தமிழர் உரிமைக்குரலாக ஒலிக்கும் அதிமுக : 2021 தேர்தல் களத்தில் அதிமுக பிரசார வியூகத்தை வெளிப்படுத்திய தீர்மானங்கள்!!

28 September 2020, 5:54 pm
Quick Share

சென்னை : பிரதமர் நரேந்திர மோடியுடனும் நல்லுறவு தொடரும் சூழலிலும், தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் இருமொழிக் கொள்கை, காவிரிப் பிரச்சினை, நீட் தேர்வு எதிர்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் மாநிலத்தின் உரிமைகளை வலியுறுத்தி அதிரடித் தீர்மானங்களை அதிமுக செயற்குழு நிறைவேற்றியது அக்கட்சியின் பிரச்சார வியூகத்தைச் சுட்டிக்காட்டுவதாக அமைந்தது.

பெரும்பாலான தமிழர் கட்சிகள் முற்றிலும் மறந்துபோன இலங்கைத் தமிழர் உரிமைப் பிரச்சினையையும் அதிமுக கையில் எடுத்திருப்பது எதிர்க்கட்சியான திமுகவை அதிர்ச்சி அடையச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. இலங்கைத் தமிழர் படுகொலை நேரத்தில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த திமுக, அதற்கு துணை போனது என்பதால் அப்பிரச்சினை தேர்தல் களத்தில் எழுப்பபடும்போது, திமுகவால் பதில் சொல்லமுடியாமல் போகும் நிலை ஏற்படும்.

மேலும், தமிழர் உரிமை என்றாலும், மொழி உணர்வு என்றாலும், திமுகதான் அக்கட்சி செய்யும் பிரச்சாரத்தை இலங்கைத் தமிழர் பிரச்சினை அம்பலப்படுத்தும். தற்போது, இலங்கைத் தமிழர் நலன் பற்றியே திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உட்பட அக்கட்சியில் யாரும் வாயே திறக்காமல் உள்ளனர். அதிமுக இப்பிரச்சினையைத் தேர்தல் களத்தில் எழுப்பும்போது, திமுக இதற்கு பதில் சொல்லமுடியாமல் மௌனமாக இருப்பதைத் தவிர வேறு வழியில்லை. திமுகவின் போலித் தமிழுணர்வை இலங்கைத் தமிழர் பிரச்சினை தோலுரிக்கும்.

இந்தியப் பண்பாடு குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு அமைத்துள்ள குழுவில் தமிழறிஞர்கள் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையும் தீர்மானமாக வடிக்கப்பெற்றிருந்தது. தமிழர் பண்பாடு அடிப்படையையும், தமிழின் பழமையையும், தமிழர் வரலாற்றையும் வெளிக்கொணர்வதற்கான முக்கிய தீர்மானமாக இது அமைந்தது. காவிரிப் பிரச்சினையிலும், மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையான தீர்மானம் கட்சியின் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டது.

கர்நாடகத்தில் மத்தியில் ஆளும் பாஜகவே ஆட்சியில் இருந்தாலும், மேகதாது அணைப் பிரச்சினையில் அதிமுக அரசு சிறிதும் விட்டுக்கொடுக்காமல் போராடி அணையைக் கட்டவிடாமல் தடுத்துவருவது காவிரி மண்டல விவசாயிகளிடம் ஏற்கனவே பாராட்டு பெற்றுள்ளது. காவிரி தொடர்பான அனைத்து பிரச்சினைகளிலும் ஜெயலலிதாவின் அணுகுமுறையையே தற்போதைய அதிமுக அரசு பின்பற்றி வருகிறது. அரசியல் கூட்டணிகளை எல்லாம் தள்ளிவைத்து தமிழக மக்களின் நலன்களுக்காக விட்டுக்கொடுக்காமல் போராடி வருகிறது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் மேகதாது தீர்மானம் அமைந்தது.

கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2014 வரை திமுக மத்தியில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் அமைச்சர் பதவிகளைப் பெற்று அங்கம் வகித்துவந்தபோதும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், இப்பிரச்சினையும் தேர்தல் பிரச்சாரத்தில் திமுகவுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தும்.

நீட் தேர்வை ஒழிப்பது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார். இது குறித்த அதிமுகவின் எதிர்ப்பை கட்சியின் செயற்குழு பதிவு செய்ததுடன் நீட் தேர்வு வருவதற்குக் காரணமாக இருந்ததே திமுக அங்கம் வகித்த மத்திய ஆட்சிதான் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. ஜி.எஸ்.டி, வரி வசூலில் மாநிலத்தில் பங்கை வலியுறுத்திய தீர்மானம் மத்திய அரசுக்கு நேரடிக் கோரிக்கையாக அமைந்தது.

பாஜக அரசைத் தட்டிக் கேட்க அதிமுக தயங்குகிறது என்கிற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை உடைத்து நொறுக்கும் வகையில் தீர்மானங்கள் அமைந்தது. கட்சியின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு இனிமேல்தான் வரவேண்டும் என்ற நிலையில், அதிமுக எந்தெந்த பிரச்சினைகளை மையமாக வைத்து, 2021 தேர்தலை சந்திக்கப்போகிறது என்பதையும், அப்பிரச்சினைகளில் எவ்விதமான நிலைப்பாட்டை மக்களிடம் முன்வைக்கப்போகிறது என்பதையும் செயற்குழு தீர்மானங்கள் தெளிவுபடுத்தின.

Views: - 0 View

0

0