பாஜகவின் கூட்டணி ஆட்சி நெருக்கடிக்குப் பணியாத அதிமுக : 2 % ஓட்டுபெறும் பாஜகவுக்கு பத்து சீட்!!

9 November 2020, 8:50 pm
BJP - admk - updatenews360
Quick Share

சென்னை :தமிழ்நாட்டில் ஆட்சியில் பாஜக பங்கு வகிக்கும் என்று அந்தக் கட்சியின் தலைவர்கள் கூறிவரும் நிலையில், அதிமுக அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெறும் என்பதால், கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் டி.ஜெயகுமார் கூறியிருப்பது பாஜகவுக்கு கொடுத்துள்ள திட்டவட்டமான பதிலாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த மூன்று சட்டமன்றத்தேர்தல்களில் பாஜக தனித்துப் போட்டியிட்டபோது, அந்தக் கட்சிக்கு வெறும் 2 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளது என்ற நிலையில், ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாத அந்தக் கட்சி அமைச்சர் பதவிகளைக் கேட்பது மக்கள் மத்தியில் மிகவும் வேடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. தொடர்ந்து ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை வலியுறுத்திக்கொண்டிருந்தால், அதிமுக கூட்டணியில் இடம் கிடைக்காத நிலை ஏற்படும் என்று கருதப்படுகிறது.

bjp-aiadmk - updatenews360

இதுவரை 2001 சட்டமன்றத் தேர்தலிலும், 2011 சட்டமன்றத் தேர்தலிலும், இதே இரண்டு சதவீத ஓட்டுகளைப் பெறும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிமுக 10 முதல் 13 தொகுதிகளையே ஒதுக்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக தனது வலிமைக்கு ஏற்ப பத்து இடங்களில் போட்டியிட்டால், சட்டப்பேரவையில் அந்தக் கட்சி உறுப்பினர்கள் இடம்பெற வாய்ப்பு ஏற்படும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி ஆட்சி அமைந்ததில்லை என்பதால், கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்துடன் தேர்தலை சந்திக்கும் எந்த அணியும் தோல்வி அடையும் நிலையும் இருக்கிறது.

கடந்த 2019-ஆம் ஆண்டு அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரை தேர்தல் நெருங்கும்போதுதான் கூட்டணி முடிவு செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தெரிவித்துள்ளார். தற்போது பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதாக அதிமுக தலைவர்கள் யாரும் கூறவில்லை. ஆனால், பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் தமிழ்நாட்டில் மூன்றாவது அணி அமைக்கப்போவதில்லை என்று கூறிவருகிறார். அதேவேளையில், திமுகவையும் கடுமையாகச் சாடிவருகிறார். திமுகவுடன் கூட்டணி அமைய வாய்ப்பில்லாத நிலையில், மூன்றாவது அணியும் அமைக்க முடியாது என்றும் சொல்லிவருவதால், பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவே விரும்புகிறது என்று தெரிகிறது.

ஆனால், பாஜக தலைவர்கள் தொடர்ந்து தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று பேசி வருகிறார்கள். அண்மையில் வேல் யாத்திரையை நடத்த முயன்று கைதாவதற்கு முன்பு பேசிய முருகன், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை அமைக்கும் என்றார். அப்போது பேசிய கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, தமிழகத்தில் பாஜக அங்கம்வகிக்கும் ஆட்சி அமையும் என்று பேசினார். ஆட்சியில் பங்கு என்பது கூட்டணியில் சேருவதற்கு பாஜக முன்வைக்கும் நிபந்தனையாகத் தெரிகிறது.

இதைத்தொடர்ந்து சென்னையில் நேற்றுப் பேசிய அமைச்சர் டி.ஜெயகுமார் “எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுகின்ற நிலையில், கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற மக்கள் தீர்மானித்திருக்கிறார்கள். அந்த நிலைதான் 2021இல் வரும். இதுவரையில் இல்லாத அளவுக்கு அதிமுக சரித்திரத்தில் அறுதிப் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும். கூட்டணி என்ற பேச்சுக்குத் தமிழக மக்கள் இடம் தர மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

jayakumar- updatenews360

அமைச்சரின் கருத்து பாஜக போன்று அதிமுக கூட்டணியில் இடம்பெறத்துடிக்கும் கட்சிகளுக்குத் தரும் திட்டவட்டமான பதிலாகப் பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 2006, 2011,2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத்தேர்தல்களில் எந்தக்கட்சியும் பாஜகவுடன் கூட்டணி வைக்க முன்வரவில்லை. பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் சிறுபான்மை மக்களின் வாக்குகளும் பாஜகவை கடுமையாக எதிர்ப்பவர்களின் ஓட்டுகளும் கிடைக்காது என்ற பயத்தில் பாஜகவை அனைத்துக்கட்சிகளும் நெருங்கவிடவில்லை.

2006-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 2.02 சதவீத வாக்குகளைப் பெற்றது. அடுத்த 2011-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அந்தக்கட்சி 2.22 சதவீத ஓட்டுகளை வாங்கியது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபின் 2016-ஆம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 2.84 சதவீத வாக்குகளையே பெற்றது. தொடர்ந்து மூன்று தேர்தல்களில் இரண்டு சதவீத வாக்குகளையே பெறும் பாஜக, தனது வாக்கு வங்கி அதிகரித்துவிட்டதாகக் கூறிக்கொள்கிறது. மீண்டும் தனித்துப் போட்டியிட்டு அதிக ஓட்டுகளைப் பெற்றால்தான் பாஜகவின் வாக்குவங்கி அதிகரித்துள்ளதா என்பது தெரியவரும்.

இரண்டு சதவீத வாக்குகளை மட்டு பெற்று தமிழகத்தில் ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாத கட்சி, அமைச்சர் பதவிகளை கேட்பதால் அதிமுக கூட்டணியில் இடம் பிடிப்பதில் பாஜகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் இரண்டு சதவீதம் வாக்குகள் வாங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 2011-ஆம் ஆண்டு தேர்தலிலும், 2001 தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் 10 முதல் 13 தொகுதிகளே ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று 10 தொகுதிகளைப் பெற்றுக்கொண்டால் சட்டமன்றத்தில் பாஜக இடம்பெற வாய்ப்பு உருவாகும் இல்லாவிட்டால் பாஜகவுக்குத்தான் இழப்பு ஏற்படும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

பாஜக கூட்டணியைப் பொறுத்தவரை அதிமுகவுக்கு ஆதாயத்தைவிட இழப்புகளே அதிகம். பாஜகவுடன் கைகோர்த்ததால் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு பெரும்பான்மையான இடங்களில் தோல்வி ஏற்பட்டது. அதே நேரம் நடத்தப்பட்ட 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 9 இடங்களை அதிமுக வென்று ஆட்சியைத் தக்கவைத்தது.
வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஜகவுடன் நெருக்கம் காட்டாமலும் அந்தக்கட்சித் தலைவர்களைப் பிரச்சாரத்துக்கு அழைக்காமல் இருந்ததாலும், குறைந்த வாக்கு எண்ணிக்கையில் அதிமுக தோற்றது.

இதே முறையில் பாஜகவிடம் எந்த நெருக்கமும் காட்டாமல் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல்களை சந்தித்தபோது, அதிமுக பெரும் வெற்றிபெற்றது. பாஜகவுடன் சேருவதால் அதிமுகவுக்கு சிறுபான்மையினர் வாக்குகளும் கிடைப்பதில்லை. பெரும்பாலான மக்களும் பாஜக எதிர்ப்பு மனநிலையில்தான் இருக்கின்றனர். அதிமுகவைப் பொறுத்தவரை பாஜகவுடன் கூட்டணி என்பது பெரும் சுமையாகத்தான் இருக்கிறது.

Views: - 34

0

0