தொகுதி ஒதுக்கீட்டில் வலிமையான இடத்தில் அதிமுக : ‘அன்புமணி முதல்வர்’ முழக்கத்தை மீண்டும் தவிர்த்த ராமதாஸ்!!

18 September 2020, 9:55 pm
pmk - admk - updatenews360
Quick Share

சென்னை: பாமக ஆட்சி பற்றி மீண்டும் பேசிய ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் முதல்வர் என்ற முழக்கத்தை மீண்டும் எழுப்பத் தயங்கியது அவர் தனித்துப் போட்டியிடும் திட்டத்தில் இல்லையென்பதையே காட்டுவதாகவும், அதிமுகவிடம் அதிக இடங்களைக் கேட்கவே அவர் மெதுவாக அடிபோடுகிறார் என்றும் அரசியல் நோக்கர்கள் மத்தியில் கருதப்படுகிறது.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எழுதிய, ‘சுக்கா…, மிளகா…, சமூகநீதி?’ என்ற புத்தக வெளியிட்டு விழா இணையதளம் வாயிலாக நேற்று நடைபெற்றது. விழாவில் பேசிய பாமக தலைவர் ராமதாஸ், ‘தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினருக்கும் அனைத்திலும் சமவாய்ப்பு கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். அதற்காக தமிழ்நாட்டில் சமவாய்ப்பு ஆணையம் என்ற அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அப்போது தான் அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கும். அனைத்து தரப்பினருக்கும் முழுமையான சமூக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இவை எல்லாம் நடக்க வேண்டும் என்றால் பா.ம.க. ஆட்சிக்கு வர வேண்டும்” என்று கூறினார்.

Ramdoss 03 updatenews360

“வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நான், டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி போன்றவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தோம். ஆனால் அதுகுறித்து இதுவரை அரசாங்கம் நம்மை அழைத்து பேசவில்லை. இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் இப்படி நாம் கேட்டுக்கொண்டே இருப்பது?. தமிழ்நாட்டில் மக்கள் தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மக்களிடம் மனமாற்றம் வந்தால் நமது நிலை முன்னேறும். கல்வி, சமூகம், பொருளாதாரம் உள்ளிட்ட எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியும். அதற்காக பா.ம.க.வுக்கு தமிழக மக்கள் ஒருமுறை வாய்ப்பு அளிக்க வேண்டும்”, என்றும் குறிப்பிட்டார்.

தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல டாக்டர் அன்புமணி ராமதாஸ் சிறப்பான பல திட்டங்களை வைத்திருக்கிறார். அவற்றை தொகுதி அளவிலும், கிராம அளவிலும், வீடுவீடாகவும் கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறு கொண்டு செல்வதன் மூலம் மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பேசிய அவர் அன்புமணி முதல்வர் என்பது குறித்து வாய் திறக்கவில்லை. எனவே, அதிமுகவுடன் அதிக இடங்களைப் பெறும் எண்ணத்திலேயே அவர் பேசியிருக்கிறார் என்று கருதப்படுகிறது.

pmk-aiadmk-alliance- updatenews360

தற்போதைய திமுக கூட்டணியில் பாமகவுக்கு நேரடியான அரசியல் எதிரிகளாக கருதப்படும் விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெற்றிருக்கின்றனர். திருமாவளவனுடன் எந்த வகையான பகையும் இல்லை என்று அண்மையில் பேசினார். ஆனால், பாமக இருக்கும் அணியில் தாங்கள் இருக்கமாட்டோம் என்று விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் வெளிப்படையாக அறிவித்துவிட்டார்.

விசிக தற்போது திமுக கூட்டணியில் இருக்கிறது. திமுக தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான கட்சி என்று பாஜக பேசிவரும் சூழலில், விசிகவுடன் கூட்டணியை திமுக முறித்துக்கொள்ள முடியாத நிலையே காணப்படுகிறது. எனவே, திமுக அணியில் பாமக இடம்பெறுவது தற்போதைய சூழலில் நடக்காத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

2019-ஆம் ஆண்டு 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலில் ஆட்சியைத் தக்கவைப்பதற்குத் தேவையான இடங்களில் வெற்றிபெற வேண்டிய இக்கட்டான சூழல் அதிமுகவுக்கு இருந்தது. வட மாவட்டங்களில் பூந்தமல்லி, திருப்போரூர், அரூர், பாப்பிரெட்டிபட்டி, குடியாத்தம், சோளிங்கர் போன்ற இடங்களில் வெற்றிபெற பாமகவின் துணை தேவையாக இருந்தது. தற்போது அதுபோன்ற சூழல் அதிமுகவுக்கு இல்லை.

எனவே, இப்போதைய நிலையில் கூட்டணிப் பேச்சுகளில் அதிமுக கையே ஓங்கியிருக்கும் என்று கருதப்படுகிறது. அதிக இடங்களை பாமக கேட்டால் அவர்களுக்கு செல்வாக்கான இடங்களைத் தவிர மற்ற மாவட்டங்களிலும் அவர்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. பாமகவுக்கு வலிமையான வாக்கு வங்கியுள்ள இடங்களை அவர்கள் அதிமுகவுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் கூட்டணி ஒதுக்கீடு இருக்கும் என்று கருதப்படுகிறது.

Views: - 0 View

0

0