திமுகவுக்கு எதிராக நீங்க ஜெயிச்சதே இல்லை… 30 ஆண்டுகள் ஆட்சி செய்த எங்களுக்கு தெரியும், என்ன செய்யனும்னு..? பாஜக மீது சீறும் அதிமுக..!!

Author: Babu Lakshmanan
3 February 2023, 8:41 pm
Quick Share

இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் ஒன்றிணைய வேண்டும் என்று கருத்து கூறிய தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவியின் பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 7ம் தேதியுடன் நிறைவடைய இருக்கிறது. இந்த சூழலில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இருப்பினும், கூட்டணி கட்சியான பாஜக தனது நிலைப்பாட்டை இதுவரை தெரிவிக்கவில்லை.

EPS OPS Annamalai - Updatenews360

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை பாஜக தலைவர்கள் அண்ணாமலை மற்றும் சிடி ரவி ஆகியோர் சந்தித்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சி.டி. ரவி, 1972 இல் அதிமுக உருவாகும் போது அதனை உருவாக்கிய கட்சி தலைவரான எம்ஜிஆர் திமுகவை ஒரு தீய சக்தி என குறிப்பிட்டதாகவும், அது தற்போது வரை அதே நிலையில் தான் உள்ளது என்றும் கூறினார்.

மேலும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரை ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இரு தரப்பையும் இணைக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளதாகவும், திமுகவை வீழ்த்த ஒன்றிணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே முடியும் என்றும், அதற்கு ஒன்றிணைந்த அதிமுக அவசியம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அவரது இந்தப் பேச்சு அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவில் கோவை மண்டலச் செயலாளர் சிங்கை ஜி ராமச்சந்திரன், பாஜகவை எச்சரித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- எங்கள் கட்சியில் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவா ? நீங்கள் ஒரு தேசியக் கட்சியில் இருந்து வருவதால் நீங்கள் எதையும் கட்டளையிட முடியும் என்று அர்த்தமா ? கர்நாடகா பாஜகவை எப்படி நடத்த வேண்டும் என்று சொன்னால் சரியா ? திமுகவை மட்டும் எதிர்த்து எந்தத் தேர்தலிலும் வெற்றி பெறாத நீங்கள், 30 வருடங்கள் ஆட்சி செய்த எங்களுக்கு எப்படி அறிவுரை கூறலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.

தீயசக்தி என்றால் என்ன, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் 1972-ல் கட்சியை ஆரம்பித்ததற்கான காரணத்தை சொல்கிறீர்களா ? தயவுசெய்து உங்கள் வரம்புகளை அறிந்து கொள்ளுங்கள், என்று மிகவும் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்தால், அதிமுக – பாஜக கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 289

0

0