நடிகர் அஜித் வீட்டின் முன்பு பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி : தடுத்து நிறுத்தி கைது செய்த போலீஸ்..!!

Author: Babu Lakshmanan
4 October 2021, 8:10 pm
Quick Share

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நடிகர் அஜித்குமார் வீட்டின் முன்பு பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பர்சானா என்கின்ற பெண் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அந்த பெண் ஊழியர் பணி புரிந்து வந்த மருத்துவமனைக்கு நடிகர் அஜித்குமார் அவரது மனைவியுடன் சிகிச்சைக்காக சென்று வந்த போது, அந்தப் பெண் நடிகர் அஜித் குமார் இடம் அறிமுகமாகி, தனது மகளின் கல்வி செலவை ஏற்றுக்கொள்ள வேண்டுமென வேண்டுகோள் வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, தனது மேலாளர் மூலமாக அந்தப் பெண்ணின் குழந்தையின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்வதாக நடிகர் அஜித்குமார் ஒப்புக்கொண்டு, அதற்குண்டான பணத்தினை பள்ளியின் வங்கி கணக்கின் மூலம் ஆன்லைனில் செலுத்தினார். இதனை அடுத்து, அந்தப் பெண் தொடர்ந்து நடிகர் அஜித்குமார் மேலாளர் சுரேஷ் சந்திரா அவர்களை தொடர்பு கொண்டு கல்விச் செலவுக்கு அடிக்கடி பணம் கேட்டு வந்ததாக தெரிகிறது.

இதனால் சந்தேகமடைந்த நடிகர் அஜித்குமாரின் மேலாளர் அந்தப் பெண் குறித்து விசாரித்தபோது, தவறான தகவல்களை அந்த பெண் அளித்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பெண் குறித்து நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சென்னை காவல் நிலைய ஆணையரிடம் புகார் அளித்தார்.நடிகர் அஜித்குமார் கேட்டுக்கொண்டதற்கிணங்க புகாரை வாபஸ் பெறப்பட்டு இந்த பிரச்சினை சுமூகமாக முடித்து வைக்கப்பட்டது.இதனை அறிந்த மருத்துவமனை நிர்வாகம் அவரை உடனடியாக பணி நீக்கம் செய்தது.

இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 6 மாதம் கடந்த நிலையில், இன்று மாலை 6 மணி அளவில் அந்த பெண் நடிகர் அஜித்குமார் வசித்து வரும் இஞ்சம்பாக்கம் வீட்டின் அருகே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனையடுத்து அங்கு ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றி அந்த பெண்ணை விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளனர். நடிகர் அஜித்குமார் வீட்டின் முன்பு பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 373

0

0