அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு முறையில் மாற்றம் : செயற்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம்

Author: Babu Lakshmanan
1 December 2021, 12:14 pm
eps Ops- updatenews360
Quick Share

சென்னை : ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு முறையில் மாற்றம் செய்து அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் 2வது முறையாக இன்று நடைபெற்றது. அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடந்த இந்தக்கூட்டத்தில், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், செயற்குழு உறுப்பினர்கள் என சுமார் 270 பேர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, அதிமுக செயற்குழு கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதாவது,

பொன்மனச்‌ செம்மல்‌, புரட்சித்‌ தலைவர்‌, இதய தெய்வம்‌ டாக்டர்‌ எம்‌.ஜி.ஆர்‌. சண்ட மகத்தான மக்கள்‌ இயக்கமாம்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ பொன்விழா கொண்டாட்டங்களை நாடு, நகரமெங்கும்‌; பட்டி, தொட்டியெங்கும்‌ எழுச்சியுடன்‌ கொண்டாட கழக உடன்பிறப்புகளுக்கு அன்பு அழைப்பு !

நடந்து முடிந்த சட்டமன்றப்‌ பொதுத்‌ தேர்தலில்‌, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ 66 இடங்களையும்‌, கழக கூட்டணிக்‌ கட்சிகள்‌ 9 இடங்களையும்‌, ஆக மொத்தம்‌ 75 இடங்களில்‌ வெற்றி பெறும்‌ வகையில்‌ உழைத்திட்ட கழக முன்னணியினருக்கும்‌, கழக உடன்பிறப்புகளுக்கும்‌ பாராட்டுக்கள்‌; கழகத்தோடு இணைந்து தேர்தல்‌ பணியாற்றிய கூட்டணிக்‌ கட்சியினருக்கும்‌, தோழமை கட்சியினருக்கும்‌, இயன்ற வகைகளில்‌ எல்லாம்‌ உடன்‌ உழைத்த, உதவிய பல்வேறு இயக்கங்களுக்கும்‌ நெஞ்சார்ந்த நன்றி !

நடந்து முடிந்த சட்டமன்றப்‌ பொதுத்‌ தேர்தலில்‌ பல்வேறு போலியான வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு அளித்து, ஆட்சிப்‌ பொறுப்புக்கு வந்திருக்கும்‌ திமுக-வின்‌ நேர்மையற்ற பிரச்சார முறைகளுக்குக்‌ கண்டனம்‌ ! ஏழை, எளிய உழைக்கும்‌ மக்கள்‌; பெண்கள்‌ மற்றும்‌ மாணவர்கள்‌ நலன்‌ குறித்த வாக்குறுதிகளை உறுதியாய்‌ நிறைவேற்றுவதாகக்‌ கூறிய தி.மு.க. அந்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றவும்‌, அந்த வாக்குறுதிகள்‌ எப்பொழுது நடைமுறைப்படுத்தப்படும்‌ என்பதை கால அட்டவணை மூலம்‌ உடனடியாகத்‌ தெரிவிக்க வற்புறுத்தியும்‌; அவ்வாறு தெரிவிக்காவிடில்‌ மக்களைத்‌ திரட்டி மாபெரும்‌ போராட்டம்‌ நடத்தப்படும்‌ என்றும்‌ எச்சரிக்கை !

EPS OPS - Updatenews360

தி.மு.க. ஆட்சிக்கு வந்த நாள்‌ முதல்‌, தமிழ்‌ நாடு முழுவதும்‌ நடைபெற்று வரும்‌ குற்றச்‌ செயல்கள்‌; கொலை, கொள்ளைகள்‌; வழிப்பறி சம்பவங்கள்‌; போலீசாருக்கே பாதுகாப்பற்ற நிலை; வணிகர்கள்‌ மீதான தாக்குதல்கள்‌; பெண்களுக்கு இழைக்கப்படும்‌ அநீதிகள்‌ உள்ளிட்ட அச்சமூட்டும்‌ அடாவடி செயல்களை அறவே ஒழிக்க தி.மு.க. அரக முன்வர வேண்டும்‌. சட்டம்‌-ஒழுங்கை நிலைநாட்டுவதில்‌ தோல்வி அடைந்திருக்கும்‌ தி.மு.க. அரசுக்குக்‌ கண்டனம்‌ !

வடகிழக்குப்‌ பருவ மழையால்‌ தமிழ்‌நாடு முழுவதும்‌ லட்சக்கணக்கான ஏக்கரில்‌ பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள்‌ நீரில்‌ மூழ்கியதன்‌ காரணமாகவும்‌; வாழை, மரவள்ளிக்‌ கிழங்கு, மக்காச்சோளம்‌, கம்பு உள்ளிட்ட பிற பயிர்‌ வகைகளும்‌ பெருமளவு பாதிப்படைந்துள்ளதன்‌ காரணமாகவும்‌ தங்கள்‌ வாழ்வாதாரத்தை இழந்துள்ள விவசாயிகளுக்கும்‌; மழை வெள்ளத்தால்‌ சேதமடைந்துள்ள வீடுகள்‌ மற்றும்‌ உயிரிழந்த கால்நடைகளின்‌ உரிமையாளர்களுக்கும்‌, உரிய இழப்பீட்டுத்‌ தொகையை உடனடியாக வழங்கிட திமுக அரசை வலியுறுத்தல்‌ ; மழை வெள்ள பாதிப்புகளை முன்‌ ஏற்பாடுகள்‌ மூலம்‌ தடுக்கத்‌ தவறிய திமுக அரசுக்குக்‌ கண்டனம்‌ !

மழை, வெள்ள நிவாரணப்‌ பணிகளை விரைந்து மேற்கொண்டு, மக்களின்‌ துயர்‌ துடைக்க திமுக அரசு விரைந்து செயல்பட வலியுறுத்தல்‌ ! மழை, வெள்ள நிவாரணப்‌ பணிகளில்‌ தொடர்ந்து ஈடுபட கழக உடன்பிறப்புகளுக்கு அன்பு வேண்டுகோள்‌ !

நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித்‌ தேர்தலில்‌, ஜனநாயகத்தை குழி தோண்டிப்‌ புதைக்கும்‌ வகையில்‌ 47 அராஜகத்தைக்‌ சுட்டவிழ்த்து விட்டும்‌, பல்வேறு முறைகேடுகளை அரங்கேற்றியும்‌ வெற்றி பெற்றிருக்கும்‌ திமுக-வுக்குக்‌ கண்டனம்‌.

விரைவில்‌ நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித்‌ தேர்தல்களில்‌, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக உடன்பிறப்புகள்‌ கடுமையாக உழைக்கவும்‌; திமுக-வின்‌ முறைகேடுகளைத்‌ தடுக்கத்‌ தேவையான முன்‌ ஏற்பாடுகளைச்‌ செய்யவும்‌ அறிவுறுத்தல்‌ !

புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌, புட்சித்‌ தலைவி அம்மா ஆகியோர்‌ வழியில்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தைக்‌ கட்டிக்‌ காத்து, ஒற்றுமை பேணி, எதிர்கால தேர்தல்களில்‌ மாபெரும்‌ வெற்றிபெற, கழக முன்னோடிகளின்‌ கரங்களை வலுப்படுத்துவோம்‌ !, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றன.

அதோடு, சிறப்பு தீர்மானமாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களை, பொதுக் குழு உறுப்பினர்களுக்கு பதிலாக, அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை வாக்கு முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 340

0

0