தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு : எஸ்.வி. சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்..!
16 September 2020, 4:00 pmசென்னை : தேசியக் கொடியை அவமதித்த வழக்கில் பா.ஜ.க. பிரமுகர் எஸ்.வி. சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய கொடியை மதங்களுடன் ஒப்பிட்டு பேசிய வீடியோ ஒன்றை பா.ஜ.க. பிரமுகர் எஸ்வி சேகர் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதையடுத்து, தேசிய கொடியை அவமதித்தாக ஸ்.வி.சேகர் மீது, ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதன்படி, நடிகர் எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் தேசிய சின்னங்கள் அவமதிப்பு தடுப்பு சட்டம் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, எஸ்.வி சேகர் தரப்பில் தேசிய கொடியை அவமதிக்கும் நோக்கத்தில் பேசவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனிடையே, இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி எஸ்.வி சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில், “தேசிய கொடியை அவமதிக்கும் படி நடந்துகொண்டதற்கு மன்னிப்பு கேட்கிறேன். இனி என் வாழ்நாளில் இவ்வாறு நடந்துகொள்ள மாட்டேன்” என கேட்டுக்கொண்டிருந்தார். போலீசாரும் அவரது மன்னிப்பை ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து, ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, எஸ்.வி. சேகருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. அதாவது, காவல்துறையினரின் விசாரணைக்கு அழைக்கும் போது, ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
0