ஈரோட்டில் தேர்தல் விதிகளை மீறிய முதலமைச்சர் ஸ்டாலின்..? திமுக கூட்டணிக்கு புது நெருக்கடி : தேர்தல் அதிகாரியை நாடும் அதிமுக..!!!

Author: Babu Lakshmanan
25 February 2023, 1:18 pm
Quick Share

ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக முதலமைச்சர் ஸ்டாலின் மீது அதிமுக புகார் அளிக்க முடிவு செய்துள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, அனைத்து கட்சியினரும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

சம்பத் நகரில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது :- கலைஞர் பிறந்தது திருவாரூராக இருந்தாலும் குருகுலமாக இருந்தது ஈரோடு. சம்பத் நகரில், ஈ.வி.கே.எஸ். சம்பத் மகனுக்கு வாக்கு சேகரித்து கலைஞர் மகன் வந்துள்ளேன். திமுகவின் அடித்தளமே ஈரோடு தான், மகனின் கடமையை செய்து முடிக்க தந்தை வந்துள்ளார்.

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என மார்ச் மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என்றார். எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் தான் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதிமுக வேட்பாளர் டெபாசிட் இழக்கும் அளவுக்கு உங்கள் ஆதரவு இருக்க வேண்டும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே எனது லட்சியம், எனக் கூறினார்.

ஆட்சிப் பொறுப்புக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், முக்கிய தேர்தல் வாக்குறுதியான மகளிருக்கான ரூ.1,000 வழங்கும் திட்டம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருப்பது பெண்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக முதலமைச்சர் ஸ்டாலின் மீது அதிமுக புகார் அளிக்க முடிவு செய்துள்ளது. அதாவது, தேர்தல் நடத்தை விதிகளில் அமலில் இருக்கும் சூழலில், அரசு அறிவிப்புகளை வெளியிடுவது சட்டவிதிகளுக்கு புறம்பானது என்று கூறும் அதிமுக, இது தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சர் மீது அதிமுக புகார் அளிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 274

0

0