‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ அடித்த எடப்பாடியார் : ஓய்ந்தது ஓபிஎஸ் அலை..!

Author: Babu
7 October 2020, 1:37 pm
eps cm- updatenews360
Quick Share

கடந்த சில நாட்களாக அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் குழப்பம் நிலவி வந்தது. தற்போது முதலமைச்சராக இருந்து வரும் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தினால்தான், தேர்தலில் வெற்றி பெற முடியும் என கட்சியின் நிர்வாகிகள் பெரிதும் விரும்பியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், இத்தனை நாட்களாக துணை முதலமைச்சர் பதவியில் இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வமும் முதலமைச்சர் வேட்பாளர் போட்டியில் களமிறங்கினார். ஜெயலலிதா வாரிசு ஓ.பன்னீர்செல்வம்தான் முதலமைச்சர் வேட்பாளராக வரவேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் தேனியில் போஸ்டர்கள் ஒட்டியும், தலைமைச் செயலகம் வரும் போதெல்லாம் ஓபிஎஸின் முகமூடியை அணிந்தும் வலியுறுத்தி வந்தனர்.

OPS - Updatenews360

உச்சகட்டமாக, அண்மையில் நடந்து முடிந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் பேச்சுக்கள் கூட அதனை உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து, தேனியில் உள்ள தனது பண்ணை வீட்டிலும் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதனால், ஓபிஎஸின் கையே ஓங்குவது போல தோன்றியது.

இதனிடையே, அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டு விட்டது. எப்படியும், கோஷ்டி பூசலால் கட்சியில் பிளவு ஏற்பட்டு விடும் என திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் காத்திருந்தனர். ஆனால், அனைத்தையும் தனது சாமர்த்தியமான காய் நகர்த்தலால் சுக்கு நூறாக்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

அமைச்சர்கள், கட்சியின் நிர்வாகிகளை அனுப்பி சமரசம் பேசி, இன்று ஓ.பன்னீர்செல்வத்தின் வாயாலயே, முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என அறிவிக்க வைத்து விட்டார். அதேநேரம், கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட குழு, ஓ.பன்னீர்செல்வத்தின் வலியுறுத்தலினால் அமைக்கப்பட்டது. இதுவும், முதலமைச்சர் வேட்பாளர் தானே எடப்பாடியார், கட்சியின் அசைவுகள் அனைத்தும் ஓ.பிஎஸ் முடிவு செய்தபடி, 11 பேர் கொண்ட குழுவின் கீழ் வந்து விட்டதால், அவர் இந்த யுத்தத்தில் வெற்றி பெற்று விட்டதாக பொதுவான கருத்து இருந்து வருகிறது. ஆனால், அரசியல் விமர்சகர்களின் பார்வை வேறு மாதிரியாக உள்ளது.

ஏற்கனவே, இபிஎஸ் – ஓபிஎஸ் அணிகள் இணையும் போது, ஒருங்கிணைப்பு குழு அமைக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அது கண்டு கொள்ளப்படாமல் 3 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இப்போது, முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை எந்தவிதமான கண்டிஷன்களையும் ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது என்பதால், ஓபிஎஸின் கோரிக்கையை ஏற்று, 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

edappadi palanisamy - updatenews360

வேட்பாளர் தேர்வு, நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்டவற்றை கவனிப்பதில் அதிகாரம் வழிகாட்டுதல் குழுவிடம் இருந்தாலும், எடப்பாடி பழனிசாமிக்கான அதிகாரம் குறைந்து போகவில்லை. காரணம், வழிகாட்டு குழுவில் இடம்பெற்றுள்ள 11 பேரில் 6 பேர் எடப்பாடியாரின் ஆதரவாளர்கள். குழுவில் பெரும்பான்மை கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியும் என்பதால், எடப்பாடியார் நினைப்பதை எளிதில் சாதிக்க முடியும். எனவே, அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தவராக உருமாறி வரும் எடப்பாடியார், ஒரே கல்லில் இரு மாங்காய் அடித்துள்ளார்.

Views: - 86

0

0