2031-ல் நடிகர் விஜய் முதலமைச்சரா…? மீண்டும் உசுப்பேற்றிய ரசிகர்கள்…!! போஸ்டர் அச்சிட்டு பரபரப்பு!!!

Author: Babu Lakshmanan
20 October 2021, 2:35 pm
vijay poster - updatenews360
Quick Share

விஜய் மக்கள் இயக்கத்தினர், மறுபடியும் மதுரை முழுவதும் ஒரு பரபரப்பு போஸ்டரை அடித்து ஒட்டியுள்ளனர்.

ஜோசப் விஜய் எனும் நான்

அதில், பதவியேற்பு… 2031 ஜோசப் விஜய் எனும் நான், உண்மையான நம்பிக்கையும் மாறாப் பற்றும் கொண்டிருப்பேன் என்று உறுதியளிக்கிறேன். 169க்கு110 -2021 உள்ளாட்சியில் நல்ல தேர்வு! நீங்கள்தான் தமிழகத்தின் இறுதித் தீர்வு!! என்ற பஞ்ச் வசனங்களும் இடம் பெற்றுள்ளன.

அதாவது, நடிகர் விஜய் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்கும்போது இப்படித்தான் உறுதிமொழி எடுப்பார் என்பதுபோல அந்த போஸ்டர் வாசகங்கள் உள்ளன. தவிர அவர் உறுதிமொழி எடுக்கும் மைக் இருக்கும் பலகையில் அரசு முத்திரையான ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் ராஜகோபுரத்துடன், தமிழ்நாடு அரசு என்ற வாசகமும் காணப்படுகிறது.

இதுதவிர, அந்த போஸ்டரை அச்சிட்டு ஒட்டிய விஜய் ரசிகர் மன்றத்தின் நிர்வாகிகள் புகைப்படங்களும் அதில் இடம் பெற்றுள்ளன.

மறைமுக எச்சரிக்கை

ஏற்கனவே பெரியார், அண்ணா, எம்ஜிஆர் கருணாநிதி போன்ற தலைவர்களின் உருவங்களை மார்பிங் செய்து விஜய் போல அவருடைய மதுரை ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அப்போதே விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் புஸ்ஸி ஆனந்த், இனி இதுமாதிரியான நடவடிக்கைகளில் நமது ரசிகர் மன்றத்தினர் யாரும் ஈடுபடக்கூடாது என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்தும் இருந்தார். ஆனால் அதையெல்லாம் விஜய் மக்கள் இயக்கத்தினர் யாரும், காதில் போட்டுக் கொள்ளவில்லை.

விஜய் ரசிகர்கள் இப்படி போஸ்டர் அடிப்பது இன்று, நேற்றல்ல ஜெயலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதாவது டிசம்பர் 2016க்கு பின்பு இதுபோன்ற போஸ்டர்களை தொடர்ந்து இஷ்டம் போல் அச்சடித்து ஒட்டி வருகின்றனர்.

2017-ல் 2021 முதல்வரே…என்று போஸ்டர் ஒட்டினர். இதனால் விஜய் அரசியலில் குதிப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் எழுந்தது. அப்போது ஒரு பிரபல கட்சியின் கடும் கோபத்துக்கு உள்ளானார். “இரும்பு அடிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை?… அதையெல்லாம் நாங்க பார்த்துக் கொள்கிறோம். பேசாம நடிக்கிற வேலையை மட்டும் பாருங்க” என்று மறைமுக எச்சரிக்கை விடுக்க விஜய் அப்படியே அடங்கிப் போனார்.

தலைமையேற்க வா..!!

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு, அமர வேண்டிய நாற்காலியில் அமர்ந்தால் மக்களும் மகிழ்ச்சியாக 2026?…என்று விஜய் முதலமைச்சராகி விடுவார் என்பதுபோல ஒரு கற்பனை போஸ்டரை அடித்தனர். இதற்கும் எதிர்ப்பு வலுத்தது.

அதன் பிறகு நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி கடந்த ஜூன் மாத 3-வது வாரத்தில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தின் வாசல் முன்பாக நின்று விஜய்க்கு தங்க செங்கோல் ஒன்றை வழங்குவதுபோல் சித்தரிக்கப்பட்ட ஒரு காட்சியையும், அதில் 1960களில் தம்பி வா! தலைமை ஏற்க வா!! என்று நாவலர் நெடுஞ்செழியனுக்கு, அண்ணா விடுத்த அழைப்பை ‘ரிப்பீட்’ செய்தும் போஸ்டர்களை அடித்து மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தினர். இது திமுகவினரை கடும் அதிருப்திக்கும், எரிச்சலுக்கும் உள்ளாக்கியது.

இப்படி விஜய் ரசிகர்கள் முதலமைச்சர் கனவில் மிதந்து விதவிதமாய், ரக ரகமாய் அடித்து ஒட்டிய போஸ்டர்கள் மட்டும் நூற்றுக்கணக்கில் இருக்கும்.

109 இடங்களில் வெற்றி

இந்த நிலையில்தான் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மட்டும் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டது.

விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியையும், நடிகர் விஜயின் புகைப்படத்தையும் பயன்படுத்தி பிரச்சாரம் மேற்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது. இந்த தேர்தலில்தான் 169 இடங்களில் சுயேச்சையாக போட்டியிட்டு ஒரு ஊராட்சி மன்றத் தலைவர் பதவி மற்றும் 109 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளை அந்த இயக்கம் கைப்பற்றி இருக்கிறது.

vijay makkal iyakkam - updatenews360

இதைத்தான் விஜய் ரசிகர் மன்றத்தினர் கொண்டாடி வருகின்றனர். 2031-ல் எப்படியும் ஆட்சியை கைப்பற்றி விடுவோம் என்று இப்போதே கனவு காணவும் ஆரம்பித்தும் விட்டனர். அதன் எதிரொலிதான் மதுரையில் மிக அண்மையில் ஒட்டப்பட்டுள்ள பதவியேற்பு 2031 போஸ்டர்கள்.

ரெண்டே பேர்

இதனால், உண்மையிலேயே விஜய் அரசியலுக்கு வரப் போகிறாரா?… என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனென்றால் அரசியலுக்கு வருகிறேன், இதோ வந்து விட்டேன், கட்சி தொடங்கப் போகிறேன், டிசம்பர் மாதம் அறிவிப்பேன் என்று 4 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருந்த நடிகர் ரஜினி 2020 டிசம்பர் இறுதியில் கொரோனாவை காரணம் காட்டிவிட்டு அரசியலே வேண்டாம், ஆளை விடுங்கப்பா என்று பெரிய கும்பிடாக போட்டு ஒதுங்கிக் கொண்டு விட்டார்.

இந்த விஷயத்தில் வெற்றி, தோல்வி பற்றி சிறிதும் கவலைப்படாமல் யாருக்கும் பயப்படாமல் துணிந்து அரசியல் களத்தில் இறங்கிய பிரபல நடிகர்கள் இரண்டே இரண்டு பேர்தான். 2005-ல் விஜயகாந்த், 2018-ல் கமல்ஹாசன். இதில் நடிகர் விஜயகாந்துக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஜெயலலிதாவும், கருணாநிதியும் உயிருடன் இருந்த காலத்திலேயே அவர் தேமுதிகவை தொடங்கி அதிரடி காட்டினார்.

விஜயின் நிலைப்பாடு என்ன?

விஜய் அரசியலுக்கு வருவாரா?… என்பது குறித்து அரசியல் விமர்சகர்களும், விஜய்க்கு நெருக்கமான சிலரும் கூறும் தகவல்கள், 2031-ம் ஆண்டிலும் அவர் கட்சி தொடங்கமாட்டார்
என்பதையே உணர்த்துகின்றன.

அவர்கள் கூறும்போது, “முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, உடல் நலக்குறைவு காரணமாக 2016 இறுதியில் மரணமடைந்தார். அதேபோல 3 ஆண்டுகளாக உடல் நலம் குன்றி இருந்த திமுக தலைவர் கருணாநிதி 2018-ல் இறந்தார். இந்த காலகட்டத்தில் இரு தலைவர்களும் இல்லாததால் ஒரு வெற்றிடம் உருவானதாக கூறப்பட்டது. இதனால் நடிகர்கள் ரஜினி, கமல், விஜய் மூவருக்கும் அரசியல் ஆசை திடீரென துளிர்த்தது. ஆனால் ரஜினி பின்வாங்கி விட்டார். அவரை ஒரு பிரபல அரசியல் கட்சி மிரட்டியதன் காரணமாகவும் எதிர்காலத்தில் தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போய் விடுமோ என்று பயந்தும் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுவதும் உண்டு. கமல் துணிச்சலுடன் அரசியல் கட்சி தொடங்கினார். அதுவும் கருணாநிதி உயிருடன் இருந்தபோது அவரை சந்தித்து ஆசி பெற்று பின்னர் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கினார்.

Vijay FAns Warn -Updatenews360

விஜய்க்கும் அப்போது அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்ற ஆசை, வெகுவாக ஏற்பட்டது. அதனால்தான் அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகர் வெளிப்படையாகவே அதற்கான முயற்சிகளிலும் இறங்கினார். மகனின் சம்மதத்தை பெற்ற பிறகே அவர் இந்த நடவடிக்கைகளில் தீவிரம் காட்டியதாக கூறப்படுவதும் உண்டு.

ஆனால் நடிகர் விஜய் அரசியலில் குதித்தால் தங்களின் பாரம்பரிய வாக்குவங்கியில் பெரிய ஓட்டை விழும். தேர்தல் முடிவுகளில் தங்கள் கட்சிக்கு பெரும் பாதிப்பும் ஏற்படும் என்பதை உணர்ந்த ஒரு பிரபல கட்சி, அவருக்கு சில மத அமைப்புகள் மூலம் கடும் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தது. அந்த அமைப்பினரும் “நீங்கள் இப்போது, கட்சி தொடங்க வேண்டாம். இன்னும்
5 வருடங்கள் கழித்து பார்த்துக் கொள்ளலாம்” என்று அட்வைஸ் செய்துள்ளனர்.

இதை மீறினால், எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது எப்படி கட்சியை நடத்துவதற்கு மிகவும் கஷ்டப்பட்டாரோ, அதுபோன்ற கடும் நெருக்கடி தனக்கும் ஏற்படலாம் என்று கருதிய விஜய் தனது அரசியல் ஆசையை வேறு வழியின்றி மூட்டை கட்டி வைத்தார். இதன் காரணமாகத்தான் அவருக்கும் அவருடைய தந்தைக்குமே பயங்கர மோதல் ஏற்பட்டது என்பார்கள்.

எனினும், தனது ரசிகர் மன்றத்தினரை ஏமாற்றி விடக்கூடாது என்பதற்காக 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மட்டும் சுயேச்சைகளாக போட்டியிட அனுமதித்தார். இதுதான் அவருடைய எல்லை. இதற்கு மேல் அவர் செல்ல விரும்பவில்லை என்பது நிஜம்.

ரசிகர்களின் கணிப்பு

உண்மையிலேயே விஜய்க்கு அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் இருந்தால் தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்திருப்பார். இதுவரை அப்படிச் செய்யவில்லை. அதேபோல மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளுக்கும் போட்டியிட தனது இயக்கத்தினரை அவர் அனுமதிக்கவில்லை.

அவர் அரசியலுக்கு வர விரும்பினால் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட தனது ரசிகர் மன்றத்தினர் அனுமதிக்க வேண்டும். அவர்கள் பொதுவானதொரு சின்னத்தில் போட்டியிடுவதற்கு மாநில தேர்தல் ஆணையத்திடம் முறைப்படி அனுமதியும் பெற்றுத் தரவேண்டும். அவர்களை சுயேச்சையாக போட்டியிட வைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

சரி, அதென்ன நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்பதுபோல் 2031 கணக்கு?…

இன்றுள்ள பல பிரபல அரசியல் கட்சி தலைவர்கள் அப்போது 80 வயதை நெருங்கி இருப்பார்கள். அதனால் அவர்களால் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் கவனம் செலுத்த முடியாது, வாரிசுகளை திணிக்க முயன்றாலும் அதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று விஜய் ரசிகர்கள் கருதுகின்றனர். தவிர அப்போது விஜய்க்கு 57 வயதுதான் ஆகியிருக்கும். அந்த நேரத்தில் எப்படியும் ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்பதும் அவர்களுடைய ஆசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது” என்று குறிப்பிட்டனர்!

கடல் வற்றிய பிறகு மீனை பிடித்துக் கொள்வோம், அதுவரை பொறுமையாக காத்திருப்போம் என்று நினைத்ததாம், கொக்கு! அந்தக் கதையாகத்தான் இது, இருக்கிறது.

Views: - 265

0

0