கர்நாடகத்தின் வழக்கை காலிசெய்யும் காவிரி-குண்டாறு திட்டம் : மேகதாது பிரச்சினையில் விட்டுக்கொடுக்காமல் போராடும் அதிமுக அரசு!!

26 September 2020, 6:52 pm
Cm mekadadu - updatenews360
Quick Share

சென்னை : கர்நாடகத்தில் மத்தியில் ஆளும் பாஜகவே ஆட்சியில் இருந்தாலும், மேகதாது அணைப் பிரச்சினையில் அதிமுக அரசு சிறிதும் விட்டுக்கொடுக்காமல் போராடி அணையைக் கட்டவிடாமல் தடுத்து வருகிறது.

2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தாலும் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டும் அளவுக்கு மத்திய அரசுடன் நல்லுறவு கொண்டிருந்தாலும், காவிரி ஆணையக் கூட்டங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தின் திட்டத்துக்குத் தடைபோட்டு வருகிறது.

கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2014 வரை திமுக மத்தியில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் அமைச்சர் பதவிகளைப் பெற்று அங்கம் வகித்து வந்தது. அப்போது, காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றத் தீர்ப்பு வந்தபோதும், அத்தீர்ப்பை அரசிதழில் வெளியிட திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்ததும், மத்திய காங்கிரஸ் ஆட்சியில் திமுக இருந்ததும், அதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதற்காக ஜெ.ஜெயலலிதா தலைமையில் அமைந்த தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுமாறு உச்சநீதிமன்றத்தையும் பெற்றது. இதனால், மகிழ்ச்சியடைந்த தமிழக விவசாயிகள் ஜெயலலிதாவுக்கு மிகப்பெரிய பாராட்டு விழா நடத்தி ‘பொன்னியின் செல்வி’ என்ற பட்டத்தை அளித்தனர்.

தொடர்ந்து நடுவர் மன்றத் தீர்ப்பை நிறைவேற்றுமாறு உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசு வழக்குத் தொடர்ந்ததால் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. தற்போது, ஆணையத்தின் கூட்டங்களில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் உரிமையுடன் காவிரியில் தமிழகத்தின் பங்கைக் கேட்டுப் பெற்று வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, கர்நாடகம் தமிழ்நாட்டில் காவிரி நுழையும் இடத்துக்கு சற்று மேலாக மேகதாது என்னுமிடத்தில் அணை கட்டுவதற்குத் திட்டம் தீட்டிவருகிறது. அப்படி மேகதாது அணை கட்டப்பட்டால் மேட்டூருக்கு வரும் நீர் தடுக்கப்படும் என்பதால் தமிழக அரசு இத்திட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வருகிறது. மேகதாது அணைப்பிரச்சினை தொடர்பாக பிரதமரை சந்தித்ததாகக் கூறிய திமுக எம்.பி.க்கள், மேகதாது பிரச்சினையை எதிர்த்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் எதுவும் கூறவில்லை என்று குற்றம்சாட்டினார்.

ஆனால், மேகதாது அணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததால் அத்திட்டத்துக்கு தடை ஏற்பட்டது, காவிரி ஆணையக்கூட்டங்களிலும் தமிழக அரசு இத்திட்டத்தைக் கடுமையாக எதிர்ப்பதால் கர்நாடகம் இது பற்றிப் பேச முடியாத நிலை உருவாகியுள்ளது.

mekedatu - dam - updatenews360

உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் தமிழ்நாட்டில் பெரும் மழைக்காலங்களில் காவிரி நீர் வீணாகக் கடலில் கலக்கிறது என்றும், மேகதாதுவில் அணை கட்டி தமிழகத்தின் பங்கை கர்நாடகம் தரும் என்றும் கூறி வருகிறது. இதை முறியடிக்கும் வகையில் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

காவிரியின் உபரி நீரை குண்டாற்றில் கலக்கவிட்டு வறண்ட மாவட்டமான ராமநாதபுரத்துக்கு நீர்த் திட்டங்களை உருவாக்க இத்திட்டம் பயன்படும். அதுமட்டுமின்றி காவிரி தமிழகம் வீணாக்குவதாக கர்நாடக அரசு இனிமேல் குற்றம் சாட்ட முடியாது. மேகதாது அணை கட்டுவதற்கு எந்த நொண்டிச்சாக்கும் சொல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

காவிரி தொடர்பான அனைத்து பிரச்சினைகளிலும் ஜெயலலிதாவின் அணுகுமுறையையே தற்போதைய அதிமுக அரசு பின்பற்றிவருகிறது. அரசியல் கூட்டணிகளை எல்லாம் தள்ளிவைத்து தமிழக மக்களின் நலன்களுக்காக விட்டுக்கொடுக்காமல் போராடி வருகிறது.