தேர்தல் வாக்குறுதியும், பட்ஜெட்டும்…!! சொன்னது வேறு… நடந்தது வேறு…

Author: Babu Lakshmanan
14 August 2021, 7:10 pm
agri budget - updatenews360
Quick Share

தமிழக அரசின் பொது பட்ஜெட்டை ஆகஸ்ட் 13-ம் தேதியன்று நிதியமைச்சர், பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். வேளாண் பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

நெல்லுக்கான ஆதார விலை உயர்வு

அதன்படி தமிழகத்தின் முதல் வேளாண் பட்ஜெட்டை இன்று காலை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்த கலைவாணர் அரங்கில் தாக்கல் செய்தார். இதுவும் காகிதமில்லா பட்ஜெட்டாக அமைந்து இருந்தது.

2 மணி நேரம் பேசிய அவர் கூறும்போது,”நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை சன்ன ரகத்திற்கு 70 ரூபாயிலிருந்து 100 ஆக உயர்த்தி கொள்முதல் செய்யப்படும். அதன்படி
ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக 2060 ரூபாயும் சாதாரண நெல்லுக்கு 2015 ரூபாயும் கொள்முதல் விலையாக இருக்கும்.

agri budget - 4- updatenews360

கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு 150 வீதம் வழங்கப்படும். இந்த தொகை நேரடியாக கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்த ஊக்கத் தொகை உயர்வால் ஒரு டன் கரும்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை 2750 ரூபாயிலிருந்து 2,900 ரூபாயாக அதிகரிக்கும். இது ஆரம்பம்தான். இனி ஒவ்வொரு ஆண்டும் இந்த தொகை கூடிக் கொண்டே போகும்.

விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்திற்கு 4 ஆயிரத்து 508 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

ஒட்டன் சத்திரம் மற்றும் பண்ருட்டியில் ரூபாய் ரூ.10 கோடி மதிப்பில் காய்கறி, பழங்களுக்கான குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப்படும்.

பனை மரங்களை வெட்ட மாவட்ட கலெக்டரின் அனுமதி தேவை.

நடப்பாண்டில் ரூ 6 கோடி செலவில் 10 உழவர் சந்தைகள் புதிதாக அமைக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.

ஏமாற்றமே மிஞ்சியது

பொதுவாகவே ஒரு அரசின் முதல் பட்ஜெட் என்றவுடன் சட்டென்று மக்களுக்கு நினைவுக்கு வருவது, தேர்தல் வாக்குறுதிகள்தான். ஆட்சியை கைப்பற்றிய கட்சி, தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமா? என்பதுதான் சாமானிய மக்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கும்.

அதுவும் கொரோனாவால் தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில் திமுக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் அருமருந்தாக இருக்கும் என்று கருதிய மக்களுக்கு இந்த பட்ஜெட்டில் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது, என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

CM Stalin - Updatenews360

சொன்னது வேறு… செய்வது வேறு…

இதுபற்றி அவர்கள் கூறும்போது, “தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கும்போது எந்த ஒரு நலத் திட்டத்தையும் எவ்வாறான முறையில் நிறைவேற்றுவோம் என்பதை அரசியல் கட்சிகள் தெளிவாக அறிவிக்கவேண்டும். அதற்கான நிதி ஆதாரம் இருக்கிறதா? அல்லது உருவாக்க முடியுமா? என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். மாறாக, தேர்தல் அறிக்கையில் கூறுவது ஒன்றாகவும் செயல்படுத்துவது ஒன்றாகவும் இருக்கக்கூடாது.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளை அளித்துள்ளது. இதில் 50க்கும் மேற்பட்டவை மக்களுக்கு, நேரடியாக பணப்பயன்கள் அளிக்கக் கூடியவை. இதனால்தான் ஆட்சிக்கு வந்தபிறகு திமுக தாக்கல் செய்த முதல் பட்ஜெட் மீது மக்களின் ஆர்வம் ஏகத்துக்கும் எகிறியது.

அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. பெண்களுக்கு உள்ளூர் பஸ்களில் இலவச பயணம், ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு போன்ற வாக்குறுதிகளை திமுக அரசு பதவி ஏற்றுக்கொண்ட உடனேயே நடைமுறைப்படுத்தியது. இதனால் மற்ற வாக்குறுதிகளும் சொன்ன மாதிரியே நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் மிகுந்த ஆவலுடன் காத்து இருந்தனர்.

ஆனால், தேர்தல் வாக்குறுதியில் அளித்தது ஒன்றாகவும், நிறைவேற்றுவது தொடர்பாக சொல்வது ஒன்றாகவும் இருக்கிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த பொது பட்ஜெட்டிலும், வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டிலும் இதைக் காண முடிகிறது.

தேர்தலில் வாக்குறுதி அளித்தபோது உள்ளூர் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி வழங்கப்படும் என்றுதான் திமுக அறிவித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் சாதாரண உள்ளூர் பேருந்துகளில் என்று ஒரு முக்கிய நிபந்தனையை விதித்துவிட்டனர்.

இதனால் உள்ளூர் விரைவு பஸ்களில் பெண்கள் பயணம் செய்ய முடியாத நெருக்கடி சூழல் ஏற்பட்டுள்ளது. இதை, முதலிலேயே சாதாரண பஸ்களில் மட்டுமே பயணம் செய்ய அனுமதி என்று தெளிவாக குறிப்பிட்டு இருக்கலாம்.

சொன்னது ரூ.4,000… செய்தது ரூ.2,900

அதேபோல்தான் திமுகவின் தேர்தல் அறிக்கையில் குடும்பத்தலைவிகளுக்கு மாதா மாதம் உரிமைத்தொகை 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் உள்ளது. வாக்குறுதி கொடுத்தபோது தகுதி உடைய குடும்பத் தலைவிகளுக்கு என்று கூறவில்லை. ஆனால் இப்போதோ தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் என்று கடும் நிபந்தனை விதிக்கிறார்கள்.

மேலும் பணக்கார வீட்டு பெண்களுக்கும், சம்பளம் பெறும் மகளிருக்கும் நிவாரண நிதி எதற்கு? என்றும் கேட்கிறார்கள். இது சரியான அணுகுமுறை அல்ல. தேர்தல் வாக்குறுதியிலேயே இதைச் சொல்லி இருக்கலாமே. எனவே பெண்களின் ஒட்டுமொத்த வாக்குகளை பெறுவதற்காக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் என்றே இவற்றை கருதத் தோன்றுகிறது.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என்று உறுதி கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 2060 ரூபாய்தான் அதிகபட்ச தொகையாக உள்ளது.

அடுத்த 4 ஆண்டுகளில் இந்தத் தொகை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 2500 ரூபாயாக உயர்கிறது என்றே கூட வைத்துக் கொண்டாலும், அப்போது 53 லட்சம் தமிழக விவசாயிகளின் செலவினங்கள் கடுமையாக அதிகரித்து குறைந்தபட்ச ஆதரவு விலையை 3,200 ரூபாய் என நிர்ணயம் செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் ஏற்படும்.

அதேபோல்தான் திமுகவின் தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு டன் கரும்புக்கு 4000 ரூபாய் வழங்குவோம் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அதிகபட்சமாக 2,900 ரூபாய் என அதிகரித்து இருக்கிறார்கள். தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கப்பட்டது போல் 4 ஆயிரம் ரூபாயை அடுத்த 4 வருடங்களுக்குள் கொடுத்து விடுவார்கள் என்றே வைத்துக் கொண்டாலும் கூட விலைவாசி உயர்வால் மாநிலம் முழுவதும் உள்ள 5 லட்சம் கரும்பு விவசாயிகளின்
எதிர்பார்ப்பு அப்போது டன்னுக்கு 5 ஆயிரம் ரூபாய் என்பதாக அதிகரித்துவிடும்.

இவற்றுக்கு இணையான மிக முக்கியமானதொரு விஷயமும் உள்ளது. தனியார் மற்றும் அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கரும்பு விவசாயிகளுக்கு 1,200 கோடி ரூபாய் வரை நிலுவைத்தொகை இருக்கிறது. அதை உடனடியாக அவர்கள் பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் இதுதொடர்பாகவும் திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது.

போக்குவரத்து ஊழியர்களுக்கு

கடந்த மாதம் 7-வது சம்பளக் கமிஷன் குழுவின் பரிந்துரைப்படி 28 சதவீத அகவிலைப்படியை மத்திய அரசு அறிவித்தது. ஆனால் தமிழக அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்குவதை 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளது.

அதேபோல் அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்களுக்கு, பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி பற்றி இந்த பட்ஜெட்டில் சொல்லப்படவில்லை.

அரசுத்துறைகள் மற்றும் கல்வி நிலையங்களில் காலியாக உள்ள சுமார் 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி கொடுத்தது. நீர்நிலைகளை பாதுகாக்க 30 ஆயிரம் மகளிர் உள்பட 1 லட்சத்து 5 ஆயிரம் பேருக்கும், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட பொதுச் சொத்துகளை பாதுகாக்க 30 ஆயிரம் பெண்கள் உள்பட 1 லட்சத்து 5 ஆயிரம் பேருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் இதுபற்றி பட்ஜெட்டில் எதுவும் கூறப்படவில்லை.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும் என்று கூறிவிட்டு தற்போது 3 ரூபாய் மட்டுமே குறைத்துள்ளனர்.

டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்பு,கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய், மாதாந்திர அளவீட்டு முறையில் மின்கட்டணம், 30 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு கல்விக் கடன் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகள் எல்லாம் எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தயக்கம் ஏன்..?

இவற்றையெல்லாம் விரைவில் நிறைவேற்றாமல் போனால் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டுமே, இந்த வாக்குறுதிகளை திமுக அளித்தது, என்ற எண்ணம்தான் மக்களுக்கு ஏற்படும். அப்போது திமுக மீதான நம்பகத்தன்மை வெகுவாக குறையலாம். ஏனென்றால் திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்துள்ளது. அதனால் கொடுத்த வாக்குறுதிகளை எப்படியும் நிறைவேற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டு இருந்திருக்கும்.
அதனை தகர்க்கும் விதமாக இந்த இரு பட்ஜெட்டுகளும் அமைந்திருப்பதால் சாமானிய மக்களிடம் அதிருப்தி ஏற்படும் என்பதே நிஜம்.

TN Secretariat- Updatenews360

மாநிலத்தின் நிதி நிலையை சரிப்படுத்திய பின்னர்தான், கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவோம் என்பதும் சரியான அணுகு முறையாக தெரியவில்லை!

தமிழகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த உலகின் தலைசிறந்த 5 பொருளாதார நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்து பின்பும் கூட தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற திமுக அரசு ஏன் தயங்குகிறது? என்பதும் புரியவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்யும் தீர்மானம் முதல் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும் என்று கூறிவிட்டு பின்னர் நழுவிக் கொண்டதுபோல் இந்த வாக்குறுதிகளின் நிலைமையும் ஆகிப் போனதுதான் இதில் வேதனை!” என்று அவர்கள் ஆதங்கப்பட்டனர்.

Views: - 323

0

0