்ற மேல்-சபைக்கு ஒரு எம்பியை தேர்வு செய்யும் நிலை இருந்தது. இந்த தேர்தலில் அந்த வாய்ப்பும் கூட அமையாமல் போய்விட்டது.

நமது பக்கத்து மாநிலமான புதுச்சேரியில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 21 இடங்களில் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில்14 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சியான திமுகவிற்கும் சுயேச்சைக்கும் 16 இடங்களை ஒதுக்கியுள்ளது. ஒரு வேளை இங்கு காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் கூட தனித்து ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

காங்கிரஸின் வயிற்றில் புளியை கரைப்பது போல் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் அக்கட்சிக்கு ஒற்றை இலக்கத்தில்தான் வெற்றி கிடைக்கும் என்று தேர்தல் கணிப்புகளும் கூறுகின்றன.

அடுத்து காங்கிரசின் சரிவுக்கு அதன் கொள்கை நிலைப்பாடும் ஒரு காரணம். மராட்டிய மாநிலத்தில், பாஜகவின் கை ஓங்கி விடக்கூடாது என்பதற்காக இந்துத்துவா கொள்கையில் தீவிர ஈடுபாடு கொண்ட சிவசேனை கட்சியின் ஆட்சிக்கு தேசியவாத காங்கிரசுடன் இணைந்து காங்கிரஸ் ஆதரவு கொடுத்து வருவதை அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அடுத்து மேற்கு வங்காள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், கேரளாவில் அதன் பரம்பரை எதிரிகளான கம்யூனிஸ்ட்களுடன் கைகோர்த்து இருப்பது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்த கூட்டணியிலும் கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கையே ஓங்கியுள்ளது. மார்க்சிஸ்ட் 137 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரசுக்கு 91 தொகுதிகளே ஒதுக்கப்பட்டுள்ளன. உண்மையிலேயே பாஜகவை எதிர்க்கவேண்டும் என்று காங்கிரஸ் நினைத்திருந்தால் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கலாம். ஆனால் அதை செய்ய காங்கிரஸ் தவறிவிட்டது.

இதனால் மேற்கு வங்காளத்தில் ஒரு நிலைப்பாட்டையும் கேரளாவில் அதற்கு நேர்மாறானதொரு நிலைப்பாட்டையும் எடுக்க வேண்டிய சூழலுக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுவிட்டது. மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையேதான் கடும் போட்டி நிலவுவதால் காங்கிரஸ் எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்பதுதான் மிகப் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு நடந்த பீகார் தேர்தலில் 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரசுக்கு
18 இடங்கள் கிடைத்தது. அங்கு லாலு பிரசாத்தின் கூட்டணியில் காங்கிரஸ் இருந்ததால் இந்த வெற்றி சாத்தியமானது. மேற்கு வங்காளத்தில் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுடன் காங்கிரஸ் அமைத்துள்ள கூட்டணி அங்கு மூன்றாவது அணியாகத்தான் உள்ளது. இதனால் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்பதை விட, மூன்றாவது இடத்தை எத்தனை இடங்களில் பிடிக்கும் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.

அசாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் காங்கிரஸ் 94 இடங்களில் போட்டியிடுகிறது. எஞ்சிய தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்து இருக்கிறது. அந்த மாநிலத்தில் பிரிவினைவாத முழக்கங்களை எழுப்பும் சக்திகளுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதே போன்ற குற்றச்சாட்டு மேற்கு வங்காளத்திலும் வைக்கப்பட்டுள்ளது. அதாவது ஓட்டுகளை பெறுவதற்காக காங்கிரஸ் இப்படி நடந்துகொள்வதாக பாஜக குற்றம் சாட்டுகிறது.

அசாமில் ஆட்சியை காங்கிரஸ் மீண்டும் கைப்பற்ற முடியாமல் போனால், நிச்சயம் அது அக்கட்சிக்கு விழும் பலத்த அடியாகத்தான் அமையும்.

மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணி வைத்திருப்பதால், கேரளாவில் அக்கட்சிக்கு எதிராக காங்கிரசால் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள முடியவில்லை. ஏற்கனவே வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்திய விவாகரத்தில் சிக்கிக்கொண்டு தவித்து வரும் பினராய் விஜயன் தலைமையிலான அரசு, இதையும் மீறி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றி விடும் என்கிற சூழல்தான் தற்போது கேரளாவில் நிலவுகிறது.

Congress_UpdateNews360

இங்கும் காங்கிரஸ் தோற்றுப் போனால் தென்மாநிலங்களில் அனைத்திலும் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படுவது நிச்சயம். எனவேதான் இந்த 5 மாநில தேர்தல்களும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு வாழ்வா?சாவா? என்ற பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று டெல்லி அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அவர்கள் மேலும் இது பற்றி கூறும்போது, “இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் எடுத்தது போன்ற தைரியமான முடிவை சோனியாவும், ராகுல் காந்தியும் எடுக்கத் தவறியதுதான் காங்கிரசின் செல்வாக்கு சரிந்ததற்கு முக்கிய காரணம். மாநில கட்சிகளுக்கு அதிக இடம் கொடுத்ததால் காங்கிரசுக்கு இருந்த பாரம்பரிய வாக்குவங்கி மெல்ல மெல்ல கரைந்து மாநிலக் கட்சிகள் பக்கம் போய் விட்டன. காங்கிரசும் மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக 2004, 2009 நாடாளுமன்ற தேர்தலின்போது பல முக்கிய விவகாரங்களில் தன்னைத்தானே சமரசம் செய்தும் கொண்டது.

இனியும் இதை சரி செய்யாவிட்டால் அது பாதகமான விளைவை ஏற்படுத்தும். ஏற்கனவே காங்கிரஸில் 23 தலைவர்கள் கட்சியின் மேலிடத்திற்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கிவிட்டனர். இதை சரிசெய்ய வேண்டுமென்றால் உட்கட்சி தேர்தலை காங்கிரஸ் உடனடியாக நடத்துவது மிக அவசியம். அப்போதுதான் காங்கிரஸின் அடிமட்ட தொண்டர்கள் உற்சாகத்துடன் செயல்படத் தொடங்குவார்கள். கட்சியும் சுறுசுறுப்படையும்.

p_chidambaram_updatenews360

மேலும் ப. சிதம்பரம் போன்ற மூத்த தலைவர்கள் பலர் கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கிறார்கள். இது ராகுல் காந்திக்கும் தெரியும். அவர்கள் கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் உணர்வுகளை மதிப்பதே இல்லை. இந்த குறைபாட்டையும் சரி செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டனர்.

“எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆகிப் போச்சேன்னு” அக்கட்சியின் தொண்டர்கள் புலம்பும் அளவிற்கு நிலைமை மோசமாகி இருப்பது, கவலைக்குரிய விஷயம்தான்!

Views: - 85

0

0