3 மணிநேர சந்திப்பு… எல்லாம் ஓகே… அதிமுகவுடன் பேச்சுவார்த்தை தொடரும் : அண்ணாமலை சொல்வது என்ன..?

Author: Babu Lakshmanan
29 January 2022, 5:46 pm
Quick Share

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் பாஜகவினர் சந்தித்து பேசிய பிறகு, முக்கிய தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் பிப்.,19ம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை 22ம் தேதி நடக்கிறது. நேற்று முதல் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. தேர்தல் அறிவிப்பு வெளியான 2வது நாளே வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளதால், அரசியல் கட்சிகளுக்கு கூட்டணி, இடப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கால அவகாசம் இல்லை என்று புலம்பி வருகின்றன.

இருப்பினும், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைமையில் கூட்டணி, இடப்பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகள் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி வருகின்றன.

அந்த வகையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இட பங்கீடு தொடர்பாக அதிமுக-பாஜக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தைக்கு பிறகும், இடஒதுக்கீடு ஏதும் உறுதி செய்யப்படவில்லை. நாகர்கோவிலில் மேயர் பதவியை பாஜக கோருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அதிமுக ஏற்றுக் கொள்கிறதா..? இல்லையா..? என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த பின்னரே தெரிய வரும்.

அதிமுகவுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு 4-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நேரம் இருக்கிறது. எனவே, பேச்சுவார்த்தையை முடித்திருக்கிறோம். இன்னும் பேச்சுவார்த்தையை தொடருவோம். இதில் பின்னடைவு, சிக்கல் போன்றவை எதுவும் கிடையாது, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது சிக்கலான வேலை.

குறிப்பாக, அதிமுக தலைமையிலான கூட்டணி, முக்கியமான எதிர்கட்சியாக இருக்கும் கூட்டணி, பலமான எதிர்கட்சியாக நின்று, மக்கள் மன்றத்தில் திமுக மீதான பிரச்சனைகள், அதிருப்தியை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். தேர்தல் பிரச்சாரத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே, இதனையெல்லாம் பொறுத்துதான் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும்.

மாவட்டத் தலைவர்களுடன் கலந்து பேச வேண்டும். நாங்கள் ஒரு கருத்து சொல்லுவோம், பெரிய கட்சியாக இருக்கிற அதிமுக ஒரு கருத்து வைத்திருப்பார்கள். மாவட்டத் தலைவர்களுடன் அவர்கள் பேசித்தான் எதுவும் சொல்ல முடியும். எனவே, பேச்சுவார்த்தை நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது. அது முடிந்தவுடன் முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதில் எத்தனை சதவீத இடங்கள், எதிர்பார்ப்புகள் என்ற கேள்வி இல்லை. எங்களை பொறுத்தவரை, சில கருத்துகளை கூறுகிறோம், எந்தப் பகுதி எப்படி உள்ளது என்று. பெரிய கட்சி அதிமுக, குறிப்பாக நகர்ப்புற தேர்தலில் வந்து நிறைய இடங்களில் பாஜக வலுவாக உள்ளது. இதற்குமுன் 2011-ல் தனியாக நின்ற போதுகூட வெற்றி பெற்றிருக்கிறோம். கூட்டணி சார்பாக போட்டியிட்டும் வென்றுள்ளோம். பேச்சுவார்த்தை முடிந்தபின் விரிவாக எத்தனை இடங்களில் போட்டி என்பது குறித்து அறிவிக்கப்படும், என தெரிவித்துள்ளார்.

Views: - 535

0

0