இபிஎஸ்-ஐ சந்திக்கிறார் ஓபிஎஸ்..? அதிமுகவில் அடுத்தடுத்து திருப்பம்.. ஓபிஎஸ் தரப்பினர் சொன்ன முக்கிய தகவல்

Author: Babu Lakshmanan
7 February 2023, 12:42 pm
Quick Share

ஈரோடு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருப்பதால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, தங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், அதில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கும் வாக்களிக்க வாய்ப்பு வழங்கவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

மேலும், இந்த வேட்பாளர் தேர்வு குறித்த பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்ப படிவத்தை அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று என உத்தரவிடப்பட்டது.

இரட்டை இலை சின்னம் கிடைக்க வேண்டுமென்றால், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் இணைந்து பொது வேட்பாளரை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, ஓபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் செந்தில்முருகன் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றார். தொடர்ந்து, தென்னரசுவை வேட்பாளராக முன்னிறுத்தி அதிமுக உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட படிவங்களை தமிழ் மகன் உசேன் நேற்று தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்தார். இதனால், இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதியானது.

இதையடுத்து, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் தேர்தல் வேளைகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க இருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோடு கிழக்கில் இரட்டை இலை வெற்றி பெற பரப்புரை செய்வோம், எனக் கூறினார். அப்போது, எடப்பாடி பழனிசாமியை ஓபிஎஸ் சந்திப்பாரா என செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘எதுவும் நடக்கலாம்’ என கு.ப.கிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.

இதனால், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கொடுக்கும் பதவியை வாங்கிக் கொண்டு ஓபிஎஸ் சமாதானமாக போகப்போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Views: - 122

0

0