நிவர் புயலை விட வேகமெடுக்கும் கூட்டணி நெருக்கம் : அதிமுகவுடன் நெருக்கத்தை ஏற்படுத்தும் பாஜக தலைவர்கள்!!

25 November 2020, 8:00 am
admk - bjp cover - updatenews360
Quick Share

சென்னை: தமிழ்நாட்டை நோக்கி நெருங்கிவரும் ‘நிவர்’ புயல் அண்மையில் அறிவிக்கப்பட்ட அதிமுக-பாஜக கூட்டணியில் மேலும் ஒருங்கிணைப்பை உருவாக்கியுள்ளது. புயல் வீசுமுன்பே தமிழகத்துக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளதும், தமிழக பாஜக நடத்திவரும் வேல்யாத்திரையை ரத்து செய்த நடவடிக்கையும், இரு கட்சித்தொண்டர்களையும் உற்சாகப்படுத்தி இணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் இதற்கு முன்பு பெரும் சேதத்தை ஏற்படுத்திய ‘கஜா’ புயலுக்குப் பின்பு மாநிலத்துக்குப் போதிய நிவாரணத்தை மத்திய பாஜக அரசு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. சென்னையைத் தாக்கிய ‘வர்தா’ புயலின்போதும், போதுமான நிவாரண நிதியை மத்திர அரசு தரவில்லை. இதனால், மத்திய அரசு தமிழர்களுக்கு எதிரானது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டினர். மத்தியில் ஆளும் பாஜக தலைவர்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழக மக்களின் நலனில் அக்கறையில்லை என்றும் பேசப்பட்டது. இது 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலித்ததால் அதிமுக-பாஜக கூட்டணியின் வெற்றிவாய்ப்புகள் பாதிக்கப்பட்டன.

CM Letter TO PM - Updatenews360

தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்திருந்தபோது, கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை மத்திய ஆட்சியில் இருந்த திமுக தமிழ்நாட்டுக்கு என்ன செய்தது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் என்ற முறையில் பதில் சொன்ன டி-ஆர்.பாலு, தமிழ்நாட்டில் வீசிய ‘கஜா’ புயலின்போதும், ‘வர்தா’ புயலுக்குப் பின்பும், தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியது என்று கேள்வி கேட்டார்.

இந்தக் கேள்வி ‘நிவர்’ புயலுக்குப் பின்னரும் எதிரொலிக்கக் கூடாது என்று தற்போது பாஜக தலைவர்கள் விழிப்புடன் இருக்கிறார்கள். இரு புயல்களுக்குப் பின்பும் அதிமுக அரசு கேட்ட தொகையை மத்திய அரசு தரவில்லை என்று உணர்வு அதிமுக தொண்டர்களுக்கு இந்தமுறை ஏற்படாதவிதத்தில், இந்த முறை பிரதமர் மோடி தமிழகத்துக்குத் தேவையான உதவிகள் தரப்படும் என்று முன்பே அறிவித்துவிட்டதால், அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால், இரு கட்சியினருக்கும் இடையே நல்ல நெருக்கமும், இணக்கமும் ஏற்படும் என்று பாஜக தலைவர்கள் கருதுகிறார்கள். இது வரும் சட்டமன்றத் தேர்தலில் சிறந்த ஒருங்கிணைப்பையும் செயல்பாடுகளில் வேகத்தையும் ஏற்படுத்தி அதிமுக-பாஜக அணியை வெற்றிப்பாதையில் அழைத்துச்செல்லும் என்று இரு கட்சித் தொண்டர்களும் உறுதியாக நம்புகிறார்கள்.

Vel Yatra ADMK - Updatenews360

மேலும், மாநில பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்த வேல் யாத்திரை, தமிழக அரசுக்கும், பாஜகவுக்கும் இடையே சற்று உரசலை ஏற்படுத்தியிருந்தது. தற்போது தமிழகத்தில் இடைவிடாத நடவடிக்கைகளால் கொரோனாப் பரவலை மாநில அரசு கட்டுப்படுத்தியுள்ள நிலையில், சட்டம் ஒழுங்குப் பாதிப்பு ஏற்படும் என்ற சூழலில், பாஜகவின் யாத்திரைக்கு அதிமுக அரசு அனுமதி வழங்கவில்லை. ஆனால், அனுமதி இல்லாமலேயே வேல் யாத்திரையை பல இடங்களில் எல்.முருகன் நடத்த முயற்சி செய்தார். கூட்டணிக் கட்சி என்று பாராமல் ஒவ்வொரு முறையும் தமிழக அரசு யாத்திரையைத் தடுத்து, பாஜக தலைவர்களையும், தொண்டர்களையும் கைது செய்தது. இது இரு கட்சித் தொண்டர்களுக்கும் மனவருத்தம் ஏற்படுத்துவதாக அமைந்தது.

udhayanidhi arrest - updatenews360

பாஜகவை தொடர்ந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதியும், தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். பாஜகவுக்குப் போட்டியாக காங்கிரசும் வேளாண்மை சட்டத்திருத்தத்தை எதிர்த்து கலப்பை யாத்திரையை நடத்தியது. பாஜக யாத்திரை நடத்தும் இடங்களில் எதிர்ப்புப் போராட்டங்களை நடத்துவோம் என்று சில இயக்கங்கள் அறிவித்துள்ளதால், பாஜகவுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது. அதிமுக-பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வேல் யாத்திரையைக் கைவிடும்படி தமிழகம் வந்திருந்த மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தினார் என்று பாஜகவினர் கூறுகிறார்கள்.

admk - bjp - updatenews360

இதன் மூலம் இரு கட்சிகளுக்கு இடையே இணக்கம் ஏற்படும் என்றும் பாஜக தலைவர்கள் கருதியதாகத் தெரிகிறது. கூட்டணி அறிவித்தவுடன் யாத்திரையைக் கைவிடுவதாக அறிவிக்கக்கூடாது என்று காத்திருந்த முருகன் புயலைக் காரணம் காட்டி யாத்திரையை ரத்து செய்துள்ளார். யாத்திரையைத் தள்ளிப்போடாமல் ரத்து செய்தது இரு கட்சிகளுக்கு இடையே இருந்து உரசலையும், நெருடலையும் முற்றிலும் குறைத்துள்ளது.

கூட்டணியை முன்னரே அறிவித்துள்ளதால் இரு கட்சிகளுக்கு இடையே உரசல் ஏற்படும் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி ஒருங்கிணைப்பை ஏற்படுத்த போதிய காலம் இருக்கும் என்று இரு கட்சிகளின் தலைவர்களும் கருதுகின்றனர். ‘நிவர்’ புயலை மையமாக வைத்து இரு கட்சிகளுக்கும் இடையே சிறந்த இணக்கத்தையும் தமிழக மக்களிடம் நற்பெயரையும் பெறுவதற்கான புயல் வேக நடவடிக்கைகளில் பாஜக தலைவர்கள் இறங்கியுள்ளனர்.

Views: - 29

0

0