கூட்டணி விவகாரத்தில் உத்தரவாதமில்லாத ஸ்டாலினின் அறிக்கை : தேர்தல் அறிவிப்புக்கு பிறகு தொகுதிப்பேச்சு… திகிலில் தோழமைக்கட்சிகள்!!

Author: Babu
13 October 2020, 7:31 pm
Quick Share

சென்னை: திமுக கூட்டணி குறித்து அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போதுள்ள கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் நீடிக்கும் என்று தெளிவான உத்தரவாதம் இல்லாததால், அவரது ‘ஆட்டவோ அசைக்கவோ முடியாது’ போன்ற அறிக்கையால் கூட்டணியில் இருந்து முன்பே வெளியேறிவிடலாம் என்ற சிந்தனையில் இருக்கும் கட்சிகளின் சந்தேகம் தீரவில்லை.

ஸ்டாலின் தனது அறிக்கையில் ‘தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னர்தான் தொகுதிகள் இறுதிசெய்வது வாடிக்கை’ என்று சொல்லியிருப்பது கடைசிநேரத்தில்தான் பேச்சுகள் நடைபெறும் என்பதையும் சொல்லாமல் சொல்கிறது. கடைசி நேரத்தில் தொகுதிப் பேச்சுகளில் என்ன நடக்குமோ என்ற திகிலிலும் சந்தேகத்திலும் மட்டுமே ஸ்டாலினின் அறிக்கை கூட்டணிக் கட்சித் தலைவர்களையும், தொண்டர்களையும் வைத்திருக்கின்றதே தவிர, எந்தத் தெளிவையும் தரவில்லை.

2021 தேர்தலை நோக்கி வெற்றிகரமாக வீறுநடைபோடும் கூட்டணி என்று கூறும் ஸ்டாலின், நேரடியாக அந்தத் தேர்தலில் தற்போதைய கூட்டணி தொடரும் என்று கூறாததோடு, கூட்டணியில் தற்போது இருக்கும் கட்சிகளின் பெயரையும் ஒரு இடத்திலும் தெரிவிக்கவில்லை. திமுகவுடன் எந்தெந்தக் கட்சிகளுக்கு கூட்டணி நீடிக்கும், எந்தெந்த கட்சிகள் வெளியேற்றப்படும் என்பதுதான் விவாதப்பொருளாக இருக்கும் நிலையில், எந்தக் கட்சியும் வெளியேற்றப்படாது என்று நேரடியாகக் கூறாமல் ஏன் சுற்றிவளைத்துக் கூறுகிறார் என்று கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தலைசுற்றிப்போயிருக்கிறார்கள்.

மேலும், இந்த விவாதத்தையே தொடங்கி வைத்தது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அளித்த பேட்டிதான். அந்தப் பேட்டியில் ‘தற்போதுள்ள திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறலாம். சில கட்சிகள் உள்ளே வரலாம். யார் யார் இருப்பார்கள் என்பது தேர்தல் நேரத்தில்தான் தெரியும்’ என்று அவர் கூறியதற்கு நேரடி மறுப்பு எதையும் ஸ்டாலின் தெரிவிக்கவில்லை. திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் கடைசி நேரத்தில் வெளியேற்றப்படும் என்பது அவர் கூறுகிறபடி பத்திரிகைகளிலோ, வேறு ஊடகங்களிலோ வந்த ‘அதீதமான கற்பனையாகவோ, அளவில்லா ஊகத்தின் அடிப்படையிலோ’ இருந்தால் ஸ்டாலின் அதற்கு நேரடியாக மறுப்பு தெரிவிக்கத் தேவையில்லை என்று சொல்லலாம்.

duraimurugan - stalin1 - updatenews360

ஆனால், அப்படி ஒரு கருத்தை ஊடங்களில் பேசி விவாதப்பொருளாக ஆக்கியதே கட்சியின் பொதுச்செயலாளர் என்பதால், அவர் கூறியபடி எந்தக் கட்சியும் வெளியேற்றப்படாது என்பதை ஸ்டாலின் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். ஆனால், அறிக்கையில் ‘வலிவுடனும் பொலிவுடனும்’ போன்ற ஜோடனை வார்த்தைகள் இருக்கின்றதே தவிர, தெளிவுடன் உத்தரவாதம் எதுவும் இல்லை என்பதைக் கூட்டணிக்கட்சிகளின் தொண்டர்கள் சந்தேகக்கண்ணுடன் பார்க்கிறார்கள்.

திமுக 200 இடங்களில் போட்டியிடும் என்பது அனுமானம் என்று கூறியிருக்கும் ஸ்டாலின், கூட்டணிக் கட்சிகள் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று திமுக சார்பில் கூறப்பட்டது என்று வந்த செய்திகளை மறுக்கவில்லை என்பதையும் சம்பந்தப்பட்ட கட்சிகள் கூர்மையாக கவனித்துவருகின்றன. அதனால், திமுக சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை இன்னும் கைவிடப்படவில்லை என்பதையே ஸ்டாலின் அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியதை அறிக்கையின் எந்த இடத்திலும் ஸ்டாலின் நேரடியாக மறுக்காமல் பூசி மெழுகியது ஏன் என்று கூட்டணிக்கட்சிகள் சந்தேகத்தோடு பார்ப்பது மட்டுமின்றி சர்ச்சையை ஏற்படுத்திய துரைமுருகனைக் கண்டிக்காமல் ஊடகங்களைக் குற்றம்சாட்டிப் பேசுவதால் இரு தலைவர்களும் பேசிவைத்து நடத்தும் நாடகமா என்று அவநம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

குறைந்தபட்சம் சர்ச்சையான கருத்து தெரிவித்த துரைமுருகனையே அவரது பேட்டியின் உள்ளடக்கத்தை மறுக்கச்சொல்லி அறிக்கை வெளியிட வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. திமுக 200 இடங்களில் போட்டியிடும் என்று ஊடகங்களில் செய்திகள் பல வாரங்களாக வெளிவந்த வண்ணம் இருக்கின்றன, ஆனால், அப்போதெல்லாம் அதைக் கண்டுகொள்ளாத ஸ்டாலின் இது குறித்து அதிமுக அமைச்சர்கள் கருத்து சொன்னபிறகுதான் அறிக்கை தருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடைசி நேரத்தில் கழற்றிவிடப்படலாம் என்று கூட்டணித் தலைவர்கள் எண்ணுவதால் ஒதுக்கப்படும் இடங்களில் எண்ணிக்கையையும் எந்தத் தொகுதிகள் என்பதையும் அடுத்த ஓரிரு மாதங்களில் முடிவு செய்து அறிவித்துவிடுவது பாதுகாப்பானது என்று கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கருதுகிறார்கள். முன்னமே தொகுதி ஒதுக்கீட்டுப் பேச்சுகளை முடித்துவிட்டால் தேர்தல் பணிகளையும் விரைவாகத் தொடங்கிவிடலாம் என்பது அக்கட்சிகளின் சிந்தனையாகும்.

திமுக கூட்டணியின் தேர்தல் வியூகம் முன் கூட்டியே எதிர்க்கட்சிகளுக்குத் தெரிந்துபோகும் என்று ஸ்டாலின் கருதினால் தொகுதி உடன்பாடு குறித்து பேசி முடிவு செய்ததை வெளிப்படையாக அறிவிக்காமல் இருக்கலாமே என்று கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் நினைக்கிறார்கள். வெளிப்படையாக அறிவிக்காத நிலையில் எதிர்க்கட்சி அணியில் இருந்து யாராவது வருவார்கள் என்று எதிர்க்கட்சிகளைக் குழப்புவது போன்ற நடவடிக்கைகளையும் தடையின்றி செய்யலாமே என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.

Views: - 33

0

0