நீதிமன்றத்தால் ‘ஷாக்’ கொடுத்த ஓபிஎஸ்… பொதுக்குழு மேடையிலேயே இபிஎஸ் வைத்த ‘செக்’… பாதியிலேயே வெளியேறிய ஓபிஎஸ்..!!

Author: Babu Lakshmanan
23 ஜூன் 2022, 1:00 மணி
Quick Share

சென்னை : பொதுக்குழு மேடையில் இபிஎஸ் ஆதரவாளர்கள் செய்த செயலால், கூட்டத்தின் பாதியிலேயே ஓபிஎஸ் வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக, கூட்டம் நடக்கும் இடத்திற்கு அதிமுக உறுப்பினர்கள் சாரை சாரையாக வந்தனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தனித்தனியே தங்களின் வாகனங்களில் வந்தனர். வரும் வழியில் எடப்பாடி பழனிசாமிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. செண்டை மேளம், தாரை தப்பட்டை, ஆட்டம், பாட்டம் என பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டம் நடக்கும் மேடையில் இபிஎஸ் – ஓபிஎஸ் அமர்ந்தனர். அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் நடுவில் அமர்ந்திருக்க இருபுறமும் ஓபிஎஸ், இபிஎஸ் அமர்ந்தனர். பிறகு, மேடையில் வைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படங்களுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருந்த 23 தீர்மானங்களை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். ஆனால், அந்த தீர்மானங்களை பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசமாக 3 முறை தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நிராகரித்து விட்டதாகவும், ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு இணைத்து அடுத்த பொதுக்குழுவில் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

இதனிடையே, அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். தன்னை தேர்வு செய்ததற்காக ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தமிழ் மகன் உசேனும் பேசினார்.

பின்னர், மீண்டும் பேசிய சிவி சண்முகம், இரட்டைத் தலைமையினால் ஏற்படும் குழப்பங்களினால் தொண்டர்கள் சோர்வடைந்து வருவதாகவும், வலுவான ஒற்றைத் தலைமையே சரியான தீர்வாக இருக்கும் என்று கூறினார். மேலும், அடுத்த பொதுக்குழு நடக்கும் தேதியை அவைத் தலைவர் இந்தக் கூட்டத்திலேயே அறிவிக்க வேண்டும் என்றும், ஒற்றைத் தலைமையை எப்போது ஏற்கப்படுகிறதோ, அப்போது இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

பின்னர், ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி 2,109 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனிடம் வழங்கினார் சிவி சண்முகம். அதனை ஏற்றுக் கொண்ட அவைத் தலைவர், ஜுலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் மீண்டும் நடைபெறும் என அறிவித்தார்.

ஒற்றைத் தலைமை தீர்மானத்திற்கு ஓபிஎஸ் தரப்பினர் நீதிமன்றத்தில் தடை வாங்கியதால், இபிஎஸ் தரப்பினரிடையே அந்த ஆவேசம் வெளிப்பட்டது. இதனால், மேடையில் அமர்ந்திருந்த ஓபிஎஸ், தனது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரை அழைத்துக் கொண்டு மேடையில் இருந்து இறங்கிச் சென்றார். அப்போது, மேடையில் இருந்த மைக்கில், இந்தப் பொதுக்குழு செல்லாது என்று கூறிவிட்டு, வைத்திலிங்கம் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

பின்னர், அங்கு கூடியிருந்த உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு மாலை அணிவித்தும், வெள்ளி கிரீடம் அணிவித்தும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

  • TVK Vijay விஜய் கட்சியில் இணையும் முன்னாள் ஐஏஎஸ்? புதிய சர்கார் அமைக்குமா தமிழக வெற்றிக் கழகம்?!
  • Views: - 472

    0

    0