‘அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமி’… ஓபிஎஸ்-ன் அழைப்பை நிராகரித்தார் இபிஎஸ்..? ஒற்றைத் தலைமையில் உறுதி.!!

Author: Babu Lakshmanan
18 August 2022, 11:41 am
Quick Share

அதிமுகவில் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வருமாறு ஓபிஎஸ் அழைப்பு விடுத்திருந்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.

கடந்த ஜுலை மாதம் 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கில், அதிமுகவின் ஜூன் 23ந் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ஓபிஎஸ் தரப்பினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

இதைத் தொடர்ந்து, இன்று காலை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேசிய ஓபிஎஸ், எங்களுக்குள் இருக்கின்ற கருத்து வேறுபாடுகளால், முந்தைய காலங்களில், திமுக ஆட்சியை பிடிக்கும் சூழல் இருந்ததாகவும், இந்த கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால், அதிமுக.,வில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், இதற்கு முந்தைய அனைத்து கசப்புகளையும் மறந்து, தூக்கி எறிந்துவிட்டு அதிமுக.,வின் ஒற்றுமையே முக்கியம் என அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும், மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என அனைவரும் இணைந்து செயல்பட வரவேண்டும் எனக் கூறிய அவர், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் பரவாயில்லை என்றும், அன்பு சகோதரர் பழனிசாமியும் நானும் இணைந்து ஒற்றுமையாக சிறப்பான பணிகளை செய்ததாகவும், அந்த நிலை மீண்டும் வர வேண்டும் என்று கூறினார். இது இரட்டை தலைமையா என்ற பிரச்னை கிடையாது என்றும், கூட்டுத்தலைமையாக இருக்க வேண்டும் எனவும் ஓபிஎஸ் தெரிவித்தார்.

இதன்மூலம், எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பணியாற்ற தயார் என்று ஓபிஎஸ் கூறியிருந்தார். அவர் அழைப்பு விடுத்த சில நிமிடங்களிலேயே, தனிநீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதன்மூலம், ஓபிஎஸ் உடன் இணைந்து பணியாற்ற தங்களுக்கு உடன்பாடில்லை என்று இபிஎஸ் தரப்பினர் மறைமுகமாக கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. இது ஓபிஎஸ் தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 413

0

0