விதை….வித்தகர்….விவேக்: மக்களின் அன்பிற்குரிய கலைஞர் விடைபெற்றார்..!!

17 April 2021, 11:33 am
Quick Share

சமூக சீர்திருத்த கருத்துகளை மக்களுக்கு கொண்டு சேர்க்க திரைத்துறையை ஊடகமாக பயன்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த ஒப்பற்ற கலைஞன் விவேக் இன்று விடைபெற்றார்.

திரைப்படங்களில் நகைச்சுவை என்பது பொழுதுபோக்காக மட்டுமே பார்க்கப்பட்ட நிலையில், அதில் தனது சமூக சீர்த்திருத்த கருத்துகளை புகுத்தி, மக்களை மகிழ்வித்தவர், சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்படும் விவேக். சினிமாவில் பேசிய சமூக சீர்திருத்த கருத்துகளை மக்களுக்காக மட்டுமின்றி தனது வாழ்விலும் அதனை கடைபிடித்து அனைவருக்கும் முன் உதாரணமாக இருந்து, தனது 43 வருட கலையுலக பயணத்தில் இருந்து ஓய்வுபெற்றார் இந்த நாயகன்.

Vivek -Updatenews360

சின்னக் கலைவாணர் என்று அனைவராலும் அன்போடும் பாசத்தோடும் அழைக்கப்படும் நடிகர் விவேக்கின் இயற்பெயர் விவேகானந்தன். 1961ம் ஆண்டு நவ., 19ல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அங்கய்யா – மணியம்மாள் ஆகியோரின் மகனாக பிறந்தார். பள்ளிப்படிப்பை சொந்த ஊரிலேயே முடித்தவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்.காம் பட்டம் பெற்றார்.

rajini - vivek - updatenews360

திரைத்துறைக்கு வருவதற்கு முன் மதுரையில் டெலிபோன் ஆபரேட்டராகவும் அதன்பின் சென்னை வந்து டிஎன்பிஎஸ்ஸி குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்று தலைமைச் செயலகத்தில் இளங்கலை உதவியாளராகவும் பணியமர்த்தப்பட்டார். இடையிடையே மெட்ராஸ் ஹ்யூமர் கிளப்பில் பங்கெடுத்து ரசிகர்கள் முன்னிலையில் நகைச்சுவை நிகழ்ச்சியும் நிகழ்த்தி வந்தார்.

இந்த ஹ்யூமர் கிளப்பின் நிறுவனரான பி.ஆர்.கோவிந்தராஜன் மூலம் இயக்குநர் கே.பாலசந்தரின் அறிமுகம் கிடைத்து, 1987ஆம் ஆண்டு வெளிவந்த “மனதில் உறுதி வேண்டும்” திரைப்டத்தில் ஸ்கிரிப்ட் உதவியாளராக இருந்ததோடு மட்டுமின்றி கதையின் நாயகி சுஹாசினியின் சகோதரனாக நடிக்கும் வாய்ப்பினை பெற்று ஒரு நடிகனாக தமிழ் திரையுலகிற்கு இயக்குநர் கே.பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டார்.

1961 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த விவேக், 80களின் இறுதியில் சின்னத்திரையில் அறிமுகமானார். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் பயிற்சிப் பட்டறையில் இருந்து பட்டைத் தீட்டப்பட்ட வைரங்களில் விவேக்கும் மிக முக்கியமானவர். 1987 இல் வெளியான ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் சிறிய வேடத்தில் தோன்றியதன் மூலம், வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்த அவர், அதனைத் தொடர்ந்து நடித்த ‘புது புது அர்த்தங்கள்’ படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனிக்கவனம் பெற்றார்.

தனது முந்தைய படங்களில் ஒல்லியான தேகம், பெரிய கண்ணாடியுடன் அவர் பேசிய ‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’ என்ற வசனம் விவேக்கை மிகவும் பிரபலமாக்கியது. ‘கேளடி கண்மணி’, ‘இதயவாசல்’, ‘நண்பர்கள்’ என அடுத்தடுத்து பல படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்த விவேக், ‘உழைப்பாளி’, ‘வீரா’ என ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

அடுத்த தலைமுறை நாயகர்களான பிரசாந்த், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், மாதவன், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும், தவிர்க்க முடியாத அளவிற்கு, அவர்களின் நண்பனாக காமெடியில் கலக்கிய விவேக்கை, ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். பஞ்ச் அடிப்பது, அடுக்கு மொழி வசனங்கள் பேசுவது என, நாயகர்களுக்கு இணையாக, ரசிகர்களின் விசில் சப்தங்களும், கைத்தட்டல்களும் விவேக்கிற்கும் சொந்தமானது.

90களின் பிற்பகுதியில் வெளிவந்த ‘காதல் மன்னன்’, ‘உன்னைத்தேடி’, ‘வாலி’ போன்ற அஜித் படங்களிலும், பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த ‘கண்ணெதிரே தோன்றினாள்’, ‘பூமகள் ஊர்வலம்’, ‘ஆசையில் ஓர் கடிதம்’ போன்ற படங்களில் நாயகனின் நண்பனாக வந்து நகைச்சுவையில் தனி முத்திரை பதித்தார்.

நாயகர்களின் நண்பனாக படங்களில் தோன்றினாலும், ஒரே மாதிரியான நகைச்சுவையை வழங்காமல், சமூக சீர்த்திருத்த கருத்துகளை மிக நேர்த்தியாக தனது வசனங்களில் உட்படுத்தி, அதன் வழியாக புதிய புரட்சிகளை செய்தார். ஜாதிய பாகுபாடு, பெண்ணடிமைத்தனம், சிசுக் கொலை, மூட நம்பிக்கை, லஞ்சம், ஊழல் போன்ற சமூகத்தில் புரையோடிக் கிடந்த பல அவலங்களை, நகைச்சுவைகள் மூலம் தோலுரித்துக் காட்டியதோடு, அவைகள் குறித்து அனைவரையும் சிந்திக்கவும் தூண்டினார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்குப் பிறகு, நகைச்சுவைகளில் சமூக சீர்த்திருத்தங்கள் பற்றி அதிகம் பேசியதே, விவேக்கிற்கு சின்ன கலைவாணர் என்ற பெயர் வருவதற்கும் காரணமானது.

200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள விவேக் நான்தான் பாலா, வெள்ளை பூக்கள் போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். ஓரிரு படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார்.
‘மிடில் கிளாஸ் மாதவன்’, ‘மனதைத் திருடிவிட்டாய்’ உள்ளிட்ட சில படங்களில், வைகைப்புயல் வடிவேலுவுடன் இணைந்து விவேக் அடித்த லூட்டிகள், ரசிகர்களின் வயிறை பதம் பார்த்தன. விவேக் நடித்த பல படங்கள், வணிக ரீதியான வெற்றியடைய அவரது நகைச்சுவைகள் பெரும் பலமாக அமைந்தன. ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’, ‘நீங்க வெறும் தாஸா, இல்ல லாடு லபக்கு தாஸா..?’, ‘எனக்கு ஐ.ஜி-யை நல்லா தெரியும்!, ஆனா அவருக்கு என்ன தெரியாது’, ‘எரிமலை எப்படி வெடிக்கும்’ போன்ற வசனங்கள் விவேக்கின் ட்ரேட் மார்க் வசனங்கள்.

2020 ஆம் ஆண்டு வெளியான தாராள பிரபு படத்தில் இறுதியாக நடித்திருந்தார். சினிமாவில் விவேக் செய்த சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக மிக உயரிய விருதான பத்மஸ்ரீ, ஏசியாநெட் திரைப்பட விருதுகள், தமிழக அரசின் விருதுகள், பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

சினிமாவில் தான் பேசி நடித்த சமூக சீர்திருத்தக் கருத்துக்களை சினிமாவோடு விட்டு விடாமல் தனது நிஜ வாழ்விலும் கடைபிடித்து வந்தார் நடிகர் விவேக். உதாரணத்திற்கு நாட்டின் வறட்சிக்கு காரணம் மழையின்மை. மழையின்மைக்கு காரணம் மரங்களின் அழிவு. மரங்களின் அழிவுக்கு காரணம் நாம். எனவே செழிப்பான நாட்டை உருவாக்க நாடு முழுவதும் மரம் நடவேண்டும் என்ற கொள்கையை எடுத்துரைக்கும் வகையில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவேன் என கூறி நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதையும் தனது நிஜ வாழ்வில் சாத்தியப்படுத்தி வருவதோடு பிறருக்கு ஒரு வழிகாட்டியாகவும் வாழ்பவர் நடிகர் விவேக்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மீது அதீத அன்பு கொண்டவர் நடிகர் விவேக். அவரை முன்மாதிரியாக கொண்டு தன் வாழ்க்கையில் பல விஷயங்களை மாற்றிக் கொண்டவர். அதோடு அப்துல் கலாமின் பசுமை இந்தியா திட்டத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றதில் விவேக்கிற்கு முக்கிய பங்கு உண்டு. தான் எங்கு பேச சென்றாலும் அப்துல் கலாமை நினைவுக்கூறாமல் அவர் பேசியது குறைவே என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அவர் மீது பற்று கொண்டிருந்தார். தமிழகம் முழுவதும் பல லட்சம் மரங்களை நட்டு, அளப்பெரிய சாதனைகளையும் செய்த சின்ன கலைவாணர் விவேக், தமிழ் சினிமாவின் மாபெரும் சகாப்தமே

Views: - 39

0

0