ஓபிஎஸ் – இபிஎஸ் இருக்கும் கட்சியே உண்மையான அதிமுக : அமைச்சர்கள் கூட்டாக பேட்டி..!!!
4 February 2021, 6:38 pmசென்னை : மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சசிகலா, தனது காரில் சட்டவிரோதமாக அதிமுக கொடியை பயன்படுத்தியதாக டிஜிபியிடம் அமைச்சர்கள் புகார் அளித்துள்ளனர்.
சிறையில் இருந்து விடுதலையான சசிகலா உடல்நலக்குறைவால் பெங்களூரூவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்கு பிறகு, அவர் கடந்த 31ம் தேதி விடுதலையானார். அப்போது, மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு செல்லும் போது, அவரது காரில் அதிமுக கொடி பயன்படுத்தப்பட்டிருந்தது. இதற்கு அதிமுக அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், பொதுச்செயலாளர் என்ற முறையில் அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தியதாக டிடிவி தினகரன் விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், காரில் சட்டவிரோதமாக அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது சென்னை டிஜிபியிடம் அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம் மற்றும் அதிமுகவின் மூத்த தலைவர்கள் கேபி முனுசாமி, மதுசூதனன் உள்ளிட்ட தலைவர்கள் புகார் அளித்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, “அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமையில்லை. சசிகலா காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியது இனியும் தொடரக் கூடாது.அதிமுகவில் உறுப்பினராக கூட இல்லாத சசிகலா, எவ்வாறு கட்சிக் கொடியை பயன்படுத்தலாம்,” எனக் கேள்வி எழுப்பினார்.
இதைத் தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பேசுகையில், “தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து டெல்லிய உயர்நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. 2017ம் ஆண்டு நவம்பரில் தேர்தல் ஆணையம் தீர்ப்பில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பிலான மேல்முறையீடு வழக்கில் இருந்து விலகி அமமுகவை தொடங்கினார். ஓபிஎஸ் – இபிஎஸ் தலைமையிலான அதிமுக தான் உண்மையான அதிமுக,” என்றார்.
0
0