69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க சட்ட ரீதியிலான நடவடிக்கை தேவை : மராத்தா வழக்கை குறிப்பிட்டு ஓபிஎஸ் – இபிஎஸ் வலியுறுத்தல்

6 May 2021, 7:35 pm
EPS OPS - Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில்‌ 69 சதவிகித இடஒதுக்கீட்டை பாதுகாக்க சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌ ஓ.பன்னீர்செல்வம்‌, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி‌ பழனிசாமி ஆகியோர்‌ வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்‌ நாட்டு மக்களின்‌ உயர்வுக்கும்‌, சமூகநீதி பாதுகாப்புக்கும்‌ அடிப்படையாக விளங்கக்கூடிய 69 விழுக்காடு இடஒதுக்கீட்டு முறையை பாதுகாக்கத்‌ தேவையான சட்ட ரீதியான நடவடிக்கைகளை தமிழ்‌ நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய
சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

மஹாராஷ்டிர மாநிலத்தில்‌ “மராத்தா’” சமூகத்தினருக்கென்று கல்வியிலும்‌, வேலைவாய்ப்பிலும்‌ அளிக்கப்பட்ட தனி. உள்‌ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்சநீதிமன்றத்தின்‌ அரசியல்‌ சாசன பெஞ்ச்‌ நேற்று அளித்திருக்கும்‌ தீர்ப்பின்‌ எதிரொலியாக, தமிழ்‌ நாட்டில்‌ நடைமுறையில்‌ இருக்கும்‌ 69 விழுக்காடு இடஒதுக்கீடு என்னவாகுமோ என்ற கவலையும்‌,
அச்சமும்‌ தமிழ்‌ நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில்‌ பிற்படுத்தப்பட்டோர்‌, மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌, தாழ்த்தப்பட்டோர்‌ ஆகியோருக்கு கல்வி நிறுவனங்கள்‌ மற்றும்‌ வேலைவாய்ப்புகளில்‌ 69 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்து, 1993-ல்‌ தமிழ்‌ நாடு சட்டமன்றப்‌ பேரவையில்‌ அதற்கென தனியாக சட்ட முறையினை நிறைவேற்றி, அதனை சட்டமாக்கி, நிறைவேற்றி, மத்திய அரசின்‌ ஒப்புதலோடு அச்சட்டத்திற்கு சட்டப்‌ பாதுகாப்பு வழங்கி, அரசமைப்பு சட்டத்‌ திருத்தம்‌ செய்து, 9-ஆவது அட்டவணையில்‌ சேர்த்து, சமூக நீதிகாத்த வீராங்கனை என்ற பெயர்‌ பெற்றவர்‌ இதய தெய்வம்‌ மாண்புமிகு புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌. இன்றுவரை 69 சதவீத இடஒதுக்கீட்டை பெற்று தமிழக மக்கள்‌ பலனடைந்து வருவதற்கு காரணம்‌ மாண்புமிகு அம்மா அவர்கள்‌ தான்‌,

அரசியலமைப்புச்‌ சட்டத்தின்‌ 102-ஆவது திருத்தத்தின்படி, மாநில அரசுகள்‌ தங்களுடைய ஆளுமைக்கு உட்பட்ட கல்வி நிறுவனங்களில்‌ சேர்க்கை மற்றும்‌ அரசு வேலை வாய்ப்புகளில்‌ இடஒதுக்கீட்டுக்கான பரிந்துரையை மட்டுமே மத்திய அரசுக்கு செய்ய முடியும்‌ என்று இப்போது அளிக்கப்படுகின்ற சட்ட விளக்கம்‌ இந்தியாவின்‌ பன்முகத்‌ தன்மையால்‌ வெவ்வேறு விதமாக செயல்படுத்தப்பட்டுவரும்‌ இடஒதுக்கீட்டுக்‌ கொள்கையின்‌ ஆன்மாவை சிதைத்துவிடும்‌ என்ற அச்சம்‌ எழுகிறது.

அரசியலமைப்பு சட்டத்‌ திருத்தம்‌ 102 என்பது மத்திய அரசினால்‌ வழங்கப்படும்‌ வேலைவாய்ப்பு மற்றும்‌ மத்திய அரசின்‌ கல்வி நிறுவனங்களில்‌ இடஒதுக்கீடு செய்வதற்கு மட்டுமே பொருந்தும்‌. எனவே, அரசமைப்புச்‌ சட்டத்தின்‌ 02-வது திருத்தம்‌, மாநில அரசுகள்‌, அவர்கள்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ள நிறுவனங்களில்‌ இடஒதுக்கீடு செய்வது குறித்த
அதிகாரத்தைப்‌ பறிக்கவில்லை என்று மத்திய அரசின்‌ தலைமை வழக்கறிஞர்‌ திரு. கே.கே. வேணுகோபால்‌ அவர்கள்‌ மிகவும்‌ தெளிவாக உச்ச நீதிமன்றத்தில்‌ எடுத்துக்காட்டி வாதித்துள்ளார்‌.

ஏழை, எளிய, உழைக்கும்‌ வர்க்க, சாமானிய மக்கள்‌ கல்வி பெறவும்‌, அரசு வேலைவாய்ப்பு பெறவும்‌, அதன்மூலம்‌ சமூக நீதி நிலைநாட்டப்பட்டு, சமூகத்தால்‌ வஞ்சிக்கப்பட்ட மக்கள்‌ சமூக நீதிக்‌ கொள்கைகளால்‌ கைதூக்கிவிடப்படவும்‌ இடஒதுக்கீடு முறை மிகச்‌ சிறந்த வழி என்பதால்‌, தமிழக அரசு உடனடியாக சட்ட வல்லுநர்களின்‌ ஆலோசனைகளைப்‌ பெற்று, 69 விழுக்காடு இடஒதுக்கீடு காப்பாற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்‌ என்று வலியுறுத்திக்‌ கேட்டுக்‌ கொள்கிறோம்‌, என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில்‌ மராத்தா சமூகத்திற்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம்‌ இன்று ரத்து செய்து உத்தரவிட்ட நிலையில், அதிமுக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Views: - 125

0

0