தமிழகத்தில் திடீர் துச்சாதனர்கள்… அதிமுக பெண் மானபங்கம் : கண்டிப்பாரா கனிமொழி…?

Author: Babu Lakshmanan
23 October 2021, 12:08 pm
Kanimozhi - updatenews360
Quick Share

தேர்தல் என்றாலே அடிதடி, வெட்டு குத்து, தள்ளு முள்ளு, தில்லு முல்லு, சாலை மறியல் என்பதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு பழகிப்போன ஒன்று. அதுவும் உள்ளாட்சித் தேர்தலில், இதுபோன்ற அட்டூழியங்கள், அக்கிரமங்கள், அநியாயங்கள் நடப்பது சர்வசாதாரணம்.

மறைமுகத் தேர்தல்

இந்த நிலையில்தான் நடந்து முடிந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது.

இதில் எந்த மாவட்டத்திலும், அமைதியாக தேர்தல் நடந்தமாதிரி தெரியவில்லை. ஒவ்வொரு இடத்திலும் சண்டை, சச்சரவுதான். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் பெரும்பாலான இடங்களில், தலைமைப் பதவியை பிடிப்பதில் திமுகவினரிடையே அடிதடி, மோதல் ரகளை, நடந்திருப்பதுதான். இதனால் பல இடங்களில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டும் உள்ளது.

கோஷ்டி மோதல்

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்தில் அமைச்சர் துரைமுருகனின் கோஷ்டியும், அந்த மாவட்டச் செயலாளரும் ஜோலார்பேட்டை தொகுதி திமுக எம்எல்ஏவுமான தேவராஜின் கோஷ்டியும் பகிரங்கமாகவே ஒன்றியத் தலைவர் பதவிக்காக மோதிக்கொண்டுள்ளன. அப்போது தேவராஜனின் ஆதரவாளர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.

DuraiMurugan Support -Updatenews360

இதைவிட கொடுமையான நிகழ்வு தென்காசி மாவட்டம் புளியரை ஊராட்சியில் அரங்கேறியுள்ளது.

அந்த சம்பவம் சினிமா காட்சிகளை மிஞ்சுவதுபோல அமைந்திருக்கிறது. இது பொதுவெளியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையோ என்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய அபாய மணியாகவும் ஒலித்திருக்கிறது.

பெண் மானபங்கம்

புளியரையில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவிக்கு நேற்று மறைமுக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. அப்போது அதிமுகவைச் சேர்ந்த வேட்பாளர் சரவணன், திமுகவைச் சேர்ந்த வேட்பாளர் குருமூர்த்தி ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஏனென்றால் அதிமுகவில் 6 கவுன்சிலர்களும், திமுகவில் 6 கவுன்சிலர்களும் தேர்தலில் வெற்றி பெற்று இருந்தனர்.

துணைத்தலைவர் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் வாக்களிக்க சென்றபோது திமுகவினாரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஏன் எங்களை வாக்களிக்க விடாமல் தடுக்கிறீர்கள்? என்று அதிமுக உறுப்பினர்கள் கேட்டபோது, திமுகவினர் சரிவர பதில் அளிக்காமல் அவர்களை தேர்தலில் வாக்களிக்க விடாமல் தடுப்பதிலேயே குறியாக இருந்துள்ளனர். போலீசாரும் இதைக் கண்டுகொள்ளாமல் அதிமுகவினருடன் சமாதானம் பேசி இருக்கிறார்கள். அப்போது வார்டு உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதமும், தள்ளு முள்ளுவும் ஏற்பட்டுள்ளது.

அங்கே நின்றிருந்த அதிமுக பெண் உறுப்பினர் ஒருவரின் சேலையை, மகாபாரதத்தில் துச்சாதனன் திரவுபதியை துகிலுரிப்பதுபோல் திமுகவினர் சிலர் மளமளவென்று இழுத்ததாக கூறப்படுகிறது.

வார்டு உறுப்பினரான அந்தப்பெண் பாவாடை, ஜாக்கெட்டுடன் கூனிக்குறுகி மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சேலையை தன் பக்கமாக இழுத்துள்ளார். அப்போதும் சேலையை பிடித்து இழுத்தவர்கள் விடவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர் ஒருவரும் அதிமுகவினரும், துகிலுரிப்பில் ஈடுபட்டவர்களிடம் சிறிதுநேரம் போராடி பெண் வார்டு உறுப்பினரின் சேலையை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ காட்சி, சமூக வலைத்தளங்களில் பரவி தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து புளியரை ஊராட்சியில் துணைத்தலைவர் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதிமுக கண்டனம்

பட்டப்பகலில் நூற்றுக்கணக்கானோர் சாலையில் திரண்டிருந்த நிலையில் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சிலர் ஒரு பெண் என்றும் பாராமல் சேலையை பிடித்து இழுத்து மானபங்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில், “அநாகரீகத்தின் உச்சகட்டமாக தென்காசி மாவட்டம்,புளியரை ஊராட்சி ஒன்றியத்தில் வாக்களிக்கச் சென்ற கழக பெண் கவுன்சிலரை, தாய்க்குலமே முகம் சுழிக்குமாறு நடந்து கொண்ட திமுகவினரையும், இந்த ஜனநாயக படுகொலையை வேடிக்கை பார்க்கும் மாநில தேர்தல் ஆணையத்தையும் வன்மையாக கண்டிக்கிறேன்” என்று ஆவேசமாக சாடியுள்ளார்.

eps warn - updatenews360

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் கண்டனம் தெரிவித்ததுடன், “இன்று நடைபெற்ற ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தலில் திமுக அட்டூழியம் துரியோதன கும்பல் காண்க” என்று குறிப்பிட்டு அது தொடர்பான வீடியோ காட்சியையும் இணைத்திருக்கிறார். சமூக ஊடகங்களில் இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

இதைக்கண்டு வேதனை அடைந்த நெட்டிசன்கள் இந்த கொடூர செயலை மிக வன்மையாக கண்டித்துள்ளனர்.

ஜோதிமணி, கனிமொழி மவுனம்

அவர்களின் கொந்தளிப்பு கமெண்ட்டுகள்தான், இவை.

“பெண்களை தெய்வமா மதிக்கும் நம்ம நாட்டுல இந்த மாதிரி பெண்களை அவமானப்படுத்தறது கொடுமையிலும் கொடுமை.

மொதல்ல இந்த மாதிரி ஆளுங்கள குண்டாஸ்ல போடணும்!…

வன்முறை வெறியாட்டம் போட்ட துரியோதன கும்பல் வீட்டுக்கு போகும் நாள் வெகுதொலைவில் இல்லை.

Kanimozhi Minister - Updatenews360

ஏதோ ஒரு மாநிலத்தில், எங்கோ ஓரிடத்தில் பெண்ணுக்கு அநீதி நடந்தால், கொந்தளிக்கும் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி இதை கண்டிப்பாரா?… நூற்றுக்கணக்கானோர் முன்பாக துகிலுரிந்த துச்சாதனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து சிறையில் தள்ளும்படி அண்ணனிடம் சொல்வாரா?

ஊராட்சி மன்ற வார்டு பெண் உறுப்பினருக்கே இந்த கதின்னா தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமா நடமாட முடியுமா?…

பெண்ணை தொட்டவன் கெட்டான். தொட்டவர்களுக்கு அழிவு காலம் நெருங்கி விட்டது.

1989-ல் ஜெயலலிதா- இன்று ஒரு அபலைப் பெண்.

எங்கள் ஆட்சியில் பெண்கள் கண்ணியத்துடன் நடத்த படுவாங்கன்னு சொன்னீங்களே,
அது, இதுதானா?

அம்மணி! ஜோதிமணி உங்க சத்தத்தையே காணோம்…எங்க போனீங்க…

அண்ணே அண்ணே…
இத சொன்னா வெட்கக்கேடு…
சொல்லலேன்னா மானக்கேடு…

பெண்ணுக்கு அநீதின்னா, கொந்தளித்து விவாதம் நடத்தும் செய்தி சேனல்களே எங்கே போனீங்க?… இந்த அநியாயமெல்லாம் ஒங்க கண்ணுக்கு படாதா?… இன்னும் எத்தன நாளைக்குத்தான் இந்த மாதிரி கொடுமைகள மறைப்பீங்க!”

என்று வேதனையில் கொந்தளித்து சகட்டு மேனிக்கு விளாசித் தள்ளி இருக்கிறார்கள்!

ஆட்சி மாற்றம்

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “தேர்தல் தள்ளுமுள்ளுவின்போது நடந்த இச்சம்பவம் சாதாரணமானதல்ல. சிலர் இதுபோல் நடந்துகொண்டது, மிருகத்தனமான செயல் என்பதை, இந்த வீடியோ காட்சியை பார்க்கும்போதே தெரிகிறது. இதுபோன்றதொரு சம்பவம்தான் முன்பு ஜெயலலிதாவுக்கும் நடந்தது. அது தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தையே நிகழ்த்த காரணமாக அமைந்தது, என்பதையும் மறந்து விடக்கூடாது.

CM stalin Order - Updatenews360

ஒரு சிறு, தீப்பொறி பெரிய காட்டையே அழித்துவிடும். கனிமொழி, ஜோதிமணி போன்ற எம்பிக்கள் இதை உடனடியாக கண்டிக்க வேண்டும். இந்த வன்கொடுமையில் ஈடுபட்ட அத்தனை பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தால்தான் ஆட்சியாளர்கள் மீது பெண்களுக்கு நம்பிக்கை பிறக்கும். ஏனென்றால் இந்த சம்பவம் எங்கோ கண் காணாத இடத்தில் நடக்கவில்லை. நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டிருந்த பொது இடத்தில் பட்டப்பகலில் ஒரு அபலைப் பெண், அதுவும் ஒரு வார்டு உறுப்பினர் மானபங்கப்படுத்தப் பட்டிருக்கிறார். எனவே முதலமைச்சர் ஸ்டாலின் இதில் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று அவர்கள் வலியுறுத்தினர்.

Views: - 625

0

0