ஆமா, இப்ப நாங்க எந்தக் கட்சி… மணல் கடத்தலுக்கு புது ‘டெக்னிக்’ : அமமுக நிர்வாகிகளால் பதறும் தினகரன்…!!

Author: Babu
24 July 2021, 6:14 pm
AMMK - updatenews360
Quick Share

சினிமாவை மிஞ்சிய நிகழ்வு

சிவகங்கை மாவட்டத்தில் நடந்த ஒருமணல் கடத்தல் சம்பவம் தொடர்பாக 2 நாட்களுக்கு முன்பு
சமூக ஊடங்களில் பரவிய ஒரு வீடியோ காட்சி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
அது திரைப்பட திகில் காட்சிகளையெல்லாம் மிஞ்சும் அளவிற்கும் இருந்தது.

அந்த மாவட்டத்தின் தேவகோட்டை அருகேயுள்ள திருவேம்பத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு பகுதியில் பட்டப்பகலில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

sand theft - updatenews360

இதையடுத்து சம்பவ இடத்துக்கு 2 போலீஸ்காரர்கள் பைக்கில் விரைந்தபோது ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக மணல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வேகமாக கிளம்பியது. அந்த லாரியில் நம்பர்பிளேட் எதுவும் பொருத்தப்படவில்லை.

லாரியை போலீசார் மடக்கிப் பிடிக்க முயன்றபோது அதற்கு பின்பு பாதுகாப்பாக ஒரு வெள்ளை நிற சொகுசு கார் சென்றது. அந்த காரில் கட்டியிருந்த திமுக கொடியைப் பார்த்ததும் போலீசார் தயங்கினர். என்றபோதிலும் துணிச்சலுடன் மணல் கடத்தல் லாரியையும், பாதுகாப்புக்காக சென்று கொண்டிருந்த காரையும் ‘பைக்’கில் சினிமா படப் பாணியில் துரத்த ஆரம்பித்தனர்.

ஐந்தாறு கிலோ மீட்டர் தூரத்திற்கு, மணல் லாரியும், சொகுசு காரும் போலீசுக்கு தண்ணி காட்டியது. ஒருவழியாக பைக்கில் துரத்தி சென்ற இரு போலீஸ்காரர்களும், லாரியின் அருகே, சென்று “வண்டிய நிப்பாட்டிரு, இல்லேன்னா அதுக்காக ரொம்ப வருத்தப்படுவே” என்று டிரைவரை எச்சரித்துள்ளனர். ஆனாலும் அதை சட்டை செய்யாமல் டிரைவர் லாரியை அங்கிருந்து படுவேகத்தில் ஓட்டி சென்று விட்டார்.

இதற்கிடையே காரில் சென்றவர்கள் போலீசாரின் பைக்கை மறித்து, உங்க ஸ்டேஷன் எஸ்ஐஐ பேசுகிறார் என்று கூறி செல்போனை அவர்களிடம் கொடுத்துள்ளனர். அதில் சிறிது நேரம் பேசிய போலீஸ்காரர்கள் பின்பு வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் விட்டுவிட்டனர்.

திடீர் திருப்பம்

இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு மேல் மேலாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில்தான் மணல் கடத்தல் லாரியையும், அதற்குப் பாதுகாப்பாக சென்ற காரையும் போலீஸ்காரர்கள் பைக்கில் துரத்தி செல்லும் வீடியோ காட்சி 2 நாட்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் பரவியுள்ளது.

இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், மணல் கடத்தல் லாரியை போலீசார் பைக்கில் துரத்திச்சென்ற காட்சியை சமூக ஊடகங்களில் பார்த்த பிறகே இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாருக்கு தெரியவந்துள்ளது.
இதனால் கடும் அதிருப்திக்குள்ளான அவர் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் விட்ட மணல் கடத்தல் லாரி, திமுக கொடி கட்டிய கார் இரண்டையும் பறிமுதல் செய்யவும், காரில் வந்தவர்களையும் லாரி ஓட்டுனரையும் உடனே கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து, வீடியோவை ஆதாரமாக கொண்டு அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி திருவேகம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியபோது சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தேவகோட்டை அருகேயுள்ள புதுகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விஜயன் மற்றும் சிறுநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்பது தெரியவந்தது.

இவர்களில் பிரபுவை போலீசார் கைது செய்து விட்டனர். திமுக கொடி கட்டிய காரில் வந்த விஜய் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

முக்கிய குற்றவாளியான விஜயன் தலைமறைவாகிவிட்டார். காரில் திமுக கொடி கட்டி மணல் கடந்தலில் ஈடுபட்டவர்கள் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

அமமுகவினரின் பலே பிளான்

இதுகுறித்துபோலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, “திமுக கொடி கட்டிய காரில் வந்தவர்கள் திமுகவினர் அல்ல. அவர்கள் இருவரும் அமமுகவை சேர்ந்தவர்கள்.
இவர்களில் ஒருவர் அக்கட்சியின் கிளைச் செயலாளர். திமுக கொடியை கட்டிக்கொண்டு பாதுகாப்பாக வந்தால் சோதனைச் சாவடிகளில் லாரியை போலீசார் பிடிக்கமாட்டார்கள் என்ற தைரியத்தில் இப்படி வந்துள்ளனர். திருவேகம்பத்தூர் சோதனைச் சாவடியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் ராமநாதபுரம் மாவட்ட எல்லை வருவதால் லாரியை வேகமாக ஓட்டிச்சென்று உள்ளனர். அப்பகுதிக்குள் சென்றுவிட்டால் எளிதில் தப்பி விடலாம் என்பது அவர்களுடைய திட்டம்.

மணல் கடத்தல்காரர்களுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உதவி செய்தார் என்று கூறுவது தவறு. துரத்திச் செல்லும்போது விபத்து ஏற்பட்டு விடக்கூடாது அதனால் வாகன எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் அடுத்த சோதனைச்சாவடியில் பிடித்து விடலாம் என்றுதான் அவர் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் தேவகோட்டை டிஎஸ்பியின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவர் இடமாறுதல் செய்யப்பட்டு தொடர் விடுமுறையில் இருந்துள்ளதால்
இந்த வழக்கு பற்றி தெரியாமல் போனது” என்று விளக்கம் அளித்தார்.

TTV dinakaran 01 updatenews360

மணல் கடத்தலில் சிக்கிய அமமுகவினர், இதே டெக்னிக்கை வேறு எப்போதாவது
பயன்படுத்தி இருக்கிறார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அம்பலமாகியுள்ள அமமுக நிர்வாகிகளின் இந்த தில்லுமுல்லு அக்கட்சியின் பொதுச் செயலாளர் தினகரனை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

ஏற்கனவே கட்சி கூடாரம் 99 சதவீதம் காலியாகி விட்ட நிலையில் எஞ்சியிருக்கிற கொஞ்ச நஞ்சம் பேரும் இப்படி மாட்டிக்கொண்டு கட்சியின் மானத்தை கப்பலேற்றுகிறார்களே? என்று அவர் கொந்தளித்துப்போய் இருக்கிறாராம்.

பிற கட்சிக் கொடி மீது மட்டுமே ஆசை:

இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகிகள் கூறும்போது, “அமமுகவினர் இந்தமாதிரி தில்லாலங்கடி வேலைகளில் ஈடுபடுவதற்கு தினகரனும், அவருடைய சித்தி சசிகலாவும்
ஒரு காரணம்.

Sasikala Car - Updatenews360

அமமுகவை தொடங்குவதற்கு முன்புவரை தினகரன் அதிமுக கொடியைத்தான் தனது காரில் பயன்படுத்தி வந்தார். சசிகலா அதிமுகவிலேயே இல்லை. ஆனாலும் அதிமுக கொடியை தனது காரில் இப்போதும் பயன்படுத்தி பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறார். இப்படி இவர்கள் தவறான வழியை கையாள்வதால்தான், யாரும் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது என்ற ஆணவத்தில்
துணிந்து அமமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் அதே டெக்னிக்கை பின்பற்றுகின்றனர். எனவே இதில் வியப்படைய எதுவும் கிடையாது” என்றனர்.

Views: - 251

0

0