தேர்தல் அறிவிப்புக்கு சில மணி நேரம் முன் எடப்பாடி பழனிசாமி அதிரடி : வன்னியர் உள் ஒதுக்கீட்டால் உறுதியானது அதிமுக-பாமக கூட்டணி!!

26 February 2021, 9:09 pm
EPS - pmk - vanniyar - updatenews360
Quick Share

சென்னை: வன்னியருக்கு 10.5 சதவீடு உள் இட ஒதுக்கீட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது பாமக கூட்டணியை உறுதிசெய்துள்ளதுடன், வடமாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும், முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்திலும், வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது என்று அதிமுகவினர் உற்சாகத்தில் மிதக்கின்றனர். இந்த அறிவிப்பு வன்னியர்களிடையே மிகவும் மங்கிப் போயிருந்த பாமகவின் செல்வாக்கை மீண்டும் தூக்கி நிறுத்துவதாக மைந்துள்ளது என்று பாமகவினர் மாநிலம் முழுவதும் குதூகலமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2019-ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றது. ஆனால், ஒரு இடத்திலும் பாமக வெற்றிபெறவில்லை, வன்னியர்கள் பெரும்பாலாக இருக்கும் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட பாமக இளைஞர் அணியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தோல்வியடைந்தார். கூட்டணிக் கட்சியான அதிமுகவும் பாமகவுக்கு செல்வாக்கு இருக்கும் இடங்களில் வெற்றிபெற முடியவில்லை. இதனால் வன்னியர்களிடையே பாமகவுக்கு செல்வாக்கு மங்கிவிட்டது என்பது வெட்டவெளிச்சமானது.

1991 சட்டமன்றத் தேர்தலிலும் 1996 தேர்தலிலும் வன்னியர் கட்சி என்பதை முன்வைத்தே பாமக தேர்தலை சந்தித்தது. 1991ல் ஒரு இடத்திலும் 1996ல் நாலு இடங்களிலும் மட்டுமே பாமகவால் வெற்றிபெற முடிந்தது. ஆனால், தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களில் மீண்டும் மீண்டும் அணி மாறி எந்த வித கொள்கை நிபந்தனைகளையும் முன்வைக்காமல் சீட் பேரத்துக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்ததால் வன்னியர்களே அந்தக் கட்சியைக் கைவிடத் தொடங்கினர்.

பாமக 1998 முதல் 2014 வரை பலமுறை மத்திய ஆட்சியில் அங்கம் வகித்துள்ளது. ராமதாஸின் மகன் அன்புமணி மத்திய கேபினட்டில் இடம்பெற்றார். அப்போதெல்லாம் வன்னியர் இட ஒதுக்கீடுப் பிரச்சினையை அவர் பேசியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல தேர்தல்களில் பல கட்சிகளுடன் பாமக கூட்டணி அமைத்தபோதும் வன்னியர் இட ஒதுக்கீட்டை ஒரு நிபந்தனையாக பாமக வைத்ததில்லை. எந்தக்கட்சி அதிக இடங்கள் தருகிறதோ எந்தக் கட்சியுடன் சேர்ந்தால் அன்புமணிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியோ மத்திய அமைச்சர் பதவியோ, கிடைக்குமோ அந்தக் கட்சியுடன் பாமக கூட்டணி சேர்ந்துள்ளது

தொடர்ந்து கூட்டணி அமைத்தும் தனித்தும் பாமகவால் வெற்றிபெற முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் கடைசி நேரத்தில் அதிமுக கூட்டணிக்கு மாறிய எல்லா இடங்களிலும் தோற்றது. மீண்டும் 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கைகோர்த்தபோதும் 3 இடங்களில்தான் வென்றது. அடுத்து 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அணி சேர்ந்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி மட்டும் வெற்றிபெற்றார். போன 2016 சட்டமன்றத் தேர்தலில் மாற்றம், முன்னேற்றம் அன்புமணி என்ற முழக்கத்துடன் தனித்துக் களம் இறங்கிய பாமக ஒரு இடத்திலும் வெற்றிபெற முடியவில்லை.

இந்த நிலையில், மீண்டும் வன்னியர்களின் ஆதரவைப் பெற எதையாவது செய்யவேண்டும் என்ற நெருக்கடி பாமகவுக்கு ஏற்பட்டது. எனவே, கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்ற போராட்டத்தை பாமக மீண்டும் கையில் எடுத்தது.

அதிமுகவுடன் நடந்த கூட்டணிப் பேச்சிலும் இந்தக் கோரிக்கையை தீவிரமாக வலியுறுத்தியது. இந்த முறையும் வன்னியர் இட ஒதுக்கீடு கோரிக்கையை தொடர்பாக எதுவும் செய்யாமல் தொகுதிகளை மட்டும் பெற்றுக்கொண்டு தேர்தலில் நின்றால் வன்னியர் ஆதரவைப் பெற முடியாது என்ற நிலையில் அதிமுகவுக்கு கடுமையான அழுத்தத்தைகே கொடுத்தது பாமக. அமைச்சர்களும் நேரடியாக பாமக தலைவர் ராமதாஸைப் பார்த்த பின்னும் இந்தக் கோரிக்கையில் பாமக உறுதியாக நின்றது.

இதனால், அதிமுக-பாமக கூட்டணிப் அமைவதற்கு பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. பாமகவின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்ற கேள்வியுடனே இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரில் வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு அறிவிப்பு வெளியாகும் என்ற பலத்த எதிர்பார்ப்பும் நிலவியது.
அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாமக, கூட்டணிக்கான முக்கிய நிபந்தனையாக வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தும் நிலையில் இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டால் அதிமுக-பாமக கூட்டணிக்கு வரும் 2021 தேர்தலில் வன்னியர்கள் ஆதரவு கிடைக்கும் என்று பலத்த எதிர்பார்ப்பு எழுந்தது.

மக்கள் மனம் கவரும் வகையில் பல அறிவிப்புகள் வெளியாகும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே கூறியதால் எதிர்ப்பார்ப்பு பலமடங்கு எகிறியது. வன்னியர் உள் ஒதுக்கீடு முக்கிய கூட்டணிப் பிரச்சினையாகவும் அரசியல் பிரச்சினையாகவும் உருவெடுத்தது.

cm at tuticorin - updatenews360

இந்த் நிலையில் தமிழ் நாடு சட்டமன்றத்துக்கு தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு தனது இறுதி அஸ்திரத்தை எடப்பாடி பழனிசாமி ஏவியுள்ளார். தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டால் எந்த அறிவிப்பையும் வெளியிட முடியாது என்ற நிலையில் வன்னியர் இட ஒதுக்கீடு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வரும் தேர்தலில் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய வட மாவட்டங்களிலும் சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் வன்னியர்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இருக்கின்றனர். வட மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் எளிதாக வெற்றி பெறலாம் என்று திமுக கருதிவந்த நிலையை இந்த அறிவிப்பு திடீரென்று மாற்றியுள்ளது எனலாம்.

இந்தக் கடைசி நேர அறிவிப்பை பாமக தனது பிரச்சாரத்தில் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு வாக்குகளை அறுவடை செய்யும் என்றும், கூட்டணிக்கு கட்சியான அதிமுகவுக்கும் இது பெரும் பலனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொங்கு மாவட்டங்களில் அதிமுகவுக்கு செல்வாக்கு அதிகம் காணப்படுகிறது என்ற நிலையில், இந்த அறிவிப்பு அரசியல் களத்தை பெருமளவு அதிமுகவுக்கு ஆதரவாகத் திருப்பும் என்று அதிமுகவினர் உற்சாகத்தில் மிதக்கின்றன. பாமகவும் குதூகலமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கும்போதும் இந்தக் கொண்டாட்டம் தொடரும் என்று இரு கட்சிகளின் தொண்டர்களும் நம்பிக்கையுடன் அடித்துச்ச்சொல்கின்றனர்.

Views: - 2

0

0