சமூக போராளியா?… வேணவே வேணாம் : பதுங்கும் நடிகர் சூர்யா!

Author: Udayachandran RadhaKrishnan
18 September 2022, 9:52 pm
Surya - Updatenews360
Quick Share

தமிழகத்தில் எங்காவது ஓரிடத்தில், அநீதி நடக்கிறது என்றால் அதற்காக கொந்தளித்து முதல் குரல் கொடுப்பவர், நடிகர் சூர்யாவாகத்தான் இருப்பார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

அநீதிக்கு குரல் கொடுக்கும் நடிகர் குடும்பம்!!

அவர் மட்டுமல்லாமல் அவருடைய திரையுலக குடும்பத்தினரான மனைவி ஜோதிகா, சகோதரர் கார்த்தி, தந்தை சிவக்குமார் ஆகியோரும் களத்தில் குதித்து விடுவார்கள்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், அவர்கள் இப்படி ஆவேசப்பட்ட நிகழ்வுகள் பல உண்டு. அவற்றில் மிக முக்கியமான சிலவற்றை இங்கே பார்ப்போம்.

நீதி கேட்டு குரல் கொடுத்த சூர்யா

நீட் தேர்வை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தற்கொலை கொண்டபோது நடிகர் சூர்யா கடுங்கோபத்துடன் ‘இன்னொரு அனிதா உருவாகக் கூடாது’ என்ற தலைப்பில் ஒரு முன்னணி நாளிதழில் கட்டுரையும் எழுதினார். அதில் அனைவருக்கும் சமமான கல்வியை வழங்காமல் நீட் போன்ற நுழைவு தேர்வுகள் நடத்துவது ஏன்?’ என்று கேள்வியெழுப்பி நீட் தேர்வை விமர்சித்தும் இருந்தார்.

2018-ம் ஆண்டு மே மாதம தூத்துக்குடி நகரில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானது குறித்து பொங்கியெழுந்த அவர் ‘இனியும் இவற்றையெல்லாம் சகித்துக் கொள்ள முடியாது’ என்று ஆவேசமாக அறிக்கை விட்டார்.

8 வழிச்சாலைக்கு கார்த்தி எதிர்ப்பு

2018 ஜூன் மாதம் சூர்யாவின் சகோதரர் கார்த்தி சென்னை-சேலம் 8 வழிச் சாலை திட்டத்தை கண்டித்து வெளியிட்ட அறிக்கையில், “விழுப்புரம் வழியா ஒண்ணு, ராணிப்பேட்டை-தர்மபுரி வழியா இன்னொண்ணுன்னு சென்னையில இருந்து சேலத்துக்குப் போக ஏற்கனவே இரண்டு வழிகள் இருக்கு.

இந்த இரண்டு சாலைகளையும் விரிவாக்கம் பண்ணலாமே, எதுக்குப் புதுச்சாலை? அப்படிப் புதுச்சாலை போடுற அளவுக்கு சேலத்தில் அப்படி என்ன தேவை இருக்கு? விவசாய நிலங்களையும், 30 கிலோமீட்டருக்குக் காட்டையும் அழிச்சு இந்தச் சாலையை அமைக்கிறதா சொல்றாங்க. அது அவசியமே இல்லை!” என்று குமுறி இருந்தார்.

மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த சிவக்குமார்

2019ம் ஆண்டு ஜூலை மாதம் சிவக்குமார் கல்வி அறக்கட்டளை சார்பாக சென்னையில் நடைபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு பலத்த எதிர்ப்பும் தெரிவித்தார்.

இந்துக்களின் கோபத்தை வாங்கிய ஜோதிகா

2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு டிவி நிகழ்ச்சியில் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா, பேசும்போது “தஞ்சை பெரிய கோவிலுக்கு நன்கொடை வழங்குவதை போல் மருத்துவமனைகளுக்கும், பள்ளிகளுக்கும் மக்கள் நன்கொடை கொடுக்கவேண்டும். கோவில்களில் கவனம் செலுத்துவதை விட மருத்துவமனைகள் மீது கவனம் செலுத்துவதுதான் மிகவும் முக்கியம்” என்றார். தஞ்சை பெரிய கோவிலை உதாரணம் காட்டி அவர் இப்படி பேசியது இந்துக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.

சாத்தான்குளம் சம்பவம் : கொதித்த சூர்யா!!

2020ம் ஆண்டு ஜூன் மாதம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில்
தந்தை மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும், போலீசார்
லாக்அப்பில் அடித்து கொன்றதை “அதிகார வன்முறைகளுக்கு ஒரு முடிவுக்கட்ட வேண்டும்” என்று சூர்யா கண்டித்தார்.

55 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்து வரும் சிவக்குமார் சில மாதங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது கோவில் கட்டும் கொத்தனாரால் நாளை கோவிலுக்குள் போக முடியாது, கடவுளை தொட முடியாது எனக் கூறியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

திமுக ஆட்சியில் அவலங்கள்

அதேநேரம் திமுக ஆட்சிக்கு வந்தபின்பு, கடந்த 16 மாதங்களில் பத்துக்கும் மேற்பட்ட லாக்அப் மரணங்கள நடந்துள்ளன.சிறுமிகள் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்கள் என பாலியல் வன்கொடுமைக்கும், கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கும் உள்ளாக்கப்படும் வேதனை நிகழ்வுகள் அன்றாட தலைப்பு செய்திகளாக மாறிவிட்டன.

இன்னொரு பக்கம் இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா, அபின், ஹெராயின் போன்ற போதைப் பொருட்கள் தமிழகத்தில் தாராளமாக நடமாடுவதை என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று பல முக்கிய பிரச்சனைகள் சமூக நல ஆர்வலர்களால் வேதனையோடு விமர்சிக்கப்படுகிறது.

சப்தம் இல்லாமல் சூர்யா

ஆனாலும் இவற்றுக்கு எதிராக சமூகப் போராளிகள் என்று தமிழக இளைஞர்களால் அடையாளப்படுத்தப்பட்ட நடிகர் சூர்யாவோ அவருடைய சகோதரர் கார்த்தியோ இதுவரை எந்தக் குரலும் எழுப்பவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

இதற்கு என்ன காரணம்? என்ற கேள்விக்கு அரசியல் விமர்சகர்கள்
கூறும் தகவல்கள், சிந்திக்க கூடியவையாக இருக்கின்றன.

“தமிழ் திரையுலகினர் ஆட்சி மாறினால் காட்சியையும் மாற்றிக் கொண்டு விடுவார்கள் என்பது இயல்பான ஒன்று.

மன்னிப்பு கேட்ட சத்யராஜ்

தமிழ், தமிழ் என்றும் காவிரி நீர் பிரச்னையில் தமிழகத்துக்கு அநீதி என்றும் மேடைகளில் முழங்கிய நடிகர் சத்யராஜ், 5 ஆண்டுகளுக்கு முன் கர்நாடகாவில், தான் நடித்த பாகு பலி படம் வெளியாகவேண்டும் என்பதற்காக கன்னட அமைப்புகளிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டதும் நடந்தது.

அந்த பட்டியலில் நடிகர் சூர்யாவின் குடும்பமும் தற்போது இணைந்துள்ளது. இதற்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது.

சிவக்குமார் பேச்சுக்கு தி.க எதிர்ப்பு

கடந்த சில நாட்களுக்கு முன் தனது அறக்கட்டளை சார்பாக நடந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார் பேசும்போது,” பிராமணர்களைப் பற்றி நாம் ஏதேதோ செல்கிறோம். ஆனால், அடுத்த வேளை சாப்பாட்டுக்குக் கூட வழியின்றி இன்னமும் கோவிலில் பூஜை செய்து  வாழ்க்கை நடத்தும் பிராமணர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
நானும் சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்தவன்தான்.

நான் 6, 7, 8-ம் வகுப்பு படிக்கும்போது எனக்கு ஆசிரியர்களாக இருந்த சுந்தராம்பாள், சேதுராமய்யர், சந்திரசேகர் போன்றோர் பிராமணர்கள்தான். அவர்கள் டியூசனுக்கு 5 பைசாகூட வாங்க மாட்டார்கள். சோதா பயலுகளா மறுபடியும் மாடு மேய்க்கப் போயிடாதீங்கடா, ஒழுங்கா படிங்கடா என்று சொல்லி எங்களை படிக்க வைத்தார்கள். அந்த வாத்தியார்கள் போட்ட பிச்சையால்தான் நான் படித்து இந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறேன். வாழ்க்கையில் கல்வியும், ஒழுக்கமும் இருந்தால் மனிதன் எந்த உச்ச நிலையையும் அடையலாம்” என்று குறிப்பிட்டார்.

கப்சிப் ஆன சிவக்குமார் குடும்பம்

இதற்கு திராவிடர் கழகம் உள்ளிட்ட சில தமிழர் அமைப்புகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் வேதனைக்கு உள்ளான சிவக்குமார் குடும்பம், இனி அரசியல் சார்ந்த நிகழ்வுகள் குறித்து எதையும் சமூக போராளிகள் போல விமர்சிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளதாக பேசப்படுகிறது.

ஆனால் உண்மையான காரணம் இதுவல்ல என்று தமிழ் திரையுலக பிரமுகர்களில் சிலர் கூறுகின்றனர்.

திமுகவின் அனுதாபிகள்

ஏனென்றால் நடிகர் சிவக்குமார் மட்டுமல்லாமல் அவருடைய இரண்டு மகன்களுமே திமுகவின் அனுதாபிகள் என்பது வெளிப்படையாக தெரிந்த விஷயம். அதனால்தான் கடந்த ஆட்சி காலத்தில் நடந்த சில நிகழ்வுகளுக்காக கொந்தளித்துபோய் அவர்கள் உரக்க குரல் கொடுத்தனர்.

ஆனால் தற்போது நடப்பது திமுக ஆட்சி. எனவேதான் இந்த ஆட்சியில் நடக்கும் சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுக்க அவர்கள் தயங்குகிறார்கள். மனதைப் பாதிக்கும் மிகவும் துயரமான நிகழ்வுகள் என்றாலும்கூட அதுபற்றி வாயே திறப்பதில்லை.

தவிர சூர்யாவும், கார்த்தியும் முன்னணி நடிகர்களாக திகழ்வதால் தமிழ் திரையுலகையே தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்ட உதயநிதியால் அவர்களுக்கு தொழில் ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் சிவக்குமார் கவனமாகவும், உறுதியாகவும் இருக்கிறார்.

தேசிய விருதால் சைலண்ட்டில் சூர்யா

சூரரைப்போற்று படத்திற்காக தனக்குக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்திருப்பதால் மத்திய பாஜக அரசை முன்புபோல சூர்யாவால் கடுமையாக விமர்சிக்க முடியவில்லை என்பதும் உண்மை.

இதனால்தான் சமூகப் போராளிகள் என்கிற அடையாளத்தை இனி கையில் எடுப்பது இல்லை என்ற முடிவுக்கு நடிகர் சூர்யாவின் குடும்பம் வந்திருக்கலாம்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் காரணங்களை அடுக்குகின்றனர்.

Views: - 375

0

0