ஆளுநரிடம் அரசியலைப் பற்றித்தான் பேசினேன் : ஆனால்… சஸ்பென்ஸ் வைத்த நடிகர் ரஜினிகாந்த்..!!

Author: Babu Lakshmanan
8 August 2022, 1:44 pm
Quick Share

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், அரசிலையப் பற்றித்தான் பேசியதாக வெளிப்படையாக சொல்லியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவியை நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்தித்து பேசினார். தமிழகத்தில் ஆன்மிகம் பற்றி அதிகமாக பேசி வரும் ஆளுநருடன் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசியது மீண்டும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் ரஜினி பேசியதாவது :- ஆளுநருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்புதான். தமிழகத்திற்கு நல்லது செய்ய எதுவேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளேன் என ஆளுநர் ரவி கூறினார். காஷ்மீரில் பிறந்து, அதிக காலம் வட இந்தியாவில் வளர்ந்தவர் ஆளுநர் ரவி. தற்போது தமிழகத்தில் இருக்கும் ஆன்மிக உணர்வு அவரை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

தமிழர்களின் கடின உழைப்பு, நேர்மை போன்றவை மிகவும் பிடித்திருப்பதாக அவர் கூறினார். ஆளுநருடன் 30 நிமிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவருடன் அரசியல் குறித்தும் விவாதித்தேன். ஆனால் அதை உங்களிடம் தற்போது சொல்ல முடியாது, எனக் கூறினார்.

அப்போது, நிரூபர் ஒருவர் தயிர் உள்ளிட்டவைக்கு எல்லாம் ஜிஎஸ்டி வரி உயர்த்தி இருக்காங்க… அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டார். இதற்கு பதிலளித்த ரஜினி, No comments எனக் கூறினார்.

பின்னர், மீண்டும் அரசியலுக்கு வரப்போகிறீர்களா? என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, மீண்டும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று நடிகர் ரஜினி பதிலளித்தார். இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தல் பற்றி விவாதித்தீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது பற்றி சொல்ல முடியாது என்று ரஜினி பதிலளித்தார்.

Views: - 153

0

0