மராட்டியம் மட்டுமல்ல… தமிழகத்திலும் திமுகவில் இருந்து ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்படுவார் : உண்ணாவிரத போராட்டத்தில் அண்ணாமலை ஆரூடம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 July 2022, 7:46 pm
Annamalai - Updatenews360
Quick Share

திமுகவிலும் ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்படுவார் என பாஜக சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் அண்ணாமலை பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தமிழக பா.ஜ., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார். அதில், தமிழகத்தில் திமுக ஆட்சி ஓராண்டை கடந்துவிட்டது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 505 தேர்தல் வாக்குறுதிகளும், 10 தொலைநோக்கு திட்டமாகவும் கொடுத்தனர். ஆனால் இன்னும் அதனை நிறைவேற்றவில்லை. அதற்காக திமுக.,வினர் சொல்லும் காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. 2023ம் ஆண்டு முடிவதற்குள் மத்திய அரசு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்கிறது. இதனை பா.ஜ.க தேர்தல் வாக்குறுதியாக சொல்லாமல் செய்து காட்டுகிறது.

இந்தியா முழுவதும் பா.ஜ.,வை எதிர்க்க கூடிய கட்சிகள் எதுவும் இல்லாமல் ஒவ்வொரு மாநிலத்திலும் வளர்ந்து வருகிறது. பா.ஜ., ஆளும் மாநிலங்களில் கூட பெயருக்காக ஒரு எதிர்க்கட்சி இருக்கிறது. அதுவும், பா.ஜ.கவின் ஆட்சியை பார்த்து கரைந்துவிடுகிறது. இந்த நிலை தமிழகத்திற்கும் வருவதற்கு வெகுதூரம் இல்லை.

தமிழகத்தில் காங்கிரசும், திமுக.,வும் இருப்பது போல, மஹாராஷ்டிராவில் கொள்கைரீதியாக தொடர்பு இல்லாத சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. ஆனால் தற்போது வெறும் 13 எம்எல்ஏ.,க்களை கொண்ட கட்சி தலைவராக உத்தவ் தாக்கரே உள்ளார். அதேநிலை திமுக.,விற்கும் வரும்.

உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரேவை அமைச்சரவைக்குள் கொண்டு வந்தனர். இதனால் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட எம்எல்ஏ.,க்கள் வெளியேறினர். அதேபோல், தமிழகத்தில் ஸ்டாலின் மகன் உதயநிதியை அமைச்சரவைக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றனர். இங்கேயும் ஒரு ஏக்நாத் ஷிண்டே வெளியேறுவார்.

திமுக அதிகமாக பேசுவது சமூக நீதி. இந்திய அரசியலமைப்பு சட்டம் யாருடைய கையில் இருக்கிறதோ அவரை காணும்போது இந்த நாட்டில் சமூக நீதி இருக்கிறதா இல்லையா என்பது தெரியும். அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலராக உள்ள ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு பா.ஜ.,விற்கு மூன்று முறை வாய்ப்பு கிடைத்தது.

முதலில் இஸ்லாமிய சமூகத்தில் இருந்துவந்து பாரதத்தை நேசித்த அப்துல் கலாமை தேர்ந்தெடுத்தோம். அடுத்த முறை தலீத் சமூகத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்தை தேர்ந்தெடுத்தோம். மூன்றாம் முறையாக இப்போது கிடைத்த வாய்ப்பில் ஜனாதிபதி வேட்பாளராக பா.ஜ.க, அறிவித்த பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு வெற்றிப்பெற உள்ளார். பா.ஜ.கவே சமூக நீதிக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. கட்சியில் இருந்து வாரிசுகள் அடுத்தடுத்து வருவது சமூக நீதி அல்ல. பா.ஜ., அனைத்து சாதிகளும் சமம் என நினைக்கும் கட்சி.

ஜனாதிபதி வேட்பாளரை கூட கண்டுப்பிடிக்க முடியாமல் தவித்து வரும் எதிர்க்கட்சிகள், எந்த தைரியத்தை 2024ல் ஆட்சிக்கு வருவோம் என கூறிவருகின்றன?. தமிழகத்தில் பா.ஜ., எதிர்ப்பது பெரும் எதிரிகளை. பணத்தை கையில் வைத்துக்கொண்டு ஜனநாயகத்தை விலைப்பேச முடியும் என நினைக்கும் கட்சிகள் இருக்கும் தமிழகத்தில் 25 எம்.பி.,களை கொண்டு வருவோம் என பா.ஜ., களத்தில் இறங்கியுள்ளது. 25 எம்.பி.,க்கள் வந்தால்தான் 150 எம்எல்ஏ.,க்களுடன் 2026ல் பா.ஜ., ஆட்சி அமைக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Views: - 117

0

0