அதிமுகவில் புதிய நியமனங்களா…? சட்டப்படி ஏதும் செல்லாது : ஓபிஎஸ் கருத்து

Author: Babu Lakshmanan
14 July 2022, 9:50 am
Quick Share

அ.தி.மு.க., புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியானது குறித்து அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து பொன்னையன் நீக்கப்பட்டார். அதற்கு பதிலாக அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். அமைப்பு செயலாளர்களாக செல்லூர் ராஜூ, சி.வி.சண்முகம், கே.பி. அன்பழகன், ராஜன் செல்லப்பா, பாலகங்கா, கடம்பூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, ஓ.எஸ்.மணியன், காமராஜ், ப.தனபால், பெஞ்சமின் உள்ளிட்ட 11 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தலைமை நிலைய செயலாளர் பதவியில் முன்னாள் அமைச்சர் வேலுமணி நியமிக்கப்பட்டு உள்ளார், என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், கே.பி.முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரை துணை பொதுசெயலாளர்களாக நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த நியமனங்கள் தொடர்பாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் பல்வேறு பொறுப்புக்கள் இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது என்ற கேள்விக்கு ? அவர்கள் அறிவித்த எந்த பொறுப்புகளும் கழக சட்டப்படி செல்லாது, என்று பதில் அளித்தார்.

இதைத் தெடர்ந்து, பேசிய வைத்திலிங்கம், அடுத்த கட்டமாக நடவடிக்கை குறித்து விரைவில் சொல்வதாகவும், எங்கெங்கே எல்லாம் நிர்வாகிகள் சரியில்லையோ அங்கே எல்லாம் மாற்றப்படுவார்கள் என்றும் கூறிய அவர், இது இயல்பாக நடக்கக்கூடிய ஒரு விஷயம் தான், என்றார்.

கட்சியை வலுப்படுத்தும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும், இ.பி.எஸ் அணியில் இருந்து பலர் தங்களிடம் பேசி வருவதாக கூறினார். நேற்று வெளியான ஆடியோ போல பல ஆடியோக்கள் உள்ளன என்றும், அவை விரைவில் வெளியாகும் என்றும் அவர் கூறினார்.

Views: - 193

0

0