அரை நூற்றாண்டு அரசியல் வரலாற்றில் அசைக்க முடியாத அதிமுக : அரசியல் களத்தில் 8வது அதிசயத்தை நிகழ்த்த தயார் நிலையில் மக்கள் இயக்கம்..!

By: Babu
16 October 2020, 9:00 pm
admk -- updatenews360
Quick Share

சென்னை: “நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்

       இப்படை தோற்கின் எப்படை வெல்லும்”

என்ற நம்பிக்கையோடு 1972-ஆம் ஆண்டு தொடங்கிய அதிமுக தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் அசைக்க முடியாத சக்தியாக அரை நூற்றாண்டுக்காலம் வெற்றிப்பாதையில் பயணித்துள்ளது. கட்சி தொடங்கி 5 ஆண்டுகளில் நடந்த முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்து வரலாறு படைத்த அதிமுக, அதன்பின் ஏழுமுறை சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று 29 ஆண்டுகள் தமிழகத்தில் அரியணையில் இருந்து சாதனை படைத்த மாபெரும் மக்கள் இயக்கமாகத் திகழ்கிறது.

1971-ஆம் ஆண்டு ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரின் பிரச்சாரத்தால் பிரமாண்டமான வெற்றியைப் பெற்ற திமுக, மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்திலும், மத்தியில் ஆண்ட இந்திரா காங்கிரசுடன் கூட்டணியிலும் இருந்த சோதனையான சூழலில், ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே’ என்ற துணிவோடு அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி ஆட்சியில் ஊழல்களை எதிர்த்து ‘உரிமைக்குரல்; எழுப்பினார் எம்.ஜி.ஆர்.

MGR-updatenews360

“தோட்டம் காக்க போட்ட வேலி பயிரைத் தின்பதோ

அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ

நானொரு கை பார்க்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன்

பூனை அல்ல புலிதான் என்று போகப் போகக் காட்டுகிறேன்”

என்று வெளிப்படையாக அறைகூவல் விடுத்தார்.

திமுகவில் பதவியில் இருக்கும் அனைவரும் தங்களின் சொத்துக்கணக்கை வெளியிட வேண்டும் என்று போர்க்குரல் கொடுத்தார். இதனால் திமுகவைவிட்டு எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டார். ஒட்டுமொத்த தமிழ்நாடும் கொந்தளித்தது. ஊழல் ஆட்சியை ஒழித்து தூய்மையான ஆட்சியை அமைக்க சூளுரைத்து அதிமுகவின் மூவண்ணக்கொடியை உயர்த்தினார்.

கட்சி தொடங்கியபின் கடுமையான சோதனைகளையும், வன்முறையையும் அதிமுக எதிர்கொண்டது. அவர் நடித்த திரைப்படங்களை வெளியிடுவதுகூட வன்முறையாலும், அராஜகத்தாலும் தடுக்கப்பட்டது. அதையும் மீறி வெளியிடப்பட்ட அவரது திரைப்படங்கள் பெரும் வெற்றிபெற்றன. திரைப்படங்கள் வாயிலாக அவர் சொன்ன கருத்துகள் பட்டிதொட்டியெங்கும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்தன. நீதியின் தீபங்கள் ஏந்திய கைகளின் இலட்சியப் பயணம் தொடர்ந்தது.

திண்டுக்கல்லில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல், அதிமுக சந்தித்த முதல் தேர்தல். அதில் ‘இரட்டை இலை’ சின்னத்தில் களம் கண்ட அதிமுக வென்றது. திமுக மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. திமுக பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் தனிக்கட்சி கண்டபின் திடீரென்று கருணாநிதியின் கண்களுக்கு ‘மலையாளி’யாகத் தெரிந்தார். தொடர்ந்து ‘நடிகர் நாடாள முடியுமா?’ என்ற பிரச்சாரத்தையும் திமுக கையில் எடுத்தது. அந்தப் பேச்சுகளுக்கு திரைப்படங்கள் மூலமாகவே எம்.ஜி.ஆர் பதிலடி கொடுத்தார்.

‘உரிமைக்குரல்’ படத்தின் இறுதிக்காட்சியில் ‘இந்த மண்ணில் இருந்து என்னைப் பிரிக்க முடியாது. என் ரத்தம் வடிந்தால் இந்த மண்ணில்தான் விழும். என் உடல் கீழே விழுந்தால் இந்த மண்ணைத்தான் அணைக்கும். என் உயிர் போனால் இந்த மண்ணில்தான் போகும்.”, என்ற வசனத்தின் மூலம் தான் மலையாளி என்ற ஏச்சுக்களுக்கு உணர்ச்சிகரமான பதில் சொன்னார் எம்.ஜி.ஆர். தமிழர்கள் அவரை ‘எங்கள் வீட்டுப்பிள்ளை’ என்று ஏற்றுக்கொண்டு, 1977-ஆம் ஆண்டு அவர் சந்தித்த முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வராக ஆக்கினார்கள்.

ஆளத்தெரியுமா என்று கேட்டவர்கள் மலைக்கும் விதத்தில் நல்லாட்சியை அவர் வழங்கினார். ஊழல் இல்லாத நிர்வாகத்தை அளித்ததுடன், ஏழை மக்களின் உணவுப்பொருட்களின் விலையும் பேருந்து, மின்சாரக்கட்டணங்களும் உயராமல் ஏழைகளுக்கான ஆட்சியை அவர் தந்தார். பெரியார் நூற்றாண்டை சிறப்பாகக் கொண்டாடியதுடன் பெரியாரின் எழுத்து சீர்திருத்தத்தையும் நடைமுறைப்படுத்தினார்.

இரண்டாவது முறை ஆட்சி அமைத்தபோது இலவச சத்துணவுத் திட்டத்தை நிறைவேற்றினார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தினார். 1983-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது தமிழ்நாடு ஒட்டுமொத்தமாகக் கிளர்ந்து எழுந்தது. ‘மலையாளி’ என்று வசைபாடப்பட்ட எம்.ஜி.ஆர். தமிழ் ஈழக்கோரிக்கையை ஆதரித்தார்.

வெறும் உதட்டளவில் வசனம் பேசுபவர்கள் போல் இல்லாமல் தமிழ் ஈழக் கோரிக்கைக்கு உயிர் கொடுத்துப் போராடும் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் வாங்குவதற்காக பல நூறு கோடி ரூபாய் நிதியை தனது சொந்தப் பணத்தில் இருந்து அள்ளியள்ளி வழங்கினார். காவிரி ஆணையம் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தமிழ்நாட்டின் சட்டப்போரட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

அவர் உடல்நலம் இல்லாமல் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபோது இலங்கை சென்ற இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடன் போரைத் தொடங்கியது. அப்போது, இந்திய ராணுவத்தின் செயலைக் கண்டித்து அமெரிக்காவில் இருந்த எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டில் ஆறு மணி நேரம் கடையடைப்பை அறிவித்து நடத்தினார். இறுதிவரை விடுதலைப்புலிகளின் ஆதரவாளராக இருந்த எம்.ஜி.ஆர் மறைந்தபோது, விடுதலைப்புலிகளின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

விடுதலைப்போரில் உயிரிழக்கும் புலிகளின் தலைவர்களுக்கு மட்டுமே இரங்கல் தெரிவித்து வந்த புலிகளின் தலைவர், எம்.ஜி.ஆர் மரணம் அடைந்தபோது, வீரவணக்கம் செலுத்தி அறிக்கை வெளியிட்டார். அவர் ஆட்சியில் இருந்தவரை தாயகத் தமிழர்கள் மகிழ்ச்சியுடனும், ஈழத்தமிழர்கள் பாதுகாப்புடனும் வாழ்ந்தார்கள். ‘உயிருள்ளவரை ஒரு துன்பமில்லை. இவர் கண்ணீர்க்கடலிலே விழமாட்டார்’ என்று அவர் பாடியது உண்மையாகவே அமைந்தது.

எம்.ஜி.ஆரின் மரணத்துக்குப் பின் அதிமுக அழிந்துவிடும் என்று எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி பல விமர்சகர்களும் கணித்தபோது, அந்த ஆருடங்களைப் பொய்யாக்கி மீண்டும் ஜெ.ஜெயலலிதா தலைமையில் 1991-ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தது அதிமுக. மீண்டும் 2001, 20011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அவர் வாகை சூடினார். அவரது காலத்தில் எம்.ஜி.ஆர் காட்டிய வழியில் நல்லாட்சி தொடர்ந்தது. அவர் தொடங்கிவைத்த தொட்டில் குழந்தைத் திட்டம் பெண் குழந்தைகளைக் கருவிலேயே கள்ளிப்பால் கொடுத்துக் கொலை செய்யும் பாதகத்தைப் பெரிதளவும் தடுத்தது. 69-சதவீத இட ஒதுக்கீட்டுக்குப் பாதிப்பு வந்தபோது அதை ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்து அந்த ஒதுக்கீட்டைப் பாதுகாத்தார் ஜெயலலிதா.

‘மலையாளி’ என்று பழிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் ஆட்சியில் பாதுகாக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 2009-ஆம் ஆண்டு ‘தமிழினத்தலைவர்’ என்று பட்டம் சூட்டிக்கொண்ட கருணாநிதி, மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோது குழந்தைகளும், பெண்களும், முதியவர்களும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கூட்டம் கூட்டமாக கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். மானத்தையே உயிராகக் கருதும் தமிழ்ப்பெண்கள் சிறுமிகள் முதல் வயதானவர்கள்வரை கொடூரமான பாலியல் சித்ரவதைகளுக்கும், கற்பழிப்புகளுக்கும் உட்படுத்தப்பட்டனர். 2011-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி அமைந்தபோது இலங்கைத் தமிழர் படுகொலைக்கு சர்வதேச விசாரணை கேட்டும் தனித் தமிழ் ஈழம் அமைவதற்கு ஈழத்தமிழர்கள் பொதுவாக்கெடுப்பு கோரியும் சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து சட்டப் போராட்டங்களின் மூலமாக காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதில் வெற்றிகண்டு காவிரி உரிமையை மீட்டு ‘பொன்னியில் செல்வி’ ஆனால் ஜெயலலிதா. முல்லைப்பெரியாறு அணையிலும் 142 அடி வரை நீர் தேக்கலாம் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பெற்றுத்தந்தார் அவர். நோய்வாய்ப்பட்டு மருத்துவமனியில் சிகிச்சையில் இருந்தபோதும் காவிரி வழக்கு தொடர்பான அறிவுரைகளை அவர் அதிகாரிகளிடம் கூறிவந்தார்.

அவரது மறைவைத் தொடர்ந்து அதிமுக அழிந்துவிடும் என்று மீண்டும் பலரும் கனவுகண்டனர். கருத்துகளையும் பரப்பினர். ஆனால், இன்று வரை அதிமுக ஆட்சி தொடர்கிறது. தற்போது முதல்வராக உள்ள நீர் வளம் குன்றிய தமிழ்நாட்டில் இருக்கும் நீர்நிலைகளைப் பாதுகாக்க குடிமராமத்துத் திட்டத்தைத் தொடங்கினார். இடைவிடாத சட்டப் போராட்டங்களால் காவிரி ஆணையம் உருவாகக் காரணமாயிருந்து மாநிலத்தின் காவிரி உரிமையைக் காத்தார்.

EPS-ops-updatenews360

கொரோனாவால் தமிழ்நாடு அதிகமாகப் பாதிக்கப்பட்டபோது இடைவிடாத நிர்வாக நடவடிக்கைகளினால் கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்தி பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டையும் பெற்றார். கொரோனாக் காலத்திலும் கடுமையான ஊரடங்கு நேரத்திலும் நிதி உதவித் திடடங்களை செயல்படுத்தியும் பொது உணவுத்திட்டத்தில் இலவசமாக உணவுப்பொருட்களை வழங்கியும் மக்களைப் பாதுகாத்த முதல்வர் பழனிசாமி மக்களின் வாழ்க்கை தேவைகளைக் கருதி உரிய நேரத்தில் தளர்வுகளைத் தந்து பொருளாதார நடவடிக்கைகளையும் வேகப்படுத்தியுள்ளார் புதிய தொழில் முதலீடுகளையும் ஈர்த்துள்ளார்.

2021 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க தற்போது தயார்நிலையில் இருக்கிறது. தொடர்ந்து 2011, 2016 தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றிய அதிமுக மூன்றாவது தொடர் வெற்றியை நோக்கிக் உறுதியுடன் களம் இறங்கியுள்ளது. 2021-ஆம் ஆண்டு அதிமுக தொடங்கியதன் பொன்விழா கொண்டாடப்படும். அப்போதும் அதிமுக ஆட்சியில் இருக்கும் என்று அதன் தலைவர்களும் தொண்டர்களும் நம்பிக்கையுடன் பயணத்தைத் தொடர்கிறார்கள்.

Views: - 96

0

0