சுதீஷுக்காக தொடர்ந்து அடம்பிடிக்கும் தேமுதிக : இறங்கி வர மறுக்கும் அதிமுக… பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன..?

2 March 2021, 7:55 pm
DMDK - updatenews360
Quick Share

சென்னை : சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் தேமுதிக மீண்டும் நடத்திய பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், பாமகவுடனான தொகுதி உடன்பாட்டை அதிமுக முடித்தது. ஆனால், பாஜக – பாமகவுடனான தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது. முதல்முறையாக, பேச்சுவார்த்தைக்கு வந்த போது, ஜெயலலிதா இருந்த போது ஒதுக்கீடு செய்யப்பட்ட 41 தொகுதிகளை இந்த முறையும் ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இதனை ஏற்க மறுத்த அதிமுக, அக்கட்சியை கண்டுகொள்ளாமல் இருந்து வந்தது.

EPS OPS - Updatenews360

இதைத் தொடர்ந்து, நடந்த பேச்சுவார்த்தையில் சற்று இறங்கி வந்த தேமுதிக, பாமகவிற்கு 23 தொகுதிகளை ஒதுக்கீடு செய்தது போன்று, தேமுதிக 20 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என்று அதிமுக அமைச்சர்களிடம் சொல்லி அனுப்பியது. ஆனால், விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வந்தால் 14 தொகுதிகள், இல்லையென்றால் 10 தொகுதிகள் மட்டும்தான் கொடுக்கப்படும் என்ற கறாராக கூறி விட்டனர்.

இதனால், தனியாக போட்டியிடத் தயார் என்று எச்சரிக்கும் விதமாக, தேமுதிக துணை செயலாளர் எல்கே சுதீஷ் தனது முகநூல் பக்கத்தில், நம் முதல்வர் விஜயகாந்த், நம் சின்னம் முரசு எனப் பதிவிட்டார். ஆனால், அதிமுக பெரிதாக எடுத்துக் கொண்டது போல் தெரியவில்லை. இருப்பினும், இரு கட்சியினர் மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்துவது என முடிவு செய்தனர்.

அதன்படி, சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அதிமுக – தேமுதிக கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையை நடத்தினர். அப்போது, 15 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என தேமுதிக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், தொகுதிகள் விவகாரத்தை அதிமுக ஏற்றுக் கொண்டதாகவும், ஆனால், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்க முடியாது என்று அதிமுக திட்டவட்டமாகக் கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், அதிமுக – தேமுதிக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

மாநிலங்களை உறுப்பினர் பதவி எல்.கே சுதீஷுக்காக கேட்டு வருவதாகவும், தேமுதிக சார்பில் எத்தனை எம்எல்ஏக்கள் வருவார்கள் என்பதைவிட, ஒரு எம்பியாவது இருக்க வேண்டும் என்ற நினைப்பில் அக்கட்சியினர் இந்தக் கோரிக்கையை வைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Views: - 1

0

1