திமுகவுக்கு பெரும் சுமையாகும் காங்கிரஸ் : கூட்டணியில் 12 முதல் 20 தொகுதிகளே ஒதுக்க வாய்ப்பு..!

18 September 2020, 9:00 pm
DMK - Congress - Updatenews360
Quick Share

சென்னை: நீட் ஆதரவு வழக்கறிஞர் நளினி சிதம்பரத்தை ஆதரித்து சட்டமன்றத்தில் காங்கிரஸ் அமளியில் ஈடுபட்டது மெல்லமெல்லப் பொதுவெளியில் சர்ச்சையாக மாறிவருவதால், வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு ஒதுக்கும் இடங்களைக் குறைத்துக்கொள்ளலாம் என்ற மனநிலை திமுகவில் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் திமுகவினர் அமைச்சர்களாக இருந்தனர். அப்போது ஈழத்தமிழர் படுகொலை, காவிரி, முல்லைபெரியாறு, நீட் தேர்வு, ஜல்லிக்கட்டு, காவிரிப்படுகையில் மீத்தேன் திட்டம் போன்ற பல பிரச்சினைகளிலும் திமுக எந்த எதிர்ப்பும் இல்லாமல் தலையாட்டி வந்தது அது தற்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பெரும் தலைவலியாக மாறி வருகிறது. எந்தப் பிரச்சினையில் அவர் பேசினாலும் திமுக மத்திய அரசில் இடம்பெற்றபோது, திமுக எப்படி நடந்துகொண்டது என்ற கேள்வி எழுவதும் திமுகவை நோக்கி எதிர்க்குற்றச்சாட்டுகள் எழுவதும் தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது.

இப்போதும் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால், அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வலு ஏற்பட்டுள்ளது. தமிழர் உரிமை, தமிழ்நாட்டு நலன்கள் அடிப்படையில், திமுக தற்போது பேசிவரும் அனைத்து பேச்சுகளுக்கும் காங்கிரஸ் கூட்டணி ஆப்பு வைத்துவிடுமோ என்று திமுகவின் முக்கிய நிர்வாகிகள் யோசித்துவருகின்றனர்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் நீட் கொண்டுவரப்பட்டது என்று அதிமுக குற்றம்சாட்டிவரும் நிலையில், நீட்டுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் வாதாடியதோடு மட்டுமில்லாமல், இனி நீட்டை யாராலும் தடை செய்ய முடியாது என்று பொதுவெளியிலும் பேசிய நளினி சிதம்பரத்தை ஆதரித்து ,காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் போராடியது அதிமுகவின் குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துவிட்டது.

நீட் அறிமுகப்படுத்தியபோதே அதில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், சிதம்பரம் ஆகியோரின் பங்கும் இருக்கின்றது என்று கூறப்பட்டது. இதுவரை நீட்டை எதிர்த்து சிதம்பரம் எந்தவிதமான கருத்தையும் வெளியிடவில்லை. திரைப்பட நடிகர் சூர்யா போன்றவர்கள் நீட்டை எதிர்த்துப் பேசிவரும் நிலையிலும் சிதம்பரம் மௌனம் காத்து வருகிறார்.

stalin - nalini - - updatenews360

இந்நிலையில், நளினி சிதம்பரத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அமளி செய்தது தமிழ்நாட்டில் விவாதப்பொருளாகி வருகிறது. இது குறித்து இன்று கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உட்பட பெரும்பாலான தலைவர்கள், நளினி சிதம்பரத்தை காங்கிரஸ் ஆதரித்து சட்டமன்றத்தில் போராடியதைக் கண்டித்துள்ளனர். நீட் தேர்வில் நளினி சிதம்பரத்தின் நிலைப்பாடு காங்கிரசின் நிலைப்பாடு இல்லையென்றால், கட்சியில் இல்லாத நளினிக்காக சட்டமன்றத்தில் காங்கிரஸ் ஏன் போராட வேண்டும் என்ற கேள்வி மக்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரசுக்குத் தமிழ்நாட்டில் ஆதரவு குறைந்து வருகிறது. 2011 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியில் 63 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் வெறும் 5 இடங்களில்தான் வென்றது. 58 இடங்களில் தோற்றது. கடந்த 2016 தேர்தலிலும் அக்கட்சிக்குத் தரப்பட்ட 41 தொகுதிகளில் 33 இடங்களில் தோற்று வெறும் 8 இடங்களில்தான் வென்றது.
வரும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவுக்கு காங்கிரஸ் பெரும் சுமையாக இருக்கும் என்று திமுக நிர்வாகிகள் கருதுகின்றனர். எனவே, வரும் தேர்தலில் காங்கிரசுக்கு 12 முதல் 20 தொகுதிகள்தான் ஒதுக்க வேண்டும் என்ற முடிவில் திமுக இருப்பதாகக் கூறப்படுகிறது.