அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை : பேராசைக்கு முற்றுபுள்ளி வைத்த எடப்பாடியார்!!

19 January 2021, 9:35 pm
Quick Share

சிறையிலிருந்து விரைவில் விடுதலை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படும் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொள்ளவேண்டும் என்று கடந்த 6 மாதங்களாகவே ஊடகங்களில் செய்திகள் பரவி வருகிறது.

இதையடுத்து பல்வேறு ஆரூடங்களை திமுக ஆதரவு அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து வெளியிட்டு வந்தனர்.
அதாவது சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொண்டால்தான் கட்சி வலிமையடையும் என்று அவர்கள் மிகுந்த அக்கறையுடன் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். காட்சி ஊடகங்களிலும் இதுபற்றி அதிகமாக விவாதிக்கப்பட்டது.

ஆனால் இதற்கு அதிமுகவில் ஜெயக்குமார் போன்ற அமைச்சர்கள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தனர். அப்படி இருந்தும் கூட சசிகலாவை அதிமுகவில் இணைப்பது போன்ற தகவல் தொடர்ந்து பரவி வந்தன.

Jayakumar -Updatenews360

ஊர் வாயை மூடினாலும் உலை வாயை மூட முடியாது என்பார்கள். அதுபோல இந்த பிரச்சனை வெறும் வாயை மெல்லும் வாய்க்கு அவல் கிடைத்தது போலாகி விட்டது. அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி குறித்து ரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்த தொடங்கிய பின்பும் நாளுக்கு நாள் இந்த கோரிக்கை வலுத்துக் கொண்டே வந்தது.

குறிப்பாக, டெல்லியில் இருந்து இந்த விவகாரம் தொடர்ந்து கிளப்பி விடப்பட்டுக் கொண்டே இருந்தது. அதன் காரணமாகவே இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று இதுகுறித்து செய்தியாளர்கள் துருவித் துருவி கேள்வி எழுப்பினர்.

ஆனால் எல்லோருக்கும் நெத்தியடியாக “சசிகலாவை அதிமுகவில் இணைத்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. அவர் அதிமுகவில் இருந்து எப்போதோ நீக்கப்பட்டு விட்டார். எனவே அதற்கு 100 சதவீதம் வாய்ப்பு கிடையாது” என திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

முதல்வர், இதில் சசிகலாவின் பெயரை குறிப்பிட்டே சொன்னார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் டிடிவி தினகரன் பற்றி கூறும்போது, “அவருடன் சென்றவர்கள் அதிமுகவுக்கு மீண்டும் திரும்பி விட்டனர். தற்போது அவருடன் சிலர்தான் உள்ளனர்” என்று பதிலளித்தார்.

டெல்லி நிருபர்கள் சசிகலா பற்றி கேள்வி எழுப்பியதற்கு பல்வேறு பின்னணி காரணங்கள் உண்டு. கடந்த சில மாதங்களாக டெல்லியில் முகாமிட்டிருப்பதாக சொல்லப்படும் அமமுக நிர்வாகிகள் சிலர் பாஜகவின் மூன்றாம் கட்ட தலைவர்களை நேரடியாக சந்தித்து சசிகலாவை அதிமுகவில் இணைப்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ஆனால், அது நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரம். அதனால் டெல்லி பாஜக மேலிடம் அந்த நிர்வாகிகளின் யோசனையை காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. அவர்களுடைய சிந்தனையெல்லாம் ரஜினி தனிக்கட்சி தொடங்கினால் அவருடன் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்பதாகவே இருந்துள்ளது. ஆனால், ரஜினி அரசியல் களம் காணப் போவதில்லை என்று வெளிப்படையாக அறிவித்த பின்பு பாஜக மேலிடத்தை தொடர்பு கொண்டதாக கூறப்படும் அமமுக பிரமுகர்கள் இந்த விவகாரத்தை மீண்டும் நினைவுபடுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் ஒருவரும் தனது கருத்தை பாஜக மேலிடத்திற்கு தெரிவித்து சசிகலாவை அதிமுகவில் இணைத்துக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

டெல்லி பாஜக மேலிடத்துக்கு ஆலோசனை என்ற பெயரில் ஒரு கருத்தையும் அழுத்தம் திருத்தமாக பதிவுசெய்துள்ளார்.

Sasikala - Updatenews360

அதில், “சசிகலாவுக்கு தமிழகத்தில் இன்னும் செல்வாக்கு உள்ளது. அவர் சிறையில் இருந்து விடுதலையான பின்னர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார். எனவே அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றால் சசிகலாவையும், டிடிவி தினகரனையும் அதிமுகவில் இணைத்துக் கொள்ளவேண்டும். அப்படி செய்தால் மட்டுமே தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.

இது, அதிமுகவிடம் 38 தொகுதிகளை தமிழக பாஜக கேட்ட நிலையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்களுக்கு ரொம்பவும் வசதியாக போய்விட்டது. அதிமுகவுக்கு கடும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பத்திரிகையாளர் சசிகலா, தினகரன் ஆகியோர் பற்றிய விஷயங்களை மறுபடியும் எழுப்ப ஆரம்பித்தார்.

இதை உண்மை என்று தமிழக பாஜக நம்புவதால்தான் அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதில் பாஜக தனது சம்மதத்தை தெரிவிக்காததால்தான் பாமக, தேமுதிக போன்ற கட்சிகளுடன் வெளிப்படையாக கூட்டணி பேச்சு நடத்துவது தாமதமாகி வருகிறது என்று தமிழக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

அதனால்தான் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறார்.

TN_CM_EPS_UpdateNews360

அண்மையில் கூட சசிகலாவுக்கு ஆதரவாக பேசிய முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் நறுக்கென்று ஒரு கொட்டு வைத்தார் என்பதும் நினைவிருக்கலாம்.

இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை தெரிவிக்கின்றனர். அவர்கள் சொல்வது இதுதான்.

“முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் ஒரு தெளிவான முடிவை அறிவித்து இருக்கிறார். சசிகலா மீண்டும் அதிமுகவுக்குள் வந்தால் என்னென்ன குழப்பங்கள், சிக்கல்கள் வரும் என்பதை அவர் நன்கு அறிவார். அவரால் மட்டுமின்றி தினகரனாலும் தேவையற்ற தலைவலி நிச்சயம் உருவாகும். ஏற்கனவே அதிமுகவை கைப்பற்ற தினகரன் மேற்கொண்ட முயற்சிகளை முதல்வரும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் நன்றாக அறிவார்கள்.

மேலும் சசிகலாவை அதிமுகவில் இணைத்துக் கொள்ளக் கூடாது என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் பிரதமர் மோடியால் எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் ஒன்றாக இணைக்கப்பட்டனர்.

இதே நெருக்கடி திரும்பவும் ஏற்பட்டால் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஒரு தர்ம யுத்தம் நடத்த தயங்கமாட்டார். அது சசிகலாவையும், தினகரனையும் அதிமுகவில் இணைப்பதால் கிடைக்கும் பலனை விட பல மடங்கு ஆபத்தானது.

அதிமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும்போது இவர்கள் இருவரும் குடைச்சல் கொடுக்க மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. முதலில் சாதுபோல் இருந்துவிட்டு பின்னர் தங்களுகென ஒரு ஆதரவாளர்கள் கூட்டத்தை உருவாக்குவார்கள். இது ஏற்கனவே மறைந்த முதல்வர் ஜெயலலிதா இவர்களால் பட்ட தலைவலியை மீண்டும் உருவாக்கிக் கொள்வது போலாகும். தினகரனின் அமமுக கட்சிக்கு ஒரு சில தொகுதிகளில் ஆதரவாளர்கள் இருக்கலாம். அது அதிமுகவின் வெற்றியை எந்த வகையிலும் பாதிப்பதாக இருக்காது. எனவே டெல்லியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தபடி சசிகலாவையும், தினகரனையும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதே புத்திசாலித்தனம் ஆகும்.

இவர்கள் இருவரையும் சேர்த்து கொள்ளவேண்டும் என்ற பெரும் நெருக்கடியை உருவாக்குவதன் மூலம் அதிமுகவிடம் இருந்து பாஜகவுக்கு அதிக சீட்டுகளை வாங்கி கொடுக்க வேண்டும் என்பதும் ஆடிட்டர் குருமூர்த்தியின் திட்டம். அது மட்டும் அல்ல. அவர் இன்னும் பல காரியங்களை சாதிக்க பார்க்கிறார்.
எனவே அதிமுக உஷாராக இருக்க வேண்டும். தமிழகத்தின் அரசியல் சாணக்கியர் போல் தன்னை கருதிக்கொள்ளும் ஆடிட்டர் குருமூர்த்தியின் உண்மையான நோக்கம் என்னவென்றால் அதிமுகவின் பிடியை சசிகலாவிடம் வாங்கி கொடுத்துவிட்டு பின்னர் அவரை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடவேண்டும் என்பதுதான்.

Subramanian_Swamy_UpdateNews360

ஏற்கனவே பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமியும் இப்படித்தான் சொல்லி வருகிறார். அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு அடுத்து சசிகலாதான் முதல்வராக வேண்டும் என்று 2017-ம் ஆண்டே இவர் குரல் கொடுத்தார். ஆனால் அப்போது சசிகலா சிறைக்கு போய் விட்டார். இப்போது சுப்பிரமணிய சாமியுடன் ஆடிட்டர் குருமூர்த்தியும் சேர்ந்து கொண்டு இதே பல்லவியைப் பாடி வருகிறார்.

தமிழக முதல்வர், மத்திய பாஜக அரசுடன் இணக்கமாக செயல்பட்டாலும் தமிழகத்துக்கு பாதகமான திட்டங்கள் வருமென்றால் அதை துணிந்து எதிர்க்கவும் செய்கிறார். இதனால் எடப்பாடி பழனிசாமி என்றாலே சுப்பிரமணியசாமிக்கும், குருமூர்த்திக்கும் கசக்கிறது. தமிழகத்தில் அடுத்து அமையும் அதிமுக அரசின் முழுக் கட்டுப்பாடும் பாஜகவிடம் இருக்க வேண்டும் என்று இவர்கள் இருவரும் விரும்புகின்றனர்.

குறிப்பாக தமிழக அரசியல் நகர்வு தங்களை சுற்றியே இருக்கவேண்டும் என்றும் பேராசைப்படுகிறார்கள்.
அதனால்தான் டெல்லி பாஜக மேலிடம் மூலம் இந்த விவகாரத்தில் அதிமுகவுக்கு அழுத்தம் கொடுக்க இவர்கள் நினைக்கிறார்கள்.

மேலும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்றும் இந்த இருவரும் பாஜக மேலிடத்திடம் தூபம் போட்டு உள்ளனர். அதுதான் அதிமுக- பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பற்றி பேசுவதற்கு இடையூறு போல் அமைந்திருக்கிறது.

அதிமுகவை பொறுத்தவரை அடிமட்டத்திலிருந்து முதல் மேல்மட்டம் வரை அனைத்து தரப்பினரிடமும் சசிகலாவும், தினகரனும் வேண்டாம் என்ற கருத்தே நிலவுகிறது. எனவே எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கதுதான்.

என்று அரசியல் விமர்சகர்கள் எதார்த்த நிலையை பகிர்ந்து கொண்டனர்.

Views: - 0

0

0