சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையாகி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ம் தேதி சென்னை திரும்பியது முதலே மீண்டும் அதிமுகவின் பொதுச் செயலாளராக ஆவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்பது தெரிந்த விஷயம்.
அதிமுகவை வளைக்க எண்ணிய சசிகலா
ஆனால் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையின் கீழ் செயல்படுவதில் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை மிகவும் உறுதியாக இருப்பதால் சசிகலா எடுத்த முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.
டெல்லி மேலிட பாஜகவும், தமிழக தலைவர்களும் அவரை கண்டுகொள்ளவில்லை.
இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அவர், தமிழகத்தில் பாஜகவுக்கு நெருக்கமான ஆடிட்டர் குருமூர்த்தி, நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ஆகியோர் மூலம் காய்களை நகர்த்தி பார்த்தார் என்றும் கூறப்பட்டது. அதுவும் கதைக்கு உதவவில்லை.
பாஜகவிடம் மறைமுக கோரிக்கை
இந்த நிலையில்தான் கடந்த பிப்ரவரி மாதம் தஞ்சாவூர் பிளஸ்-2 மாணவி லாவண்யா மரணத்தின் உண்மை பின்னணிகளை அறிந்து கொள்ள பாஜக தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில், நடிகை விஜயசாந்தியும் இடம் பெற்றிருந்தார். அந்த விசாரணைக் குழு தஞ்சை சென்று விசாரணையும் நடத்தியது. அந்த நேரத்தில் சென்னை வந்த விஜயசாந்தி சசிகலாவை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேசினார்.
அப்போது, தனது தலைமையில் அதிமுகவை கொண்டுவர பாஜக உதவ வேண்டும், அதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கவேண்டும். அதற்கு அவரது அப்பாயின்மெண்ட் ஃபிக்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என விஜயசாந்தியிடம் சசிகலா கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இல்லையென்றால் கட்சியின் தலைவர் ஜேபி நட்டாவையாவது சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் கேட்டுக் கொண்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் 4 மாதங்கள் ஆகியும், விஜயசாந்தியிடம் இருந்து எந்த சாதகமான பதிலும் வரவில்லை.
விஜயசாந்தியுடன் சசிகலா ரகசிய சந்திப்பு
அதன்பின் மிக அண்மையில் அதாவது, 4 நாட்களுக்கு முன்பு மீண்டும் இவர்கள் இருவரும் சென்னையில் ரகசியமாக சந்தித்துபேசி உள்ளனர் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு அடிபடுகிறது. அப்போது, தான் ஏற்கனவே வைத்த கோரிக்கை என்னவாயிற்று? என சசிகலா கேட்டதாக தெரிகிறது.
ஆனால் விஜயசாந்தியோ உங்களது வேண்டுகோளை பாஜக மேலிடம், ஏற்க மறுத்து விட்டது என்பதை மறைமுகமாக தெரிவித்திருக்கிறார், என்கிறார்கள். 6 மாதங்கள் பொறுத்திருங்கள் மீண்டும் ஒருமுறை முயற்சிக்கிறேன் என்று விஜய்சாந்தி வாக்குறுதி அளித்ததாகவும் சொல்லப்படுகிறது. அதைத்தான் சில ஊடகங்கள் அதிமுகவில் மீண்டும் சசிகலா. பொதுச் செயலாளர் ஆகிறார் என்று தலைப்பிட்டு செய்திகளை வெளியிட்டன.
பாஜகவில் சேர சசிகலாவுக்கு அழைப்பு
இந்தநிலையில், அதிமுகவில் சசிகலாவை சேர்க்க விருப்பம் இல்லை என்றால் அவர் பாஜகவுக்கு வந்தால் நாங்கள் அவரை வரவேற்போம்” என பாஜக சட்டப் பேரவை கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
புதுக்கோட்டையில் திருமண விழா ஒன்றில் கலந்துகொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, “கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு ஏன் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என்று திமுக கேள்வி எழுப்பியது. ஆனால் இரண்டு முறை தற்போது பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்து விட்டது. இருப்பினும் திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிப்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க தயாராக இல்லை. பெயரளவிற்கு பெட்ரோல் விலையை மட்டும் சிறிது குறைத்து விட்டு அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு விட்டனர். ஒன்றிய அரசு என்று கூறுவதை திமுகவினர் பெருமையாக கருதுகின்றனர். திமுக தங்களை பெருமை படுத்திக் கொள்வதை முன்னெடுத்து செல்கிறார்களே தவிர மக்கள் பிரச்சினையை மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற கருத்தை அவர்கள் முன்னெடுக்கவில்லை” என்று குற்றம் சாட்டினார்.
அரசியலில் புயலை கிளப்பிய நயினார் நாகேந்திரன்
அடுத்து சசிகலா தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில்தான் தமிழக அரசியலில் தற்போது பெரும் பேசுபொருளாக மாறி உள்ளது.
நயினார் நாகேந்திரன், கூறும்போது “சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்ளவில்லை என்று சொன்னால், பாஜகவில் அவர் சேர்ந்தால் நாங்கள் அவரை வரவேற்போம். அது தமிழக பாஜகவுக்கு உறுதுணையாக இருக்கும். இதற்கான முயற்சிகளை பாஜக எடுக்கும்” என தெரிவித்தார்.
அரசியல் விமர்சகர்கள் கருத்து
அவர் இப்படி சொன்னதற்கு என்ன காரணமாக இருக்கும்?… “அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 32 பேர்தான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்டத்தை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.
ஜெயலலிதாவுக்கு அவப் பெயரையும் உண்டாக்கினர். இது சாதாரண தொண்டர்கள் முதல் மேல் மட்ட தலைவர்கள் அனைவரும் அறிந்த ஒன்று. எனவேதான் அதிமுகவினர் சசிகலாவை கட்சிக்குள் அனுமதிக்கக்கூடாது என்று உறுதியுடன் இருக்கின்றனர்” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
சசிகலாவின் கனவு தகர்ந்தது
“சிறைக்கு சென்று வந்த பிறகு அதிமுகவில் தனக்கு எந்த செல்வாக்கும், மரியாதையும் இல்லை என்பதை தாமதமாக புரிந்துகொண்ட அவர், அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கவேண்டும். மாறாக, பாஜகவின் தீவிர அனுதாபிகள் மூலம், அதிமுகவை கைப்பற்ற அவர் நினைத்தார். அது பகல் கனவாகவே முடிந்து போனது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் தனது ஆதரவாளர்களை தேர்தலில் போட்டியிட வைத்து தனக்குள்ள பலத்தை நிரூபித்து காட்டியிருக்க வேண்டும். அதை அவர் செய்யத் தவறிவிட்டார். அதனால் அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பாஜகவும் தலையிட விரும்பவில்லை.
சசிகலா பாஜகவில் இணைகிறாரா?
இந்த நிலையில்தான் சசிகலாவிடம், விஜயசாந்தி தெரிவித்த தகவலை உறுதிப்படுத்துவதுபோல் முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை பாஜக தலைவருமான நயினார் நாகேந்திரன் தமிழக பாஜகவில் இணையுமாறு சசிகலாவுக்கு ஒரு வேண்டுகோளை வைத்திருக்கிறார். நீங்கள் என்னதான் முயன்றாலும், அதிமுக தொண்டர்களோ, நிர்வாகிகளோ, தலைவர்களோ உங்களை அதிமுகவில் இணைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள். அதனால் நீங்கள் பாஜகவில் இணைவதுதான் நல்லது என்றும் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம் என்பதுபோல் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
ஏனென்றால் தொடர்ந்து அதிமுக தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா குடைச்சல் கொடுத்து வந்தால் அது எதிர் வரும் தேர்தல்களில் திமுகவுக்கு சாதகமாக விடலாம் என்று பாஜக கருதுகிறது.
பாஜகவில் சசிகலாவுக்கு முக்கிய பதவி?
அதேநேரம் பாஜகவின் அழைப்பை ஏற்று, சசிகலா விரைவில் அக்கட்சியில் இணைவார் என்ற பேச்சும் அடிபடத் தொடங்கிவிட்டது. உண்மையிலேயே அரசியலில் அவருக்கு ஆர்வம் இருக்கும் என்றால் நிச்சயம் பாஜகவில் இணைவார். முக்கிய பதவி கொடுத்தால் அக்கட்சியில் இணைவதற்கு அவர் எந்த தயக்கமும் காட்ட மாட்டார்.
ஆனால் அதிமுகவில் தன்னை சேர்த்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்களே என்ற கோபம் அதிகரித்தால் அதிமுகவை உண்டு, இல்லை என்று ஒரு வழி பார்ப்பதற்குத்தான் அவர் நினைப்பார். அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் வரை சசிகலா இப்படி செயல்படுவதையே திமுகவும் விரும்பும். எனவே அவர் பாஜகவில் இணைய இப்போதைக்கு ஆர்வம் காட்ட மாட்டார். பாஜகவின் திடீர் அழைப்பு அவரை குழப்பத்தில் ஆழ்த்தி விட்டது என்பதே உண்மை “என்றும் அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.