வெளுத்து வாங்கும் கனமழை… மீண்டும் சென்னையில் முக்கிய சுரங்கப்பாதைகள் மூடல் : மக்கள் கடும் அவதி!!

Author: Udayachandran RadhaKrishnan
2 November 2022, 8:54 am
Tunnels Closed - Updatenews360
Quick Share

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) 29-ந் தேதி தொடங்கியது. பருவமழையின் முதல் மழைப்பொழிவு நாளை மறுதினம் வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி, வட மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் சென்னையில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. அதனால் இரண்டு சுரங்கப்பாதைகள் மூடப்பட்டதாகவும் ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் மழை நீர் அதிகம் தேங்கியுள்ள கணேசபுரம் மற்றும் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை இரண்டும் மூடப்பட்டுள்ளது. சுரங்கபாதையில் தேங்கி உள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்கள் போக்குவரத்துக்காக மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரங்கராஜபுரம் சுரங்க பாதை வழியாக செல்லும் வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல் ரங்கராஜபுரம் மேம்பாலம் வழியே செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

அதேபோல் கணேசபுரம் சுரங்கபாதை வழியாக உள்ளிருந்து வெளியில் செல்லக்கூடிய வாகனங்கள் புளியந்தோப்பு நெடுஞ்சாலை, காந்தி நகர் ரவுண்டானா மற்றும் பேசின் பாலம் வழியாகவும் வெளியில் இருந்து உள்ளே வரக்கூடிய வாகனங்கள் பெரம்பூர் நெடுஞ்சாலை முரசொலி மாறன் பாலம் வழியாகவும் செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 331

0

0