திமுகவுடன் ரகசிய பேச்சு… சசிகலாவுடன் சுமூக உறவு … இரட்டை வேடம் போடுவது ஏன்…? கிடுக்குப்பிடி கேள்விகளால் தடுமாறும் ஓபிஎஸ்!!!

Author: Babu Lakshmanan
28 June 2022, 3:50 pm
Quick Share

அதிமுகவில் எந்த பதவியில் இருக்கிறார் என்பதே கேள்விக்குறியாக உள்ள நிலையில் காணப்படும் ஓ பன்னீர்செல்வம், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே தனது அரசியல் பாதையையும் பயணத்தையும் மாற்றிகொண்டு விட்டார் என்பதை அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் இருந்தும் அறிந்து கொள்ளலாம்.

தொண்டனின் கேள்வி

இதற்கு காரணம், என்ன என்பதை ஓபிஎஸ்சை நன்கு கூர்ந்து கவனித்து வரும் அதிமுகவின் ஒவ்வொரு தொண்டனும் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளனர்.

OPS - Updatenews360

2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்தபோது நான்கரை ஆண்டு காலம் தமிழகத்தை சிறப்பாக ஆட்சி செய்த எடப்பாடி பழனிசாமியைத்தான் நிறுத்த வேண்டும் என அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் என்று அனைத்து தரப்பினரும் ஏகமனதாக விரும்பியபோது, அதை ஏற்க மனமில்லாமல் தனக்குத்தான் அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று முரண்டு பிடித்தது யார்?…நீங்கள்தானே ஓபிஎஸ்?… என்று அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதுபோன்ற இன்னும் ஏராளமான கிடுக்குப்பிடி கேள்விகள் அதிமுக தொண்டர்களின் அடி மனதில் ஆழமாக பதிந்து போய் உள்ளது. அவற்றையும் இங்கே பார்ப்போம்.

மறைமுக பேச்சு

உங்களது முதலமைச்சர் வேட்பாளர் முயற்சி பலிக்காத நிலையில், மறைந்த புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்த சசிகலா, டிடிவி தினகரன் குடும்பத்தினரை மீண்டும் அதிமுகவில் சேர்த்து அதிகாரமிக்க உயர் பதவிகளை வழங்குவதற்கு நீங்கள் மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபட்டீர்களா?…இல்லையா?… இதற்காக சில பிரபல ஆடிட்டர்களின் உதவியை நீங்கள் அவர்களுக்குப் பெற்றுக் கொடுத்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளதே…அது எங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறீர்களா?…

சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக எதிர்ப்பில் எம்ஜிஆர் ஜெயலலிதா போல
உறுதியாக உள்ள எடப்பாடி பழனிசாமி அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தார். ஆனால் நீங்கள் தேனி மாவட்டத்தை தாண்டவில்லையே? அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரமும் செய்யவில்லை.

திமுக வெற்றி

டிடிவி தினகரனின் வேட்பாளர்களால் 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்ததற்கும் நீங்கள் பிரச்சாரம் செய்யாததுதானே காரணம்?…

தவிர நீங்கள் தென்மாவட்டங்களில் தீவிர பிரசாரம் செய்திருந்தால் இன்னும் 20 முதல் 25 இடங்கள் வரை அதிமுக வெற்றி பெற்று இருக்கும். திமுக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்தும் இருக்காது. அதனால் மீண்டும் திமுக ஆட்சி அமைய நீங்கள்தான் காரணம் என்ற எங்களின் குற்றச்சாட்டை உங்களால் மறுக்க முடியுமா?…

ஒரே நேரத்தில் டிடிவி தினகரனுக்கும், திமுகவுக்கும் நீங்கள் ஆதரவாக செயல்பட்டதால் தானே அதிமுகவுக்கு இந்த நிலை ஏற்பட்டது. அப்படியென்றால் அதிமுக தலைமைக்கு எதிராக நீங்கள் செயல்பட்டதாகத்தானே அர்த்தம் ஆகிறது?….

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்த போதும் நீங்கள் சிக்கலை ஏற்படுத்தினார்கள். இதிலும் உங்களது சுயநலம்தான் வெளிப்பட்டது என்பதை உங்களால் மறுக்க முடியுமா?…

ஏன் இந்த இரட்டை வேடம்?

2017 பிப்ரவரி மாதம் நீங்கள் புரட்சித்தலைவியின் சமாதியில் அமர்ந்து சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியபோது, அம்மாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது? என்று ஒரு பெரிய சலசலப்பை ஏற்படுத்தினீர்களே ஞாபகம் இருக்கிறதா?… ஆனால் கடந்த ஆண்டு ஆட்சி மாறிய நிலையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அதே சசிகலாவிற்கு நீங்கள் தானே நற்சான்று கொடுத்தீர்கள்?… திடீரென்று சசிகலா உங்கள் மனதில் புனிதர் ஆனது எப்படி…?

2017 ஆகஸ்ட் மாதம் சசிகலாவையும், தினகரனையும் அதிமுகவில் ஒருபோதும் சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் தானே 11 எம்எல்ஏக்களுடன் மீண்டும் அதிமுகவில் நீங்கள் இணைந்தீர்கள். இப்போது அதே சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளலாம் என்கிறீர்கள். சமீபகாலமாக டிடிவி தினகரனையும் ரகசியமாக பலமுறை சந்தித்துப் பேசி இருக்கிறீர்கள். ஏன் இந்த இரட்டை வேடம்?…

சட்டப் பேரவையில் கருணாநிதி எழுதிய பராசக்தி படத்தின் வசன புத்தகத்தை சிறு வயதில் மிகவும் விரும்பி படிப்பேன் என்று திமுக தலைவரை பாராட்ட உங்களுக்கு எப்படி மனம் வந்தது?… அவர்தானே 1972-ல் எம்ஜிஆரை திமுகவில் இருந்து நீக்கினார் என்பதை எப்படி மறந்தீர்கள்?…

சுமூக உறவு

புரட்சித்தலைவர் எம்ஜிஆரும், புரட்சித் தலைவி ஜெயலலிதாவும் தங்கள் வாழ்நாளின் இறுதிவரை எதிர்த்த ஒரு தலைவரை, அவருடைய கட்சியை உங்களால் புகழ்பாட எப்படி முடிந்தது? கொஞ்சமாவது யோசித்து இருந்தீர்கள் என்றால் நீங்கள் அப்படி பேசி இருக்க மாட்டீர்கள். அதனால் திமுகவை நீங்கள் நேரடியாக ஆதரிப்பது போலவே எங்களுக்கு தோன்றுகிறது.

உங்கள் மகனும், தேனி நாடாளுமன்றத் தொகுதி எம்பியுமான ரவீந்திரநாத் இன்னும் ஒரு படி மேலே போய் முதலமைச்சர் ஸ்டாலினை சென்னை கோட்டையில் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியதுடன் திமுக ஆட்சி மிக சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டு சான்றிதழும் கொடுக்கிறார்.

எம்ஜிஆர்,ஜெயலலிதா காலத்தில் இப்படி அதிமுக பிரமுகர் ஒருவர் நடந்து கொண்டிருந்தால் உடனடியாக என்ன நடந்திருக்கும் தெரியுமா?… அவர் கட்சியில் இருந்தே தூக்கி எறியப்பட்டு இருப்பார்.

ஸ்டாலின் அரசை பாராட்டியவர் உங்கள் மகன் என்பதால் அதை நீங்கள் இதுவரை கண்டிக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?… அதேநேரம், திமுக ஆட்சியின் அவலங்களை எதிர்த்து குரல்கொடுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, பொதுச் செயலாளர் பதவியை விட்டுத்தர மறுக்கிறீர்கள். இதற்கு பதிலாக நீங்கள், உங்கள் மகன் மற்றும் ஆதரவாளர்களுடன் திமுகவிலேயே இணைந்து விடலாம்.

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து, நள்ளிரவில் கோர்ட்டு கதவுகளை தட்டுகிறீர்கள்.
அதிமுக தொண்டர்களின் மனதில் இருப்பதை அறியாமல் கட்சித் தலைமைக்கு எதிராக நள்ளிரவில் கோர்ட்டுக்குப் போன தலைவர் என்ற உலக வரலாற்றில் நீங்கள் ஒருவராகத்தான் இருப்பீர்கள்!

உங்கள் மீதான நம்பகத்தன்மை எங்களிடம் அடியோடு, தகர்ந்து போய்விட்டது. எனவே திமுக எதிர்ப்பு நிலையை உயிர்மூச்சாக கொண்டுள்ள ஒருவர்தான் அதிமுகவின் தலைமைப் பதவியை வகிக்க வேண்டும் என்பது ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் விருப்பம்! அது, நிச்சயம் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதில் எந்த சந்தேகமும் எங்களுக்கு இல்லை. எனவே அவருக்கு வழி விட்டு ஒதுங்கி கொள்ளுங்கள். இல்லையென்றால் எஸ்டி சோமசுந்தரம், திருநாவுக்கரசர் போன்றோருக்கு நேர்ந்த நிலைதான் உங்களுக்கும் ஏற்படும்! அதற்கு நீங்கள் தயாரா?… என்று அதிமுக தொண்டர்களின் கிடுக்குப்பிடி கேள்விக் கணைகள் ஓ பன்னீர்செல்வத்தை நோக்கி பாய்கின்றன!

தனித்துவிடப்படுவார்

“இதற்கெல்லாம் ஓபிஎஸ் பதில் சொல்வாரா?. என்றால் நிச்சயம் மாட்டார் என்றே சொல்லவேண்டும்” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“கடந்த சில வருடங்களாகவே தமிழகத்தில் சமூக ஊடகங்களின் அரசியல் பங்களிப்பு உடனுக்குடன் வெளிப்படுவதால் அத்தனை கட்சிக்குள் நடக்கும் விஷயங்கள் தொண்டர்களிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. யாராவது ஒரு தரப்புக்கு ஆதரவாக வரிந்துகொண்டு பேசினாலும், அதை எளிதில் கண்டுபிடித்தும் விடுகின்றனர். இதனால்தான் நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் வெளியாகும் செய்திகளை விரிவாக மனதுக்குள் அலசி ஆராயும் நிலை நடுநிலையாளர்களிடமும் கட்சித் தொண்டர்களிடமும் இன்று அதிகம் காணப்படுகிறது. இதனடிப்படையில் பார்த்தால் அதிமுக தொண்டர்கள் ஓ.பன்னீர் செல்வத்திடம் எழுப்பும் கேள்விகள்
அத்தனையும் நியாயமாகவே தோன்றுகின்றன. ஏனென்றால் திமுக எதிர்ப்பு என்கிற ஒற்றை நிலைப்பாட்டில்தான் அதிமுக இதுவரை செயல்பட்டு வந்துள்ளது.
ஆனால் ஓபிஎஸ் வெளியிடும் அறிக்கைகளிலும், பேச்சிலும், கட்சி நடவடிக்கைகளிலும் இதை கொஞ்சம் கூடகாண முடியவில்லை. அது வெளிப்படையாகவே அதிமுக தொண்டர்களுக்கு தெரிகிறது.

கடந்த ஓராண்டில் கட்சித் தொண்டர்களின் நம்பகத்தன்மையை பெறும் விதமாக ஓபிஎஸ் ஒரு போதும் நடந்து கொண்டதில்லை. திமுகவின் B டீம் என்று அழைப்பது போல அவருடைய அத்தனை நடவடிக்கைகளும் உள்ளன. அதற்காக அவர் எந்த நிலைக்கும் செல்வார், அதிமுக ஆட்சியை கவிழ்க்க முயன்ற சசிகலாவையும், தினகரனையும் வெளிப்படையாக ஆதரிப்பார் என்றும் அதிமுக தொண்டர்கள் அச்சப்படுகிறார்கள். அதனால்தான் அந்த தொண்டர்களின் 99 சதவீத ஆதரவு எடப்பாடி பழனிசாமி பக்கம் திரும்பி விட்டது என்பதை உறுதியாக கூற முடியும். எடப்பாடியார் அதிமுக பொதுச்செயலாளர் ஆவதை தடுக்க ஓபிஎஸ் என்னதான் முயன்றாலும், அக்கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுக வலிவுடனும், பொலிவுடனும் செயல்படவேண்டும் என்பதில் மிகுந்த உறுதியாக இருக்கின்றனர். இதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால் ஓ பன்னீர்செல்வம் தனித்து விடப்படுவார் என்ற நிலைதான் தென்படுகிறது,” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Views: - 562

0

0