பெண் குழந்தைகளின் பாதுகாப்பை விட சமந்தா பிரச்சனை முக்கியமா…? கொந்தளித்த நடிகை கஸ்தூரி..!!

Author: Babu Lakshmanan
16 December 2021, 7:02 pm
Quick Share

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்கள் என்றழைக்கப்படும் தொலைக்காட்சிகளும், குறிப்பாக செய்தி சேனல்கள் ஊடக தர்மத்துடன் நடந்து கொள்வதில்லை என்ற எண்ணம் பரவலாக மக்களிடம் காணப்படுகிறது.

ஊடக தர்மம்

அதாவது தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் பரபரப்பாக பேசப்பட்ட சமூகம் சார்ந்த அத்தனை விஷயங்களையும், பிரச்சினைகளையும் பெரும்பாலான டிவி செய்தி சேனல்களும், நாளிதழ்களும் பெரும் விவாதப் பொருளாக்கி அலசி ஆராய்ந்தன. சமூகத்தில் பெரும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தின.

காஷ்மீர், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில் நடந்த பாலியல் கொடூரங்கள், துப்பாக்கி சூடுகள், அரசியல் மற்றும் சமூக அநீதிகள், அவலங்கள், விவசாயிகளின் போராட்டம் போன்றவற்றில் பொங்கியெழுந்து தமிழக மக்களிடம் அகில இந்திய செய்திகளை விரிவாக கொண்டு போயும் சேர்த்தன.

Jayaraj Fenix -Updatenews360

தமிழகத்திலும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு, சென்னையில் அதிமுக நிர்வாகி வைத்த பிளக்ஸ் பேனர் சரிந்து பெண் என்ஜினீயர் மீது விழுந்ததில் அவர் தண்ணீர் லாரியில் அடிபட்டு பரிதாப மரணம் அடைந்தது, சாத்தான்குளத்தில் போலீஸ் கஸ்டடியில் இருந்த தந்தை-மகன் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம், தீபாவளி நேரத்தில் திருச்சிக்கு அருகே ஒரு சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த துயரச் சம்பவம், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு, சென்னை சேலம் 8 வழிச்சாலை போராட்டம் ஆகியவற்றை முழுமையாக மக்களுக்கு தெரியப்படுத்தின.

7 மாதங்களாக மவுனம்

ஆனால் கடந்த 7 மாதங்களில் விழுப்புரம் அருகே அமைச்சரின் நிகழ்ச்சிக்காக சாலையில் திமுக கொடிக்கம்பம் ஊன்றிய 13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி, ஜூன் மாதம் கொடைக்கானலில் 15 வயது சிறுமி 3 கயவர்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட கொடுமை, அக்டோபரில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் முறையாக கொள்முதல் செய்யாததால் மழை நீரில் நனைந்து சேதமடைந்த பல லட்சக் கணக்கான மூட்டை நெல் மணிகள்,

நவம்பர் மாதம் பெய்த கனமழையால் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்த சென்னை நகரம், அதனால் மக்களுக்கு ஏற்பட்ட பெரும் பாதிப்பு, மழைநீரில் மூழ்கிய மூன்று லட்சம் ஏக்கர் விவசாய பயிர்கள், தொழிற்பூங்கா அமைப்பதற்காக கோவை அன்னூர் அருகே 3832 ஏக்கர் விளைநிலத்தை கையகப்படுத்த திமுக அரசுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு, ராமநாதபுரம் கல்லூரி மாணவர் மணிகண்டன் காவல் நிலையத்தில் போலீஸ் விசாரணைக்கு பின்பு இரண்டு நாட்கள் கழித்து மரணமடைந்த விவகாரம், இரு தினங்களுக்கு முன்பு முதலமைச்சரின் சொந்த தொகுதியான கொளத்தூரில் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி சாலை மேம்பால விரிவாக்கத்திற்காக ஒரே நேரத்தில் விளிம்புநிலை மக்களின் 58 வீடுகள் இடிப்பு, மிக அண்மையில் கொடைக்கானல் அருகேயுள்ள பாச்சலூரில் 5-ம் வகுப்பு மாணவி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட பயங்கரம்,
என்று எதையுமே அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் அதிகம் கண்டுகொள்ளவே இல்லை.
ஒரு சில ஊடகங்கள் அன்றாடம் வெளியிடும் பல நூறு செய்திகளில் ஒன்றுபோல இதையும் மிகச் சிறிய அளவில் வெளியிட்டு கடந்து போய்விட்டன.

எங்களையே குறிவைக்கிறீர்கள்

அண்மையில் இது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது கவலையை தெரிவித்தார். “நாங்கள் ஆட்சி நடத்தியபோதும் எங்களுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டீர்கள். இப்போது நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கிறோம். ஆனாலும் எங்களைத்தான் குறிவைத்தே செய்திகளை வெளியிடுகிறீர்கள். திமுக அரசின் குறைகளை சுட்டிக்காட்ட மறுக்கிறீர்கள். இது ஏனென்று தெரியவில்லை” என்று மனம் நொந்து கூறினார். ஆனால் அவர் இப்படி நாகரீகமாக சொன்ன கருத்து கூட பல ஊடகங்களில் வெளியாகவில்லை என்பதுதான் இதில் வேடிக்கை.

ஒப்பாரி வைத்தீர்கள்?

தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா சில தனியார் டிவி செய்தி சேனல்களை கடுமையாகவே சாடினார்.

H Raja - Updatenews360

“சாத்தான்குளம் சம்பவத்தை எத்தனை நாள் தொடர்ந்து விவாதமாக நடத்தினீர்கள்,
ஒப்பாரி வைத்தீர்கள்?… திருச்சியில் ஆள்துளை கிணறில் விழுந்த சிறுவன் மீட்பு நிகழ்வை எத்தனை நாள் காட்டினீர்கள்?.. இப்போது ராமநாதபுரம் கல்லூரி மாணவர் மணிகண்டன் விவகாரத்தை ஏன் விவாதிக்க தயங்குகிறீர்கள்?…என்று கிடுக்குப்பிடி கேள்வியும் எழுப்பினார்.

மணிகண்டனின் மரணத்தில் சில கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். “போலீஸ் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன், விடுவிக்கப்பட்ட பின்பு வலிப்பு நோயால் இறந்துவிட்டதாக முதலில் கூறப்பட்டது. பாம்பு கடித்து விட்டதாகவும் சொல்லப்பட்டது. மறு பிரேத பரிசோதனைக்கு பின்பு அவர் விஷம் அருந்தி இறந்ததாக சொல்கிறார்கள். முதல் முறையாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் இது எப்படி தெரிய வராமல் போனது?…”என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அதில்லை மேடம்

இந்த நிலையில்தான், தமிழகத்தில் முன் களப்பணியாளர்கள் என்றழைக்கப்படும் ஊடகவியலாளர்கள் எப்படிப்பட்ட விவாதங்களை செய்தி சேனல்களில் தற்போது முன்னெடுக்கிறார்கள் என்பதை பிரபல சமூக செயற்பாட்டாளரும், நடிகையுமான கஸ்தூரி மனவருத்தத்துடன் டுவிட்டரில் ஒரு பதிவாக போட்டுள்ளார்.

அதில், “பெரிய டிவி சேனலில் இருந்து அழைப்பு.
நான் : ” கொடைக்கானல் கொடூரத்தை பற்றித்தானே? சமீப காலமாக பெண்களுக்கு எதிராக பெருகி வரும் பாலியல்-…

kasthuri - updatenews360

ரிப்போர்ட்டர்: ” அதில்லை மேடம். சமந்தா பாடல் சர்ச்சை பற்றி…”

உணர்வுப் பூர்வமான ஏதாவது ஒரு விஷயத்தை விவாதிக்க நேர்ந்தால் அது தங்களை சிறையில் தள்ளிவிடும் என்ற அச்சமாக இருக்குமோ?…

இன்னும் நாலு வருஷம் இப்பிடித்தான் போல. வாழ்க முன்களப்பணி” என்று சில செய்தி சேனல்களை நாசுக்காக கஸ்தூரி வஞ்சப் புகழ்ச்சி செய்திருக்கிறார்.

“இந்தக் கொடூரச் செயல் பற்றி தான் விவாதிக்க தயாராக இருக்கும் நிலையில், சமந்தா படப்பாடல் சர்ச்சை பற்றி விவாதம் நடத்த செய்தி சேனல் ஆர்வம் காட்டுவது சரியா?… கொடைக்கானலில் 10 வயது மாணவி படுகொலை செய்யப்பட்ட அக்கிரமம், அட்டூழியம், அநியாயம் உங்கள் கண்களுக்கு தென் படவில்லையா?…அடுத்த நான்கு ஆண்டுகளும் இப்படித்தான் நடந்து கொள்வீர்கள் போலிருக்கிறது, என்ற மனக் குமுறல், வேதனை அவருடைய பதிவில் தெரிகிறது.

இன்றைய அரசியல் சூழலை பல்வேறு விதங்களில் மறைமுகமாக சுட்டிக்காட்டும் நடிகை கஸ்தூரியின் பொருள் பொதிந்த இந்த ட்விட்டர் பதிவு தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

மாணவியின் கொடூர கொலையை கண்டிக்கும் விதமாக கஸ்தூரி இப்படி மனம் கொந்தளித்து இருப்பதை அனைத்து தரப்பினரும் வரவேற்று உள்ளனர்.

தன், பாலினத்தை சேர்ந்த ஒருவருக்காக, அரசியல் கட்சிகளின் பெண்ணியப் போராளிகளையெல்லாம் முந்திக்கொண்டு முதல் குரலை உயர்த்தி இருக்கும் நடிகை கஸ்தூரிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது!

Views: - 461

0

0