மின்சார ரயில்களில் பயணிக்க அனைத்து பெண்கள், குழந்தைகளுக்கு அனுமதி: தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!

22 November 2020, 6:47 am
southern railway - updatenews360
Quick Share

சென்னை: அத்தியாவசிய பணிகளின் பட்டியலின் கீழ் வராத பெண்கள் மற்றும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மின்சார ரயில்களில் பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, தற்போது ஒவ்வொரு கட்டமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கால் பயணிகள் ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.

அதன் பின்னர் பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப சிறப்பு ரயில்களும், அத்தியாவசிய அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்காக மின்சார ரயில்களும் இயக்கப்பட்டது. சென்னையில், ஆரம்பத்தில் 120 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. பின்னர் அதனை 150 ஆக அதிகரித்து, அத்தியாவசிய தனியார் ஊழியர்களும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் மின்சார ரெயில் சேவை 244 ஆக அதிகரிக்கப்பட்டு மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது 40 சதவீத மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

Chennai Metro - updatenews360

இந்நிலையில், இந்த மின்சார ரயில்களில் அத்தியாவசிய பணிகளின் பட்டியலின் கீழ் வராத பெண்களும், அவர்களுடன் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் நாளை முதல் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

அத்தியாவசிய பணிகள் பட்டியலின் கீழ் வராத பெண் பயணிகள் சாதாரண நேரங்களில், காலை 7 மணி வரையிலும், அதன்பின்னர் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், இரவு 7.30 மணிக்கு பிறகும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மின்சார ரெயில்களில் பயணிக்கலாம். அதேவேளையில் ஞாயிற்றுக்கிழமைகளில் நாள் முழுவதும் மின்சார ரெயில்களில் அத்தியாவசிய பட்டியலின் கீழ் வராத பெண்கள் மற்றும் குழந்தைகள் பயணிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

மேலும் இவர்களுக்கான ரெயில் டிக்கெட், சாதாரண நேரங்களில், தாங்கள் புறப்படும் ரெயில் நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.மேலும் அத்தியாவசிய பட்டியலின் கீழ் வராத பெண் பயணிகள் கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில், அதாவது காலை 7 முதல் 10 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 7.30 மணி வரையிலும் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை பயணிக்க அனுமதி இல்லை என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Views: - 20

0

0