நீதிமன்ற நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்கும் அதிமுக… ஓபிஎஸ் வழக்கோடு இரட்டை இலையை முடக்கக்கோரிய வழக்கும் இன்று விசாரணை…!!

Author: Babu Lakshmanan
7 July 2022, 10:18 am
High Court -Updatenews360
Quick Share

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீதான நேற்றைய விசாரணையின் போது, 11ம் தேதி பொதுக்குழு கூட்டுவதற்கு அனுமதி கொடுத்துள்ள உச்சநீதிமன்றம், வேறு நிவாரணங்களை பெற உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவித்திருப்பதால், இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பினர் வாதிட்டனர்.

அப்போது, குறுக்கிட்ட நீதிபதி, வேறு என்ன நிவாரணம் கேட்கிறீர்கள்? என்றார். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர், பொதுக்குழுவுக்கு தடை கேட்கப்பட்டிருக்கிறது, என்றார். அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், பதில் மனுதாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று கேட்டார். அப்போது, 11ம் தேதி கூட்டத்தைக் கூட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவை நாளை (இன்று) தாக்கல் செய்வதாகவும், இந்த வழக்கை அன்றைய விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஓபிஎஸ் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து வாதாடிய எடப்பாடி பழனிசாமியின் வழக்கறிஞர் கட்சி விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பதால், அந்த அடிப்படையில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம், பிறப்பித்த உத்தரவின் நகல்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளி வைத்தார்.

அதேபோல, இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி அதிமுக முன்னாள் உறுப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவானது தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.

இரு முக்கிய வழக்குகள் இன்று விசாரணைக்கு வர இருப்பதால், அதிமுகவினர் உயர்நீதிமன்றத்தில் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

Views: - 544

0

0