உழவர் சந்தைகள், மண்டிகள் இயங்கத் தடையா..? வேளாண் சட்டம் குறித்து முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..!

22 September 2020, 4:16 pm
madurai cm - updatenews360
Quick Share

வேளாண் மசோதாக்களால் விவசாயிகள் எந்த நிலையிலும் நஷ்டம் அடையமாட்டார்கள் எனக் கூறி, அச்சட்டத்தின் சாரம்சங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- விளை பொருட்களுக்கான விலை உள்ளிட்டவற்றை விவசாயிகள் தீர்மானிக்க முடியும். வியாபாரிகளுடன் விவசாயிகள் ஒப்பந்தம் செய்ய வேண்டியது கட்டாயம் இல்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட தொகையை விட விளை பொருட்கள் உயர்ந்தால் வியாபாரிகள் விவசாயிகளுக்கு லாபத்தில் பங்கு அளிக்க வேண்டும். ஒப்பந்தம் செய்த தொகைக்கு விளை பொருட்களை கொள்முதல் செய்யவில்லை என்றால், வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளது.

வேளாண் மசோதாக்களின் அம்சங்கள் எதுவும் தெரியாமலேயே மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். வேளாண் மசோதாக்களால் விவசாயிகள் எந்த நிலையிலும் நஷ்டம் அடையமாட்டார்கள். வேளாண் மசோதா மூலம் உணவு பதப்படுத்துதல் துறை வளர்ச்சி அடையும். உணவுப்படுத்துதல் துறை வளர்ச்சி அடைந்தால் கிராமப்பகுதிகளில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்

இந்த சட்டம் ஏற்கனவே தமிழகத்தில் இருக்கிறது. இந்த சட்டத்தை பிற மாநிலங்களிலும் கொண்டு வரும் விதமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. சாகுபடி செய்யும் இடத்திலேயே கொள்முதல் செய்ய இந்த சட்டம் வழிவகை. போக்குவரத்து உள்ளிட்ட செலவுகள் குறைந்து விவசாயிகள் லாபம் பெற முடியும். விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம்.

சாகுபடி செய்யும் இடம், சேமிப்பு கிடங்கு, குளிர்பதன கிடங்கு உள்ளிட்ட வணிக பரப்பு என அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த இடத்தில் நடக்கும் வணிகத்திற்கு வணிக கட்டணம் செலுத்த தேவையில்லை. பிற மாநிலங்களில் வணிக கட்டணங்கள் செலுத்தப்பட்டு வருகிறது.

விவசாயிகள் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் ஊக்குவித்தல், உதவுதல் சட்டம் உழவர் சந்தை திட்டத்திற்கு எதிரானது என்ற கூற்று தவறானது. உழவர் – நுகர்வோர் சந்தைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தவறான புரளிகளை எதிர்கட்சிகள் கிளப்புகின்றன.

மின்னனு வர்த்தகம் மூலம் அகில இந்திய அளவில் போட்டி விலையில் விவசாயிகள் விற்பனை செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், இடைத்தரர்களின்றி விளைபொருட்களை விவசாயிகளே விற்பனை செய்யலாம். உழவன் செயலி மூலம் விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்து கொள்ளலாம். விவசாயிகளை யாரும் கட்டாயப்படுத்த முடியாது.

பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் நெல், கோதுமை உள்ளிட்ட விளைபொருட்களுக்கு சந்தைக் கட்டணம் 3 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. உள்ளாட்சி மேம்பாட்டு மேல்வரி 3 சதவீதம், இடைத்தரர்களுக்கு 2.5 சதவீத கட்டணம் என மொத்தம் 8.5 சதவீதம் வணிகர் செலுத்த வேண்டி உள்ளது. இதனால், வணிகர்கள், விவசாயிகளிடையே அடிமட்ட விலைக்கு விளைபொருட்களை வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படும் என்பதால் பஞ்சாப் அரசும், இடைத்தரர்களும் இந்த சட்டத்தை எதிர்க்கின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் கோதுமை, நெல் ஆகியவற்றை மத்திய அரசு வாங்குவதால், தற்போது அம்மாநில அரசு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால், அதனை வாங்க மத்திய அரசு மறுத்துவிடும் என்ற வதந்தி பரப்பப்பட்டது. எனவே, இந்த பீதியில் பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

ஆனால், பிரதமர் மோடி பஞ்சாப்பிடம் இருந்து கோதுமை மற்றும் நெல் உள்ளிட்ட விளைபொருட்களை வாங்குவது நிறுத்தப்படாது என உறுதியளித்து விட்டார். எனவே, பிற மாநில விவசாயிகளும் பயம் கொள்ளத் தேவையில்லை.

பீகாரை பொறுத்தவரையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் 2006ம் ஆண்டே மூடப்பட்டு விட்டது. தனியார் சந்தைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. விவசாயிகள், வணிகர்களிடம் சந்தை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 282 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. வேளாண் பொருட்களின் விற்பனை உயிர்நாடியாக இருந்து வரும் விற்பனைக் கூடங்களை மேம்படுத்தி, முழுமையான போட்டி உருவாக்கப்பட்டு, வேளாண் பெருமக்கள் பயனடைய தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

உளுந்து, துவரை, பச்சைப் பயிறு, கொப்பரை ஆகியவற்றை கட்டாயம் சொசைட்டியில்தான் விற்பனை செய்ய வேண்டும் என்பதில்லை. வெளிச்சந்தையில் நல்ல விலை கிடைத்தால் விற்பனை செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. ஒருவேளை வெளிச்சந்தையில் விலை வீழ்ச்சியடைந்தால் மட்டுமே சொசைட்டியில் விற்று, நஷ்டத்தை விவசாயிகள் சந்திக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தோட்டப் பொருட்கள் விலை 100 சதவீதம் அதிகரிக்கும் போது, அவற்றின் இருப்பை கட்டுப்படுத்தி பதுக்குதலை தடுக்க முடியும், எனக் கூறினார்.