தலிபான்களிடம் சிக்கிய ஆப்கன்!இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள்!
Author: Udayachandran RadhaKrishnan17 August 2021, 12:12 pm
ஆப்கானிஸ்தானிலிருந்து நேட்டோ மற்றும் அமெரிக்கப் படைகள் கடந்த மாதம் வெளியேறத் தொடங்கிய பின்பு தலிபான்கள் தங்களின் ஆக்கிரமிப்பை ஆரம்பித்தனர். ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு அராஜகத்தின் உச்சமாக நாட்டை அபகரித்து விட்டனர்.
இதைத்தொடர்ந்து அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டனர். இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஆட்சி அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றினர். அந்நாட்டுக்கு இஸ்லாமிய அமீரக ஆப்கானிஸ்தான் என்றும் பெயர் சூட்டியுள்ளனர்.
கடந்த 10 வருடங்களாக கல்வியிலும் பொருளாதாரத்திலும் மெல்ல மெல்ல முன்னேற்றம் கண்டு வந்த ஆப்கானிஸ்தான் மீண்டும் 100 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஏனென்றால், தலிபான்களின் ஆட்சி என்றதுமே 1996 முதல் 2001 வரை, அவர்கள் நடத்திய கொலை வெறியாட்டமும் கோர முகமும்தான், அந்நாட்டு மக்களின் நினைவிற்கு வரும்.
இதற்கு முக்கிய காரணம் மத ரீதியான கோட்பாடுகளை முன்வைத்து, ஆட்சி செய்வோம் என்று சொல்லிக் கொண்டே கொடுங்கோல் ஆட்சியை நடத்திய பித்தலாட்டக்காரர்கள், அவர்கள் என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை. இதனால் தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கான உரிமைகள் என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.
கடந்த காலத்தில் அவர்கள் செய்த அட்டூழியங்களை நினைத்து பயந்துதான், தலிபான் கைப்பற்றிய பல மாகாணங்களில் இருந்து 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் மனைவி, மகள்களுடன் புகலிடமாக பல்வேறு இடங்களுக்குப் சென்றுவிட்டனர்.
தலிபான்களின் முந்தைய ஆட்சி காலத்தில் பெண்களுக்கான அடிப்படை மனித உரிமைகள் முற்றிலுமாக மறுக்கப்பட்டன. பெண்கள் கல்வி கற்க தடை. வேலைக்கு போகவும் முடியாது, பெண்கள் அனைவரும் கண்டிப்பாக அனைவரும் புர்கா அணிந்திருக்கவேண்டும், வீட்டை விட்டு வெளியே சென்றால், ஆண் பாதுகாப்பு இன்றி செல்லக்கூடாது, இறுக்கமான ஆடை அணிந்தால் கடுமையான தண்டனை, அரசியல் ரீதியாக எந்த போராட்டங்களிலும் ஈடுபடக்கூடாது என்னும் ஏராளமான கெடுபிடிகளை தலிபான்கள் விதித்திருந்தனர். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் பெண்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டனர்.
தற்போது, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கைக்கு ஆட்சி அதிகாரம் சென்று இருப்பதால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார். இதற்கு காரணம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
முன்பு ஆப்கானிஸ்தானில் ஜனநாயக அரசு ஆட்சியில் இருந்தபோது, ஆயுதமேந்தி ஆட்சிக்கு எதிராகப் போராடிய தலிபான்களை வேட்டையாடியது. அப்போது பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தலிபான்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து தலைமறைவாகி விடுவார்கள். இது பாகிஸ்தானுக்கு பெரிய தலைவலியாக இருந்தது. தற்போது அந்த தொல்லை நீங்கி இருப்பதால் ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள தலிபான்கள் அரசுக்கு உதவி செய்யத் தயாராக இருப்பதாகவும், ஆப்கானிஸ்தானில் நடந்ததுபோல் அடிமை விலங்கை உடைத்தெறிய வேண்டும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் திருவாய் மலர்ந்திருக்கிறார். அவர் யாரை கேலி செய்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.
இன்னொரு பக்கம் சீனாவும் ஆதரிக்க தயாராக இருப்பதாக கூறி இருக்கிறது. உண்மையை சொல்லப்போனால், இந்த ஆண்டின் இறுதியில்தான் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் சீனா அளித்த மறைமுக ஆயுத உதவியால் அங்கு அராஜக ஆட்சி விரைவிலேயே அரங்கேறி விட்டது.
இந்த 2 நாடுகள்தான் தலிபான்களின் இஸ்லாமிய அமீரக ஆப்கானிஸ்தான் நாட்டை அங்கீகரிப்பதுபோல் கருத்து தெரிவித்துள்ளன.
ஆனால் பெரும்பாலான உலக நாடுகள் தலிபான்களுக்கு பயங்கரவாதிகள் என்ற முத்திரையை குத்தி இருப்பதால் புதிய அரசுக்கு அங்கீகாரம் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். அதேநேரம், ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிகழ்வுகளால் இந்தியாவின் பாதுகாப்புக்கு பயங்கர அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.
ஏனென்றால், ஆப்கானிஸ்தான் சிறைகளில் தலிபான்கள், ஐ.எஸ். இயக்கம் மற்றும் அல் கொய்தா பயங்கரவாதிகள் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் எந்த கேள்வியும் இன்றி விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்பது நிச்சயம்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆயுதமேந்திப் போராடியபோது, இந்தியாவிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களும், 11 இளம்பெண்களும் ரகசியமாக ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளனர். இவர்கள் சிரியாவிலும், ஆப்கானிஸ்தானிலும் தீவிரவாதிகளிடம் போர் பயிற்சி பெற்று அரசு படைகளுக்கு எதிராக சண்டையிடவும் செய்தனர்.
குறிப்பாக கேரளாவில் இருந்து, புனிதப் போர் நடத்துகிறோம் என்று கூறி ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்தவர்கள் ஏராளம். இவர்களில் பலர் ஆப்கானிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டும் இருக்கிறார்கள். இதேபோல் முந்தைய அரசிடம் பிடிபட்ட கேரளாவைச் சேர்ந்த 4 இளம்பெண்களும் அங்கு முகாம்களில் உள்ளனர்.
இவர்களெல்லாம் தலிபான்கள் அரசால் விடுதலை செய்யப்பட்டு, நாடு திரும்ப நேர்ந்தால் இந்தியாவுக்கு சிக்கல்தான். ஒருவேளை, இவர்கள் ஆப்கானிஸ்தானிலேயே இருக்க நேர்ந்தாலும் கூட அங்கிருந்தபடியே பயங்கரவாத செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
இதில் வேதனை என்னவென்றால், “எங்களை இந்திய அரசு அழைத்துக் கொண்டாலும் கூட புனிதப் போரில் உயிர்த் தியாகம் செய்த எங்களது கணவன்மார்களின் லட்சியத்தை நிறைவேற்ற நாங்கள் போராடுவோம்” என்று ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்த கேரளாவின் 4 இளம்பெண்களும் தொடர்ந்து பிடிவாதமாக கூறிவந்தனர். இதனால் அவர்களை இந்திய அரசு அழைத்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் அதிகாரம் தலிபான்களின் கைகளில் சென்றது நம் நாட்டிற்கு நல்ல அறிகுறி அல்ல. இது, இந்தியாவுக்கு எதிராக சீனா-பாகிஸ்தான் உறவை மேலும் வலுப்படுத்தவே செய்யும். எனவே நாம் நமது எல்லைப் பகுதிகளில் அதிக விழிப்புடன் இருக்கவேண்டியது, மிக அவசியம்.
இந்திய அரசு ஆப்கானிஸ்தானில் நாடாளுமன்ற கட்டிடம் கட்டிக் கொடுத்துள்ளது. கல்வி, சாலை மேம்பாட்டு குடிநீர் வசதிகளை மேம்படுத்தி தந்திருக்கிறது. வர்த்தகத் தொடர்பையும் விரிவாக்கி வைத்திருந்தது. இனி இதெல்லாம், என்ன ஆகும் என்று தெரியவில்லை.
ஏனென்றால், வரும் நாட்களில் தலிபான்கள் அரசு சீனாவையும், பாகிஸ்தானையும் எல்லா உதவிகளுக்காகவும் நாடும். ஜனநாயக நாடுகள் அனைத்தும் இஸ்லாமிய அமீரக ஆப்கானிஸ்தானை புறக்கணிக்க நேர்ந்தால் தலிபான்கள் உலகம் முழுவதும் தங்களுடைய பயங்கரவாதச் செயல்களை ஐ.எஸ். இயக்கம், அல்கொய்தா அமைப்பின் தீவிரவாதிகளுடன் கைகோர்த்து தூண்டிவிடுவார்கள் என்பது நிச்சயம்.
பெண்கள் கல்வி கற்பதையும், வேலைக்கு செல்வதையும் நாங்கள் அனுமதிப்போம், நன்கு ஆட்சி செய்வோம் என்று தற்போது தலிபான்கள் கூறுகின்றனர். ஆனால் இதை யாரும் நம்ப மாட்டார்கள். ஏனென்றால் இப்படி சொல்வதே பெண்களை இழிவுபடுத்துவதுபோலாகும்.
என்னதான் தலிபான்கள் வேடம் போட்டாலும், அது பசுத்தோல் போர்த்திய புலியின் கதையாகத்தான் இருக்கும். எனவே இந்தியா மட்டுமல்ல உலகில் ஜனநாயக ஆட்சி நடக்கும் அத்தனை நாடுகளுமே தலிபான்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்!
0
0