ஜெய் பீம் படத்தை வைத்து சூர்யா நடத்திய அரசியல் நாடகம்…? ரூ.1 கோடி நன்கொடையால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வந்த புது சிக்கல்..!!!

Author: Babu Lakshmanan
9 November 2021, 12:17 pm
jai bhim 1 -updatenews360
Quick Share

பழங்குடி இருளர் சமூக மக்களின் நலனுக்காக நடிகர் சூர்யா ரூ.1 கோடி நன்கொடை கொடுத்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர்கள் சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன் உள்ளிட்ட நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெய் பீம். இந்தப் படத்தை செ. ஞானவேல் இயக்கியுள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் ஓடிடியில் வெளியாகியது. விருத்தாச்சலத்தில் உள்ள கம்மாபுரத்தில் 1993ஆம் ஆண்டு பழங்குடியினத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவர் திருட்டுக் குற்றச்சாட்டின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பிறகு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த விவகாரத்தை பின்னணியாகக் கொண்டு வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் ‘ஜெய் பீம்’.

முழுக்க முழுக்க பழங்குடி இருளர் இன மக்கள் தங்களின் வாழ்க்கையில் சந்திக்கும் நெருக்கடிகளை தத்ரூபமாக எடுத்துக் காட்டியுள்ளது இந்தப் படக்குழு. பெரும் வரவேற்பை பெற்ற இந்தப் படம், வெளியீட்டிற்கு முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. படத்தை பார்த்த அவர் படக்குழுவினரை மெச்சினார்.

இதைத் தொடர்ந்து, பழங்குடி இருளர் இன மக்களின் நலனுக்காக ஜோதிகா – சூர்யாவின் 2D நிறுவனம் சார்பில் ரூ. 1 கோடியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி சந்தரு மற்றும் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க பொறுப்பாளர்களிடம் நடிகர் சூர்யா வழங்கினார். அவரது இந்த செயலும் பெரிதும் போற்றப்பட்டது.

இந்த நிலையில், பழங்குடி இருளர் சமூக மக்களின் நலனுக்காக நடிகர் சூர்யா ரூ.1 கோடி நன்கொடை கொடுத்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அந்த ஒரு கோடி ரூபாய் பணத்தை, நடிகர் சூர்யா, ஜோதிகாவின் 2D நிறுவனம் கொடுக்கவில்லை என்றும், அகரம் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வந்த பணத்தை தூக்கி, படத்தின் விளம்பரத்திற்கு பயன்படுத்திக் கொண்டதாக புகார் எழுந்துள்ளது.

அதோடு, காசோலையில் இருக்கும் ‘PAZHANKUDI IRULAR EDUCATIONAL TRUST’ என்ற பெயரில் தொண்டு நிறுவனங்களின் அரசு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் எந்த தகவலும் இடம்பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், இது புதிதாக தொடங்கபட்ட தொண்டு நிறுவனமா..? இனிமேல் தான் பதிவு செய்ய முடியுமா..? அப்படியிருந்தால், அந்த தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் யார் யார்..? என்ற விபரம் ஏதேனும் இருக்கிறதா..? என பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

மேலும், அகரம் பவுன்டேசனின் நிர்வாகி ஞானவேல்தான் ஜெய் பீம் படத்தின் இயக்குநர் என்பதால், அந்த அறக்கட்டளையின் பணத்தை எடுத்து, இந்தப் படத்திற்கு செலவிட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது. இதில், எது உண்மை என்பது பற்றி நடிகர் சூர்யா மவுனம் கலைத்தால் மட்டுமே, விடை கிடைக்கும்.

மேலும், இல்லாத அறக்கட்டளையின் பெயரை வைத்து நன்கொடை வசூலித்த முதலமைச்சர் ஸ்டாலினின் செயலும் இங்கு விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. பிஎம் கேர்ஸ் பற்றி திமுக அடுக்கடுக்கான கேள்விகளையும், சந்தேகங்களையும் திமுகவினர் முன்வைத்து வரும் நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும் என்று பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

Views: - 590

0

0