மீண்டும் ஒரு ஆர்.கே. நகர் முடிவு? அம்பலமாகும் ஓபிஎஸ் சதித் திட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
30 August 2022, 8:00 pm
OPS TTV - Updatenews360
Quick Share

என்னதான் நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வந்தாலும், அதிமுகவில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கை சிறிதுகூட குறைக்க முடியவில்லையே என்ற மனக்கவலை ஓ.பன்னீர்செல்வத்திடம் மண்டிக் கிடப்பதை அவருடைய அண்மைக்கால பேச்சு மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

ஓபிஎஸ் திடீர் மனமாற்றம்

கட்சியின் அடிமட்ட தொண்டர்கள், ஒன்றிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், ஒட்டு மொத்த எம்எல்ஏக்க்கள் என யாரிடமும் அவருக்கு ஆதரவு இல்லை என்பது அதிமுகவினருக்கு வெளிப்படையாக தெரிந்த விஷயம். கட்சிக்கு அப்பாற்பட்டவர்களுக்கும் இது நன்றாகவே தெரியும்.

அதனால்தான், புலிக்குப் பயந்தவர்கள் எல்லாம் என்மீது படுத்து உயிரை காப்பாற்றிக்
கொள்ளுங்கள் என்பது போல கட்சியில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களாக ஓபிஎஸ் பேசி வருவதாக கருதத் தோன்றுகிறது.

நிலைப்பாட்டை மாற்றிய ஓபிஎஸ்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதி முன்பாக 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமர்ந்து எந்த சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தினாரோ அவருடைய காலிலேயே போய் இப்போது ஓபிஎஸ் பொத்தென்று விழுகிறார்.

அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் டிடிவி தினகரனை எந்த விதத்திலும் கட்சியில் சேர்க்க மாட்டேன் என்று உறுதி அளித்தால் மட்டுமே எனது அணியை அதிமுகவுடன் இணைப்பேன் என்று ஓபிஎஸ் நிபந்தனை விதித்து, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் துணை முதலமைச்சர் பதவியையும் பெற்றுக் கொண்டார்.

சரணாகதி ஆன ஓபிஎஸ்

ஆனால் எதிர்காலத்தில் அரசியல் அனாதை ஆகி விடுவோமோ என்று பயந்து போய் அந்த இருவரிடமே இப்போது சரணாகதி ஆகி இருக்கிறார். குறிப்பிட்ட அந்த இருவருக்காக மட்டும் எதற்காக ஓபிஎஸ் இப்படி உரக்க கூவுகிறார் என்பது சாமானியனுக்கும் தெரிந்த விஷயம்.

அந்த ஆணவம், அகம்பாவம்தான் தற்போது அவருடைய பேச்சிலும் வெளிப்படுகிறது. நேற்று தனது ஆதரவாளர்களிடம் பேசும்போது ஓபிஎஸ் ஒரு சவாலை விடுத்திருக்கிறார்.

திடீர் சவால்

“எனது கட்சி பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். அதே போன்று நீங்களும் பதவியை ராஜினாமா செய்யுங்கள். இரண்டு பேரும் தொண்டர்களை சந்திக்கலாம். தயாரா?…” என்று எடப்பாடி பழனிசாமியின் பெயரை குறிப்பிடாமல் அவர்
ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக கோர்ட் படியேறிக் கொண்டிருக்கும் ஓபிஎஸ் இப்படி திடீரென ஆவேசம் காட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

அடுத்து அவர் என்ன மாதிரியான சவால் விடுப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதில் உள்குத்து வேலை எதுவும் இருக்குமோ, என்ற சந்தேகத்தையும் அவருடைய பேச்சு ஏற்படுத்துகிறது.

பின்னால் இருந்து இயக்கும் திமுக

ஏனென்றால் அவரை பின்னால் இருந்து இயக்குவது டிடிவி தினகரன்தான் என்பது இந்த ஊர் உலகமே அறிந்த ரகசியம். இது தவிர, எதிரி மிக பலவீனமாக இருந்தால்தான் எப்போதும் நமக்கு நல்லது என்று கணக்குப் போடும் திமுக தலைமையும் ஓபிஎஸ்-க்கு பக்கபலமாக இருக்கிறது என்கிறார்கள். இன்னொரு பக்கம் பாஜகவை சேர்ந்த ஆடிட்டர் குருமூர்த்தி டெல்லி மேலிடம் மூலம் ஓபிஎஸ்-க்கு முழு ஆதரவைப் பெற்று தந்திருப்பதாக கூறப்படுகிறது.

போதாக்குறைக்கு சில குறிப்பிட்ட டிவி செய்தி சேனல்களும் அதன் நெறியாளர்களும், யூ டியூபர்களும், ஓபிஎஸ்க்குத்தான் பெரும் ஆதரவு இருக்கிறது என்பது போல ஒரு கட்டமைப்பை உருவாக்கி அதை திட்டமிட்டு மக்களிடம் பரப்பி வருவதையும் பார்க்க முடிகிறது.

முன்னேறும் இபிஎஸ்

“இப்படி நாலாபுறமும் அரசியல் களத்தில் முன்னேற முடியாத அளவிற்கு குழிபறிப்பு, முட்டுக்கட்டை போடும் வேலைகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தாலும் அதையெல்லாம் முறியடித்து எடப்பாடி பழனிசாமி, தனது ஆதரவு படையுடன் முன்னேறிக் கொண்டிருக்கிறார், என்பதே கள எதார்த்தம். அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“கட்சியில் சீர்திருத்தம் மேற்கொள்ள பல ஆலோசனைகளை கூறினேன். ஆனால் அதை யாரும் கேட்கவில்லை என்று ஓபிஎஸ் இப்போது புலம்புவது எதற்காக என்று புரியவில்லை.

சதி வேலை பின்னும் ஓபிஎஸ்

உண்மையிலேயே கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் எண்ணம் அவருக்கு இருந்திருந்தால் அவர் இதை கடந்த ஆண்டே பொதுவெளியில் பேசியிருக்கவேண்டும்.
அப்போதும் பேசவில்லை, 2021 தேர்தல் தோல்விக்கு அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்யாததுதான் முக்கிய காரணம் என்று பரவலாக குற்றம் சாட்டப்பட்ட நேரத்திலும் அதுபற்றி அவர் வாயே திறக்கவில்லை. கட்சி
ஒற்றைத் தலைமையை நோக்கி பயணிக்கிறது என்பதை உணர்ந்துகொண்ட போதும்கூட அவர் இதைச் சொல்லவில்லை. ஆனால் தனது பதவிக்கு ஆபத்து வரும் என்று பயந்து இப்போது குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகிறார். அவர் ஆவேசத்துடன் பொங்கி எழுந்து சொல்வதால் அதை உண்மை என்று யாரும் நம்பி விடப்போவதில்லை.

கட்சிப் பதவியை விட்டு இருவரும் விலகுவோம். தொண்டர்கள் ஆதரவு யாருக்கு இருக்கிறது என பார்ப்போம் என்று இப்போது ஓபிஎஸ் அறைகூவல் விடுக்கிறார் என்றால் இதில் ஏதோ மிகப்பெரிய ஒரு சதி வேலை இருப்பதாக சந்தேகமும் எழுகிறது.

அடுத்து அவர் மக்கள் செல்வாக்கு யாருக்கு இருக்கிறது என்று பார்ப்போம். இருவரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு இடைத் தேர்தலை சந்திப்போம். தயாரா? என்று சவால் விடுப்பார் என்ற பேச்சும் உள்ளது.

டிடிவி மாஸ்டர் பிளான்?

இது டிடிவி தினகரனின் யோசனை போல் தெரிகிறது. ஏனென்றால் 2017 இறுதியில் ஆர்கே நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தபோது அதில் திமுக எளிதில் வெற்றி பெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த தொகுதியில் செல்வாக்கு கொண்ட திமுகவின் வேட்பாளர் மருது கணேஷ் வெற்றி பெறவில்லை. மாறாக சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரனுக்கு திமுகவினர் ஓட்டளித்து அவரை வெற்றி பெற வைத்து விட்டனர்.

இதனால்தான் அந்த தேர்தலில் திமுக வேட்பாளர் டெபாசிட் தொகையையும் பறிகொடுக்க நேர்ந்தது. அதிமுக வேட்பாளர் மதுசூதனன் இரண்டாமிடமே பெற முடிந்தது. இத்தனைக்கும் இந்தத் தேர்தலில் திமுக மிகப் பெரிய கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

இப்படி தினகரனை திமுக வெற்றி பெற வைத்ததற்கு முக்கிய காரணம், அவர் அதிமுக ஆட்சிக் கவிழ்ப்பு வேலையில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்பதற்காகத்தான். திமுக தலைமையின் இந்த விருப்பத்தை டிடிவி தினகரன் தனது எம்எல்ஏ பதவி காலம் முடியும் வரை நிறைவேற்றவும் செய்தார்.

தில்லு முல்லுக்கு தயார்

அதேபோல்தான் தற்போது ஓபிஎஸ் விடுத்துள்ள அழைப்பும் இருக்கிறது.
அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போடிநாயக்கனூரில் போட்டியிட்டால் அதிமுகவில் மிகவும் பலவீனமாக உள்ள அவரை தனது காரியத்தை சாதித்து கொள்வதற்காக ஆளும் கட்சியான திமுக எளிதில் வெற்றி பெற வைத்து விடும்.

அதேநேரம் எடப்பாடி தொகுதியில் பழனிசாமியை தோற்கடிக்க எல்லாத் தில்லுமுல்லு வேலைகளிலும் திமுக ஈடுபடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதுவே நடக்க வேண்டும் என்ற எண்ணம் ஓபிஎஸ்சிடமும் மேலோங்கி இருக்கும். அப்போதுதான் மக்கள் ஆதரவும், கட்சி தொண்டர்கள் ஆதரவும் உங்களுக்கு இல்லை என்று கூறி கட்சியை முழுமையாக கைப்பற்ற அவருக்கு வாய்ப்பு உருவாகும். எனவே ஓபிஎஸ்சின் இந்த சதிப் ‘பொறி’யில் எடப்பாடி பழனிசாமி ஒருபோதும் சிக்கிக்கொண்டு விடக்கூடாது.

அவர் மட்டுமல்ல, அவருடைய ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவருமே இந்த விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாரும் எதிர் சவால் விட்டு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விடக்கூடாது. ஏனென்றால் ஓபிஎஸ் தரப்பினரை எப்படியாவது திமுக ஜெயிக்க வைத்துவிடும்.

மக்களின் மனங்களை வென்ற இபிஎஸ்

ஏற்கனவே 2021 தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி 93 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை வீழ்த்தி கட்சித் தொண்டர்களிடமும் பொதுமக்களிடமும் தனது செல்வாக்கை நிரூபித்து விட்டார். ஆனால் ஓபிஎஸ்சோ 11 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். எனவே கட்சி தொண்டர்கள், பொது மக்களிடம் தனக்குள்ள செல்வாக்கை நிரூபிக்கவேண்டிய கட்டாயம் அவருக்குத்தான் உள்ளது.

ஒருவேளை கோர்ட்டு தீர்ப்பு கடைசி வரை ஓபிசுக்கு சாதகமாக வந்தாலும் கூட தேர்தல் என்று வரும்போது பெரும்பான்மை எம்எல்ஏ, எம்பிக்களின் ஆதரவை நிரூபித்து அதிமுகவை எடப்பாடி பழனிசாமி தன் வசம் கொண்டு வந்துவிட முடியும். அதனால்தான் ஓபிஎஸ் தரப்பு தற்போது தினகரன் பிளான்படி எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்களுக்கு தீவிர வலை வீசத் தொடங்கி இருக்கிறது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் உண்மையை போட்டு உடைக்கின்றனர்.

Views: - 387

0

0