‘இடுப்பு’ சர்ச்சையில் சிக்கிய லியோனிக்கு பதவி கொடுப்பதா…? அன்புமணி ராமதாஸ், கல்வியாளர்கள் கொந்தளிப்பு

8 July 2021, 10:09 pm
Quick Share

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திமுகவின் பட்டிமன்ற பேச்சாளரான திண்டுக்கல் ஐ லியோனியை தமிழக அரசு நியமனம் செய்ததுள்ளது.33 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிய 66 வயது லியோனி மிகவும் நகைச்சுவையாக பேசி அவ்வப்போது ஏதாவது சர்ச்சையில் சிக்கிக் கொள்வதுண்டு.2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட கட்சி மேலிடத்திடம் வாய்ப்பும் கேட்டடார். ஆனால் திமுக கூட்டணியில் அந்தத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்டதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் திமுக கூட்டணிக்காக, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவர் பிரசாரம் செய்தார்.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து, கடந்த மார்ச் மாத இறுதியில் பேசியபோது அவர், “ஃபாரின் மாடுகளை எல்லாம் மெஷின் வைத்துதான் பால் கறப்பார்கள். அந்த மாடு எல்லாம் ஒரு மணிநேரத்துக்கு 40 லிட்டர் பால் கறக்கும். அந்த ஃபாரீன் மாட்டு பாலை குடிச்சி குடிச்சி நம்ம ஊர் பெண்கள் பலூன் மாதிரி இத்தா தண்டி ஊதிக்கிடக்குறாங்க… அவங்களோட பிள்ளைகளும் அதே மாதிரி ஊதிக்கிடக்குறாங்க.ஒரு காலத்துல பெண்களோட இடுப்பு 8 மாதிரி இருக்கும். குழந்தைகளை தூக்கி இடுப்புல வச்சா அப்படியே உட்கார்ந்துக்குவாங்க.. 8 போல் இருந்த இடுப்பு பாரீன் மாட்டு பாலை குடிச்சு குடிச்சு இப்போ பேரல் போலாகிடுச்சு” என்று கிண்டலாக குறிப்பிட்டார்.

லியோனி இப்படி பேசியது அந்த பிரச்சாரத்தில் மட்டுமின்றி தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உடனடியாக இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். பெண்களை யாராவது இழிவுபடுத்திப் பேசினால் அவர்களை வன்மையாக கண்டிக்கும் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழியோ, திண்டுக்கல் லியோனியின் பெயரை குறிப்பிடாமல், ‘யாராக இருந்தாலும் அவர்களை கண்டிக்கிறேன்’ என்று தோழமையின் சுட்டுதல்போல் பொத்தாம் பொதுவாக குறிப்பிட்டார். லியோனி, பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக இந்து மக்கள் கட்சியின் சார்பில் கோவை குனியமுத்தூர் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் லியோனி மீது சட்டப்பிரிவு 509-ன் கீழ் போலீசார் வழக்குப்பதிவும் செய்தனர். இதேபோல் தமிழக தலைமை தேர்தல் கமிஷனிடமும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்கவேண்டும் என புகார் கொடுக்கப்பட்டது. தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய பின்பு தமிழக அரசு சார்பில் அவருக்கு ஏதாவது பதவி கொடுக்கப்படலாம் என்ற பேச்சு கடந்த ஒரு மாதமாகவே இருந்துவந்தது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக லியோனி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அவருக்கு இப்படி முக்கிய பதவி கொடுத்ததற்கு கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் கொந்தளித்து போய் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாமகவின் இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில், ஆவேசமாக கூறும்போது, “பெண்களை இழிவுப்படுத்தி பேசுவதையே பிழைப்பாகக் கொண்ட ஒருவரை இந்த பதவியில் அமர்த்துவதை விட, அப்பதவியை மோசமாக அவமதிக்க முடியாது! பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்? பாடநூல் நிறுவனத்தின் பணி அறிவை வளர்க்கும் பாடநூல்களை தயாரிப்பதாகும். லியோனி தலைமையில் தயாரிக்கப்படும் பாடநூல்களை படிக்கும் மாணவர்களின் கதி என்னவாகும்?

திண்டுக்கல் லியோனி சிறந்த ஆசிரியராம். அவரது கடந்த கால பேச்சுகளைக் கேட்டவர்கள் எவரும் இதை நம்ப மாட்டார்கள். பாடநூல் நிறுவனத் தலைவர் என்ற புனிதமான பதவியிலிருந்து லியோனியை நீக்கி விட்டு, தகுதியான கல்வியாளர் ஒருவரை அரசு அமர்த்த வேண்டும்!” என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து இருக்கிறார். நடிகை கஸ்தூரி, தன் பங்கிற்கு ஒரு டுவிட்டர் பதிவை போட்டார். அது, லியோனியை அவர் புகழ்ந்து பேசுகிறாரா? அல்லது கலாய்க்கிறாரா? என்பது புரியாத அளவிற்கு இருக்கிறது.அவர் தனது பதிவில், “தமிழக பாடநூல் நிறுவன தலைவராக ஐ.லியோனி நியமனம். சபாஷ். இதை விட ஒரு அருமையான தேர்வு இருக்க முடியுமா? இனி திமுக வரலாறு தொடர்பான பள்ளிப் பாடங்களை நாம் எதிர்பார்க்கலாம், ஃபிகர்ஸ் போன்ற வார்த்தை கையாடல்களும் பாட புத்தகங்களில் இடம் பெறலாம்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் கூறும்போது, “லியோனி தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது, பொருத்தமற்ற ஒன்று. அவர் நடுநிலையாக நடந்து கொள்வாரா? என்பது சந்தேகம்தான். பெண்களைப் பற்றிய தவறான சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு இருப்பவர்களால் எப்படி பாடநூல்களின் தரத்தை மேம்படுத்த முடியும்? மேலும் தான், சார்ந்த கட்சியின் கொள்கைகளையும், தனது சொந்த விருப்பு, வெறுப்புகளையும் பாடநூல்களில் அவர் சேர்ப்பதற்கும் இடமிருக்கிறது. தனியார் தொலைக்காட்சிகளிலோ அல்லது பட்டிமன்ற மேடைகளிலோ எப்படி வேண்டுமானாலும் அவர் பேசி விட்டுப் போகட்டும். அதை கேட்பவர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள்.

மேலும் அது,பொது இடமாகவும் இருக்காது. தவிர கேட்பவர்களின் தனிப்பட்ட உரிமை, அது. அல்லது அவர் இப்படித்தான் பெண்களை நக்கலடித்து பேசுவார் என்பதை தெரிந்தே பார்ப்பவர்களாக கூட இருக்கலாம். ஆனால் பொது இடங்களில், அரசியல் மேடைகளில் அப்படி பேசுவது தவறு என்பது அவருக்கு புரியவில்லை. அதை அவர் உணர்ந்தது போலவும் தெரியவில்லை. அவர் பொது மக்களிடையே தேர்தல் பிரச்சாரம் செய்யும் போதுதான் பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக புகார் எழுந்தது. அது அன்றே ஊடகங்கள் மூலம் உலகமெங்கும் பரவிவிட்டது. எனவே அவருக்கு இந்த பதவி கொடுத்திருப்பதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும்” என்று கேட்டுக்கொண்டனர்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த லியோனி, “2022-ம் கல்வி ஆண்டு முதல் தமிழக அரசின் பள்ளி பாடப்புத்தகங்களில் மத்திய அரசை என்றிருப்பது ஒன்றிய அரசு என மாற்றப்படும்” என்று தெரிவித்தார். மேலும் தேர்தல் நேரத்தில், தான் பேசியது, ஏற்கனவே தொலைக்காட்சிகளில் நகைச்சுவையாக கூறியதுதான் என்றும் இதைப்போய் பெரிதுபடுத்தி விட்டார்களே, என ஏராளமானோர் தன்னிடம் கவலை தெரிவித்ததாகவும் லியோனி குறிப்பிட்டார்.

Views: - 173

1

0