முன்னாள் அமைச்சர்களை பழிவாங்குவதை கைவிடுங்கள்… மக்கள் நலனில் அக்கறை காட்டுங்கள் : தமிழக அரசுக்கு அதிமுக அறிவுறுத்தல்
Author: Babu Lakshmanan10 August 2021, 1:38 pm
முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் சோதனைக்கு அதிமுக தலைமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் அமைச்சர்களைக் குறி வைத்துப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். மக்கள் நலன் காக்கும் பணிகளில் கவனம் செலுத்துங்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சிக் கொறடா,
முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும், அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் ஒருசிலரின் இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்துவதாக வரும் செய்திகள், மக்கள் நலப் பணிகளில் முழு கவனம் செலுத்தாமல், திமுக அரசு கழகத்தவர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளில் அக்கறை காட்டுகிறேதா என்ற ஐயப்பாடும், வருத்தமும் மனதில் எழுகின்றன.
துடிப்பான கழக செயல்வார் எஸ்பி வேலுமணி அவர்கள் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் திட்டமிட்டு பொய்க் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுவந்த நிலையில், இன்றைய சோதனைகள் கண்டிக்கத்தக்கவை என்றே கருதுகிறோம். கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் பொய்க் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திக்க, கழகம் எப்பொழுதும் தயாராகவே உள்ளது. ஆனால், ஆதாரம் ஏதுமின்றி உண்மை என்ன என்பதை கண்டுபிடிக்கும் முன்னரே ஊழல் பழி சுமத்துவது நியாயமற்றது.
இத்தகைய சோதனைகள் அனைத்தையும் தாங்கி நின்று, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபடும் அன்பு வழியிலும், அற வழியிலும் அரசியல் தொண்டாற்றும், எனக் குறிப்பிட்டுள்ளனர்.
0
0