ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை உள்பட 8 மசோதாக்கள் நிறைவேற்றம்… தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்பு

5 February 2021, 4:18 pm
EPS in assembly - updatenews360 (2)
Quick Share

சென்னை : ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா உள்பட 8 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது, பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

கொரோனா மற்றும் வாழ்வாதாரம் பாதித்த நிலையில் இருக்கும் விவசாயிகளின் துயரை துடைக்கும் வகையில், தமிழகத்தில் விவசாய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 16.43 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற ரூ.12,110 கோடி விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அரசாணை வெளியிடப்படும், எனத் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, போலீசார் மீது தாக்குதல் நடத்தியது, வாகனங்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட வழக்குகளை தவிர்த்து, பிற வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் எனவும் அறிவித்தார். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு அவர் கண்டனத்தை தெரிவித்தார்.

அதோடு, இந்தக் கூட்டத் தொடரில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா, வரதட்சணை கொடுமையால் நிகழும் மரணங்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மசோதா, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மசோதா, உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிப்பதற்கான மசோதா, விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்டமசோதா, சிதம்பரம் ராஜா முத்தையா பல்கலைக்கழகம் சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டிற்கு மாற்றம் செய்யும் மசோதா உள்ளிட்ட 8 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை புறக்கணித்ததால், எந்தவித விவாதமுமின்றி, இந்த மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

Views: - 0

0

0