ஏழை, பாழைகள் தாங்க மாட்டங்க… டெல்லியை முன்மாதிரியா எடுத்துக்கோங்க… தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்..!!

Author: Babu Lakshmanan
27 April 2022, 12:18 pm
Quick Share

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று பாதிப்பு 3 ஆயிரத்தை நெருங்கி விட்டது. எனவே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்து மாநிலங்களும் தீவிரம் காட்டி வருகின்றன. அதேவேளையில், கொரோனா தடுப்பூசி செலுத்துவதிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, இரு டோஸ்களை செலுத்தியவர்களுக்கு தற்போது பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.375 என்ற கட்டணத்தில் இந்தத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்த நிலையில், ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களைப் போன்று தமிழகத்திலும் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக தமிழக அரசு வழங்க முன்வர வேண்டும் என்றும் பாமக இளைஞரணி தலைவரும், எம்பியுமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஹரியானாவில் 18 முதல் 59 வயது வரையிலான அனைவருக்கும் கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி மாநில அரசின் செலவில் இலவசமாக செலுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதே அறிவிப்பை தில்லி அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது!

தமிழ்நாட்டிலும் கொரோனா பரவலைத் தடுக்க 60 வயதுக்கு உட்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக செலுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கடந்த 11-ஆம் தேதி தமிழக அரசுக்கு யோசனை தெரிவித்திருந்தேன். அது உடனடியாக ஏற்கப்பட வேண்டும்

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் விகிதம் சற்று அதிகரித்து வருகிறது. அடுத்த சில மாதங்களில் நான்காவது அலை தொடங்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், அதைத் தடுக்க தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்!

60 வயதுக்குட்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செலுத்தப்படுகிறது;ரூ.375 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏழைகளால் இவ்வளவு கட்டணம் செலுத்துவது சாத்தியமல்ல. அதனால் அனைவருக்கும் தமிழக அரசு இலவசமாக தடுப்பூசி செலுத்த முன்வரவேண்டும்!, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 801

0

0