ஓபிஎஸ்சை கைகழுவும் அதிமுக கூட்டணி கட்சிகள்! பலரை சந்தித்தும் பலனில்லை!

Author: Udayachandran RadhaKrishnan
25 January 2023, 8:01 pm
OPS Admk - Updatenews360
Quick Share

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

கட்சி தலைவர்களை சந்திக்கும் ஓபிஎஸ்!!

இந்த நிலையில் இப்போதும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான்தான் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் ஓ.பன்னீர்செல்வம் 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பிடித்த அத்தனை கட்சிகளின் தலைவர்களையும்
கடந்த சில தினங்களாக நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருவது அனைவரும் அறிந்த விஷயம்.

ஆனாலும் அவர் சந்தித்த தலைவர்களில் யாரும் இதுவரை வெளிப்படையாக அவருக்கு ஆதரவு தெரிவித்ததாக தெரியவில்லை. கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக ஒதுங்கிக் கொள்ளத்தான் செய்கிறார்கள் என்பது கண்கூடு.

ஜிகே வாசனுடன் சந்திப்பு!!

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் தனது ஆதரவு இபிஎஸ் அணிக்குதான் என்று உறுதியாக அறிவித்து விட்ட நிலையிலும், அவரை குழப்பமடைய செய்யும் விதமாக, ஓபிஎஸ் நேரில் சென்று ஆதரவு கேட்டதுதான். அப்போதும் கூட ஜி கே வாசன் அசைந்து கொடுக்கவில்லை.

இதில் ஓபிஎஸ் அவமானப்பட்டது தான் மிச்சம். அதைத் தொடர்ந்து இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் எம்பி, புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ சி சண்முகம் ஆகியோரையும் சந்தித்து ஓபிஎஸ் தனக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பிரதமர் மோடியும் இதைத்தான் விரும்புகிறார்

இதன் பிறகு ஓபிஎஸ் செய்தியாளர்களிடம், பேசும்போது ஒரு நூதன விளக்கத்தையும் அளித்தார். “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம். பாஜக போட்டியிட விருப்பம் தெரிவித்தால் ஆதரவு அளிப்போம். அதே நிலைப்பாட்டுடன் புதிய நீதிக் கட்சி தலைவரை சந்தித்தோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களிடம் எங்கள் நிலைப்பாட்டை கூறி விட்டோம். மற்ற கட்சிகளின் நிலைப்பாட்டை நாங்கள் கூற முடியாது. விரைவில் வேட்பாளரை அறிவிப்போம். அதிமுக தொண்டர்களின் மன நிலை அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான். எங்களுடைய நிலைப்பாடும் அதுதான். அதிமுக ஒன்றுபட்டு தேர்தலில் நிற்க வேண்டும் என்றுதான் பிரதமர் மோடியும் விரும்புகிறார்; நாங்களும் விரும்புகிறோம்” என குறிப்பிட்டு உள்ளார்.

இரண்டு அணியும் இணைய வேண்டும் என்று பிரதமர் மோடி உங்களிடம் எப்போது சொன்னார்? என்ற செய்தியாளர்களின் கிடுக்குப் பிடி கேள்விக்கு, “எங்களை சந்திக்கும்போது எல்லாம் பிரதமர் மோடி தன்னுடைய விருப்பத்தை சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்” என்று ஓபிஎஸ் பதில் அளித்துள்ளார்.

அவருடைய இந்த கருத்து அரசியலில் சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தும் விதமாக அமைந்து விட்டது.

கூட்டணி கட்சி என சொல்ல தயங்கும் ஓபிஎஸ்

“நடக்க இருப்பதென்னவோ சட்டப்பேரவை இடைத்தேர்தல். அதனால் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் என ஓபிஎஸ் முதலில் கூறுவதே தவறு. தமிழகத்தில் சட்டப் பேரவை தேர்தலை பொறுத்தவரை, அதிமுகதான் எப்போதும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் என்பது அரசியலில் உள்ளோர் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

அவ்வாறு இருக்கும்போது தன்னை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக் கொள்ளும் ஓபிஎஸ் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சித் தலைவர்கள் என்று சொல்வதற்கு கூட ஏன் தயங்குகிறார்? வெட்கப்படுகிறார்? என்று தெரியவில்லை. பிரதமர் மோடிதான் அதிமுகவின் தலைவர் என்பதுபோல சட்டப் பேரவை தேர்தல் என்றாலும் கூட அவர் சொல்வதைதான் கேட்டு நடப்போம். மற்றபடி எனக்கு என்று சுயமாக எந்த கொள்கையோ, சிந்திக்கும் திறனோ கிடையாது என்பதை ஓபிஎஸ் வெளிப்படையாக ஒப்புக் கொள்வதுபோல இருக்கிறது. இது அரை நூற்றாண்டு கண்ட அதிமுகவை ஓபிஎஸ் பலவீனப்படுத்தும் ஒரு விபரீத முயற்சி.

பாஜகவின் தீவிர விசுவாசி

ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டால், அதிமுக ஆட்சி கலைந்து திமுகவின் ஆட்சி அமைந்துவிடும் என்று கருதித் தான் 2017ம் ஆண்டு துணை முதலமைச்சர் பதவிக்கு அவரை டெல்லி மேலிட பாஜக தலைவர்கள் ஒப்புக்கொள்ள வைத்தனர்.

அந்த நன்றி கடனுக்காக ஓபிஎஸ் இன்று பாஜகவின் தீவிர விசுவாசியாகவே மாறிவிட்டது மட்டுமின்றி மாநில பாஜக தலைவர்களில் ஒருவர் பேசுவது போலவும் உள்ளது என்று அதிமுக தொண்டர்கள் கேலியாக விமர்சிக்கும் நிலையையும் உருவாக்கி விட்டது.

தவிர அதிமுகவின் ஒற்றை தலைமை தொடர்பான பொதுக்குழு விவகாரத்தை ஓபிஎஸ் கோர்ட்டுக்கு எடுத்துச்சென்ற பிறகு, தனிப்பட்ட முறையில் இதுவரை பிரதமர் மோடியை சந்தித்து அவர் பேசவே இல்லை. பிறகு மோடி எங்கே அப்படி சொல்லி இருப்பார் என்ற கேள்வியும் எழுகிறது. உண்மையிலேயே ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சைக் கேட்டுக் கொண்டுதான் ஓபிஎஸ் இப்படி வில்லன் போல் வில்லங்க செயல்களில் ஈடுபடுகிறார், ஆட்டம் போடுகிறார் என்று பெரும்பான்மையான அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் வெளிப்படையாக பேசும் அளவிற்கு ஓபிஎஸ்சின் நிலைமை மிகவும் பரிதாபமாகிவிட்டது.

இபிஎஸ்கே ஆதரவு

அதிமுகவில் 99 சதவீத தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் இருப்பது மாநில பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல தலைவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் அவர்கள் இபிஎஸ்ஸுக்கு ஆதரவாக கருத்து எதையும் தெரிவித்து விடக்கூடாது, ஒன்று திரண்டு விடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் விதமாக பிரதமர் மோடியின் பெயரை பயன்படுத்தி ஓபிஎஸ் மிரட்டுவது போல பேசுகிறார் என்பதையும் அதிமுக தொண்டர்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர்.

அதேநேரம் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுகவினர் பிரதமர் மோடி மீது நல்ல மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கின்றனர் என்பதையும் மறுக்க முடியாது. அதை வைத்து ஓபிஎஸ் அரசியலில் சித்து விளையாட்டை ஆடுவது சரியானது அல்ல.

புளியை கரைத்த ஏசி சண்முகம்

ஏசி சண்முகத்தை பொறுத்தவரை அதிமுக தொடங்கப்பட்டபோது அதில் முன்னணி தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர். 1980ல் ஆரணி சட்டப்பேரவை தொகுதியிலும்
1984 ம் ஆண்டு வேலூர் நாடாளுமன்ற தொகுதியிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 2001-ல் புதிய நீதிக் கட்சியை தொடங்கி 2014 தேர்தலில் பாஜக சார்பில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு மூன்று லட்சத்து 25 ஆயிரம் ஓட்டுகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தவர். பின்பு அதிமுக- பாஜக கூட்டணியில் 2019 தேர்தலில் அதே வேலூர் தொகுதியில் போட்டியிட்டு 7 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவரும் ஆவார்.

தன்னிடம் ஆதரவு கேட்டு சென்ற பிறகு ஓபிஸ்க்கு அவருடைய வயிற்றில் புளியை கரைக்கும் விதமாக ஏ சி சண்முகம் அதிரடியாக ஒரு கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

எம்ஜிஆருக்கு பின்னால்…?

“ஓபிஎஸ் என்னிடம் வந்து, நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில், வேட்பாளரை நிறுத்துகிறோம். தங்களுடைய ஆதரவு வேண்டும் என்று சொன்னார். நான் அவரிடம், அதிமுகவில் பலமுறை பல சிக்கல்கள், பல இக்கட்டான சூழ்நிலைகள் உருவாகி இருக்கிறது. ஆகவே வேட்புமனுவை தாக்கல் செய்வதைவிட, இந்த இயக்கம் ஒன்றாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். எம்ஜிஆரின் இயக்கம், கட்சி, சின்னம் முடங்கிவிடக்கூடாது. அல்லது பிரச்னைகள் வரக்கூடாது. சஙகடம் வரக்கூடாது என்பதற்காகத்தான் நானும் அவரிடம், இந்த பிரச்னையை எப்படியாவது தவிருங்கள். அதிமுக ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றுதான், அதிமுக தொண்டர்கள், விரும்புகிறார்கள்.

ஆகவே, இணைப்பதற்கான வழி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள், இணைப்பதற்கான பாலமாக நான் செயல்படுவேன் என்று கூறினேன். வேட்புமனுவை நீங்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவரிடம் கேட்டுக்கொண்டேன்.

ஒரு உதாரணத்தையும் ஓபிஎஸ்க்கு நினைவுப்படுத்தினேன். எம்ஜிஆருக்கு பின்னால், அதிமுக இரண்டாக மாறியது. ஒன்று ஜெயலலிதா தலைமையிலும், மற்றொன்று எம்ஜிஆர் துணைவியார் ஜானகி தலைமையிலும் ஜா அணி, ஜெ அணி என இரண்டு அணிகள் உருவானது. அப்படி உருவான பிறகு, சட்டப் பேரவை தேர்தலில் தோல்வியைச் சந்தித்து, அப்போது இரட்டை இலை சின்னத்தையும் இழந்தார்கள். அந்த நிலைமை வேண்டாம்.

கட்சி பிளவுபடும்போது, எத்தனை அணி, எத்தனை கிளை என்பதைவிட ஒரு பொது பிம்பம் போய்விடும். அதனால், நீங்கள் வேட்பாளர்களை நிறுத்த வேண்டாம் என்று ஓபிஎஸ்சிடம் கேட்டுக்கொண்டேன். எனக்கு எடப்பாடியாரும் வேண்டியவர். ஓபிஎஸ்சும் வேண்டியவர். வாய்ப்பு கிடைத்தால் இணைப்பு பாலமாக செயல்பட எடப்படியாரிடம் சென்றும் பேசுவேன்” என்று தெரிவித்தார்.

மீண்டும் 1989 சம்பவம்?

“ஏசி சண்முகம் பல விஷயங்களை கூறியிருந்தாலும் அவர் குறிப்பிட்டு சொன்னவற்றில் 1989 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவில் ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும் ஜானகி தலைமையில் இன்னொரு அணியும் மோதியபோது ஜெயலலிதாதான் அதிக தொகுதிகளில் வெற்றி வெற்றி பெற்றார். அதன் பிறகு ஜானகி அரசியலை விட்டு ஒதுங்க நேர்ந்தது என்பதை குறிப்பிட்டதன் மூலம், உங்களுக்கும் அது போன்ற நிலைமை ஏற்பட்டு விடலாம் என்பதை ஓபிஎஸ்க்கு மறைமுகமாக சுட்டிக்காட்டி உங்கள் தரப்பில் வேட்பாளர் யாரையும் நிறுத்த வேண்டாம் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

அதேநேரம் இரண்டு நாட்களுக்கு முன்பு இபிஎஸ் ஆதரவு முன்னாள் அமைச்சர்கள் ஏசி சண்முகத்தை சந்தித்து ஆதரவு கேட்டபோது நீங்கள் வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என்று அவர் சொல்லவில்லை. நான் பாஜக ஆதரவாளன் என்று மட்டுமே அவர்களிடம் குறிப்பிட்டு இருந்தார்.

ஓபிஎஸ்க்கு புரியுமா?

ஆனால் தற்போது ஓபிஎஸ்க்கு அவர் நீங்கள் வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என்று நேரடியாகவே கோரிக்கை விடுத்திருக்கிறார். ஏனென்றால் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் உள்ள ஏசி சண்முகத்துக்கு தற்போது அதிமுக தொண்டர்களிடம் யாருக்கு பெரும் ஆதரவு இருக்கிறது என்பது நன்றாகவே தெரியும். எனவேதான்
நீங்கள் வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என ஓபிஎஸ்க்கு அவர் அட்வைஸ் செய்து இருக்கிறார்” என்று அரசியல் நோக்கர்கள் கோடிட்டு காட்டுகிறார்கள்.

இது புரிய வேண்டிய ஓபிஎஸ்க்கு புரிந்தால் சரிதான்!

Views: - 57

0

0