நடிகர் விவேக் மரணத்தில் அரசியல் : கொரோனா பரவலுக்கு தேர்தல்தான் காரணமா?

17 April 2021, 4:14 pm
Vivek - cover - updatenews360
Quick Share

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. வருகிற 2-ம் தேதி ஓட்டுகளை எண்ணி முடிவுகள் அறிவிக்க வேண்டியது மட்டுமே பாக்கி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நடந்த தேர்தலையும் கொரோனா தொற்று பரவலையும், முடிச்சுப்போட்டு சமூக ஊடகங்களில் செய்திகள் வைரலாக பரப்பப்படுகின்றன.

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசியல் தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள், பிரமுகர்கள், வேட்பாளர்கள் யாருமே முகக் கவசம் அணியவில்லை, சமூக இடைவெளியை முறையாக பின்பற்றவில்லை, பொதுஇடங்களில் ஆயிரக்கணக்கில் ஒன்று கூடினார்கள் என்று பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இதனால்தான் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழக்க நேரிட்டது. சுயேச்சை வேட்பாளர் ஒருவரும் கொரோனாவுக்கு பலியானார் என்றும் கூறுகின்றனர்.

இன்னொரு தரப்பினரோ, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த ஒரு சிலநாட்களிலேயே கொரோனா தமிழ்நாட்டில் வேகமாக பரவிவிட்டது. ஆனால் எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு ஆயத்தமாகி விட்டதால், இதுபற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை, இல்லை என்றால் ஒரே நாளில் திடீரென 3000, 4000 பேர் எப்படி கொரோனாவால் பாதிக்கப் படுகிறார்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலைவீச்சு பரவுவதை தடுக்க தேர்தலை கூட தள்ளி வைத்திருக்கலாம் என்று இப்போது இவர்கள் காலம் கடந்த ஒரு யோசனையையும் கூறுகிறார்கள். தமிழகத்தில் தேர்தல் நடந்ததுதான், கொரோனா வேகமாக பரவுவதற்கு காரணம் என்று பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டும் கூறப்படுகிறது.

Corona_India_Updatenews360

இது முற்றிலும் உண்மையா? என்று கொஞ்சம் பார்க்கலாம். கொரோனா பரவலின் 2-வது அலை மிகக் கடுமையாக இருக்கும் என்று ஏற்கனவே உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து இருந்தது.

முதல்கட்ட பரவலை ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா பரவல் விகிதமும் அதனால் ஏற்பட்ட மரணமும் குறைவாக இருப்பதால் இந்தியா அலட்சியமாக இருக்கக்கூடாது என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியும் இருந்தது. இங்கே இந்தியா என்பது நாட்டை மட்டும் குறிக்கவில்லை, அது நாட்டு மக்களையும் சேர்த்தே குறிக்கிறது.

இதை உறுதிப்படுத்துவதுபோல் 15 நாட்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்த அன்றாட கொரோனா பாதிப்பு சுமார் 60 ஆயிரத்திலிருந்து திடீரென 2 லட்சத்து 30 ஆயிரமாக அதிகரித்துவிட்டது. தமிழ்நாட்டில் தேர்தலுக்கு முன்பு ஆயிரத்துக்கும் கீழாக கட்டுக்குள் இருந்த அன்றாட கொரோனா பாதிப்பு தற்போது 9 ஆயிரத்தை தொட்டுவிட்டது.

சரி, தேர்தல் நடந்து முடிந்த தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் மேற்கு வங்காள மாநிலங்களில்தான் கொரோனாவின் இரண்டாவது அலைவீச்சு கடுமையாக இருக்கிறது என்று நினைத்தால் தேர்தல் நடக்காத மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், குஜராத், ஹரியானா,பஞ்சாப் தெலுங்கானா, உத்தரகாண்ட், ராஜஸ்தான் ஆகியவற்றிலும் மிகுந்த அச்சமூட்டுவதாகத்தானே உள்ளது?

மராட்டிய மாநிலத்தில் மட்டும் ஒரே நாளில் 62 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 400 பேர் ஒரே நாளில் உயிரிழந்தும் உள்ளனர். எனவே தமிழகத்தில் தேர்தல் நடந்ததால்தான் கொரோனா பரவல் கடுமையாக இருக்கிறது என்று சொல்வது தவறான வாதம் என்றே கூறத் தோன்றுகிறது.

Modi - mamata - updatenews360

தற்போது இந்த கொரோனாவை மையமாக வைத்து, அரசியல் பிரச்சினைகளும் எழத் தொடங்கி விட்டன. சட்டப்பேரவைத் தேர்தலில் கடும் போட்டியை எதிர்கொண்டுள்ள மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சாடும் விதமாக, வெளியாட்கள் நமது மாநிலத்தில் கொரோனாவை பரப்பி விட்டு போய் விட்டனர் என்று சிறு பிள்ளைத்தனமாக குற்றம்சாட்டுகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் விவேக் மாரடைப்பால் மரணமடைந்ததையும் தற்போது அரசியல்வாதிகள் விவாதப் பொருளாக்கி விட்டனர். அவருடைய திடீர் மரணம் அனைவராலும் ஜீரணிக்க முடியாத ஒன்றுதான். என்றாலும் கூட அதையும் அரசியல் ஆக்குவது வேதனைக்குரியது.

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் கொரோனா வேகம் பிடித்தபோது அதற்கு தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லையே? என்பதுதான் பெரும்பாலானோரின் ஆதங்கமாக இருந்தது. அதனால் இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், சித்தா போன்றவற்றில் உள்ள மருந்துகளையும் அனைவரும் எடுத்துக் கொண்டனர். இதற்கு நல்ல பலனும் கிடைத்தது.

இதற்கிடையே மத்திய, மாநில அரசுகள் பொது முடக்கத்தை பலமுறை அமல்படுத்தின. அதன் மூலமும் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக கடந்த செப்டம்பர் மாதம் முதல் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன.

ஜனவரி மாதத்திற்கு பின்பு கொரோனாவுக்கு தடுப்பூசிகள் வந்ததால் மக்களிடையே அச்ச உணர்வு மெல்ல மெல்ல விலக ஆரம்பித்தது. கொரோனாவின் தாக்கம் ஒரு பக்கம் குறைந்து வந்த நிலையில் , இன்னொரு பக்கம் கோவாக்சின், கோவிஷீல்ட் எனும் தடுப்பூசிகள் பொதுப் பயன்பாட்டுக்கு வந்ததாலும் மக்களிடையே கொரோனா பற்றிய பயம் முழுமையாக நீங்கியது.

எனினும், இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள மக்கள் தயங்கிய நிலையில் தமிழகத்தின் பல தொலைக்காட்சி சேனல்கள் பிரதமர் மோடி, முதலில் ஏன் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ளவில்லை என்று விவாதங்களை நடத்தின. இது தமிழக மக்கள் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்வதை தடுக்கும் முயற்சியாகவே அமைந்தது.

மக்களிடம் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பதில் அவர்கள் அலட்சியமாக இருக்க இதுபோன்ற விவாதங்களும் காரணமாக அமைந்தன. இதனால்தான் தமிழகத்தில் 12 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்தை சரியான நேரத்தில் பயன்படுத்தமுடியாமல் போனது.

இப்போது கொரோனா வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் எண்ணம் மக்களிடையே தீவிரமாக எழுந்துள்ளது.

actor_vivek-_vaccination - updatenews360

இந்த நிலையில்தான் நடிகர் விவேக்கின் மரணம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதுடன் தொடர்புபடுத்தி பேசப்படுகிறது. இது பொருத்தமற்ற, நியாயமற்ற வாதம் என்பது மருத்துவதுறையில் உள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும். தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முன்பு, அதற்கான வழிகாட்டுதல் முறைகளை பொதுமக்கள் தெரிந்து கொள்வது அவசியம்.

“இப்போது வேண்டாம் பிறகு போட்டுக் கொள்ளலாம்” என்று நினைப்பவர்கள்,
பொது இடங்களில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பின்பு கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவுவது போன்றவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரை.

அதை மறக்காமல் கடைபிடித்து கொரோனாவிடம் இருந்து தற்காத்து கொள்வது நம் கைகளில்தான் இருக்கிறது!

Views: - 70

1

0